திருப்தி





ரமேஷும் உமாவும் குழந்தை லாவண்யா மீது உயிரையே வைத்திருந்தார்கள். எட்டு வருடமாகக் குழந்தைப் பேறின்றி தவித்தவர்களிடம், ‘உமா இனி கருத்தரிக்க வாய்ப்பே இல்லை’ என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அதன் பிறகே ‘ஜஸ்ட் பார்ன்’ குழந்தையாக லாவண்யாவை தத்தெடுத்திருந்தனர். உறவுகள், நண்பர்களுக்கு இந்த விஷயம் தெரிந்து, பிற்காலத்தில் லாவண்யாவுக்கு சொல்லிவிடக்கூடும் என பயந்து, இரண்டு ஆண்டுகள் மும்பைக்கு மாற்றலாகிப் போய், குழந்தையோடு திரும்பவும் இங்கு வந்தார்கள். 

லாவண்யாவுக்கு இப்போது 6 வயதாகிறது. பத்து மாதம் சுமக்கவில்லை என்றாலும் ரமேஷுக்கும் உமாவுக்கும் அவளே இதயத் துடிப்பாகிப் போனாள். லாவண்யா இல்லாத ஒரு நிமிஷத்தை அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடிந்ததில்லை.

வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழத்தான் செய்கின்றன.
‘‘என்னங்க, இப்ப நமக்கு இன்னொரு குழந்தை தேவையா?’’ - ரமேஷின் முகத்தோடு முகம் பதித்துக் கேட்டாள் உமா. வியப்போடு அவளைப் பார்த்தான் ரமேஷ்.

‘‘ஆமாங்க... நான் கர்ப்பமா இருக்கறதை டாக்டர் உறுதிப்படுத்திட்டாங்க. எனக்கும் குழந்தை பிறக்கும். இந்த திருப்தி ஒண்ணே போதும். ஆனா, நமக்கு இந்தக் குழந்தை வேண்டாங்க. இந்தக் குழந்தை பிறந்துட்டா, ‘நம்ம குழந்தை’ன்னு அது மேலதான் ஆசையும் பாசமும் வைக்கத் தோணும். லாவண்யாவை ஒதுக்கிடுவோமோன்னு பயமாயிருக்குங்க. நமக்கு லாவண்யா மட்டும் போதுங்க’’ - உமாவின் குரலில் உறுதி தொனித்தது.