ஆஸ்கர் விருது அங்கே... இசை பதிவு இங்கே!





இந்த வருடம் போட்டியிட்ட படங்களில் அதிகபட்சமாக நான்கு ஆஸ்கர் விருதுகளை பைக்குள் போட்டிருக்கிறது ‘லைஃப் ஆஃப் பை’ படம். சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட் போன்றவற்றோடு சிறந்த இசைக்கான விருதும் அதில் அடங்கும். இதில் நமக்கென்ன என்கிறீர்களா? ‘‘அந்த இசை பதிவு செய்யப்பட்டதே சென்னையில் இருக்கும் எங்கள் ஸ்டுடியோவில்தான்’’ எனப் பெருமிதப்படுகிறார் ‘ரீசவுண்ட் இண்டியா’ ரெக்கார்டிங் ஸ்டுடியோவின் உரிமையாளர் சாய் ஷ்ரவணம். அந்த ரெக்கார்டிங்கே ஒரு தொழில்நுட்பப் புரட்சி என்கிறார்கள் இசை வட்டாரத்தில்!
‘தமிழகத்தின் பிரபல கர்நாடக இசைப் பாடகர்களின் ஆஸ்தான இசை ரெக்கார்டிங் ஸ்டுடியோ இது. பாலமுரளிகிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, அருணா சாய்ராம், சுதா ரகுநாதன் போன்றவர்களின் கச்சேரிகளை நான்தான் பலகாலமாக ரெக்கார்டிங் செய்து கொடுக்கிறேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் பாடல் பாடியிருக்கும் பாம்பே ஜெயஸ்ரீதான் எங்கள் ஸ்டூடியோ பற்றி அந்த ஹாலிவுட் படக் கம்பெனிக்குச் சொல்லியிருக்கிறார்.

முதலில் ஈமெயில் மூலம்தான் தயாரிப்பாளர்களுக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. பாட்டு மற்றும் பின்னணி இசையை என்னிடம் பதிவு செய்துகொள்ள அவர்கள் ஆர்வம் தெரிவித்தார்கள். ‘இசையமைப்பாளர் எங்கே?’ என்றேன். ‘எல்லாம் அமெரிக்காவில் இருந்தே செய்யலாம். டெக்னாலஜியால் எல்லாம் சாத்தியம்’ என்றார்கள். அதன்படி, இயக்குனரும், இசையமைப்பாளரும் அமெரிக்காவிலேயே உட்கார்ந்திருக்க, இங்கே வாத்தியக்காரர்களுக்கும், பாடகர்களுக்கும் இணையம் வழியாக கமாண்ட் கேட்டுக் கொண்டே இந்த ஒலிப்பதிவை சிறப்பாக முடித்துக்கொண்டார்கள். இதுதான் இந்தப் படத்தின் ஆகப்பெரும் சாதனை. இதற்கு உதவிய சாஃப்ட்வேரின் பெயர் சோர்ஸ் கனெக்ட்’’ என்கிற சாய் ஷ்ரவணம், ‘சவுண்ட் ஸ்டூடியோக்கள் விஷயத்தில் சென்னை ரொம்பவும் முன்னேறிவிட்டது’ என்கிறார்.



‘‘இங்கே நிறைய சவுண்டு ஸ்டூடியோக்கள் வந்துவிட்டன. ஆனால், அவர்கள் பெரும்பாலும் சவுண்ட் எஞ்சினியரிங் அல்லது சவுண்ட் டெக்னாலஜி மட்டும் படித்துவிட்டு ஸ்டூடியோ நடத்துகிறார்கள். உலகத் தரம் பெற வேண்டுமானால், ஒரு சவுண்ட் எஞ்சினியருக்கு இசை ஞானமும் இருக்க வேண்டும். நான் தபேலா வாசிப்பேன். இசைக் கோர்ப்புகளும் செய்வேன். முப்பதுக்கும் மேற்பட்ட விளம்பரங்கள், ஆல்பங்கள், பாடல்கள், டாகுமென்டரிகளுக்கு இசையும் அமைத்திருக்கிறேன். அதனால்தான் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். சரியான சங்கீத ஞானமும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து சென்னையில் வளர்ந்தால், ‘பாடல் பதிவுக்காக லண்டன் போனோம்’ என்று வருங்காலத்தில் எந்தப் படக்குழுவும் சொல்லாது’’ என்கிறார் உறுதியாக.
- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்