சந்த மாமா... சிரிப்பு மாமா!





‘‘தினசரி நாம் சந்திக்கிற மனிதர்கள்தான் இந்தக் கதையின் நாயகர்கள். ‘சந்தமாமா’ வாழ்க்கையை முன்னாடி நிற்க வச்சு பார்க்கிற படம். வாழ்க்கையின் எல்லா சிக்கல்களிலும் சிக்கித் தவிக்கிற மனுஷன் இதை ரசிப்பான். எழுதவே தெரியாத ஒருவன் எழுத்தாளனாக நினைக்கிறான். அதனால ஏற்படுற ஒரு சின்ன ட்விஸ்ட்தான் படம். வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்க வேண்டிய அடிகளை கவனமாக செதுக்கும் ‘சந்தமாமா’!’’ - தெளிவாகப் பேசுகிறார் கருணாஸ். தமிழ் சினிமாவின் விரும்பப்படுகிற லொடுக்கு பாண்டி!

‘‘நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்குமா?’’
‘‘என்னங்க... அதுதான் நம்ம அடையாளம். நல்ல மருந்தா இருந்தாலும், கசப்பு நம்ம தொண்டைக்குள்ளே இறங்காது. அதையே இனிப்பு தடவிக் கொடுத்தா ஏத்துக்குவோம். அது மாதிரி கதை. இத்தனைக்கும் டைரக்டர் ராதாகிருஷ்ணனுக்கு முதல் படம். சொன்னா யாராலும் நம்ப முடியாது. பெரிய இமேஜ் எதையும் கையில் வச்சிட்டு இருக்கிற ஆட்கள் நடிக்கத் தயங்குகிற படம். நாமதான் கட்டுப்பாடில்லாத பறவையாச்சே, அதனால் சிறகடிச்சிருக்கேன். ரொம்ப தன்மையான படம் என்பதால் வெற்றியில் எனக்கு நம்பிக்கை இருக்கு. மத்தபடி மகாஜனங்கள்தான் படத்திற்கான நல்ல தீர்ப்பைத் தரணும்.’’

‘‘புது ஹீரோயின் ஸ்வேதா பாசு எப்படியிருக்காங்க?’’
‘‘தமிழுக்குத்தான் புதுசு. மலையாளத்துல தெரிஞ்ச முகம்தான். படத்துல என் குடும்பத் தலைவிக்கு ஏற்ற அருமையான தேர்வு. வரும்போது ஒரு வார்த்தை தமிழ் தெரியாது; ஷூட்டிங் முடியும்போது தெரியாத தமிழ் வார்த்தையே கிடையாது. துடைச்சு வச்ச குத்து விளக்கு மாதிரி முகம் இருப்பதால், படத்தின் கதையோட்டத்திற்கு அருமையா பொருந்தி வந்தாங்க. ஸ்வேதா, படத்திற்கு ரொம்ப ப்ளஸ்.’’

‘‘வைரமுத்து, ஸ்ரீகாந்த் தேவான்னு காம்பினேஷன் புதுசா இருக்கே?’’
‘‘கதையின் அம்சம் அப்படி. கதாபாத்திரத்தின் மனநிலை அருமையான வார்த்தைகளில் வரணும். அதுக்கு ரொம்ப சரியான ஒரு கவிஞர் வேணும். அதுக்கு வைரமுத்து அண்ணனை விட்டால், வேறு யார்? அவரும், ‘பரீட்சை வைக்கிறீங்களே’ன்னுட்டு அவ்வளவு பதவிசாக வார்த்தைகளைப் போட்டுக் கொடுத்தார். சும்மாவா சொல்றாங்க கவிப்பேரரசுன்னு! ஸ்ரீகாந்த் தேவா இதில் எடுத்திருப்பது புது அவதாரம்.’’

‘‘எப்படி ‘சந்தமாமா’வை ரசிக்கணும்ங்கிறீங்க?’’
‘‘நாம ரொம்ப நாளாக சிரிக்க மறந்திருக்கோம். சிரிக்க வைக்கிறது பெரிய வேலை. சார்லி சாப்ளினில் ஆரம்பிச்சு, காலம்காலமா நகைச்சுவையாளர்களுக்கு மரியாதை தருகிற இடம் இது. சந்திரபாபுக்கு இருக்கிற இடம் எல்லாம் ரொம்ப அறிவார்த்தமானது. அப்படி ஒரு காமெடிக்கு, வாழ்க்கையோட இணைஞ்சு முயற்சி பண்ணியிருக்கேன். பார்க்கலாம்.’’
- நா.கதிர்வேலன்