சுட்டி கிருஷ்ணா யாரு?





புல்லாங்குழல், மயிலிறகு கிரீடம், வட இந்திய சேலைக்கட்டு சகிதம் ராதை, கிருஷ்ணர் வேடம் தரித்துக் குவிந்திருந்த வாண்டுகளால் அந்த இடமே ‘கோகுல’மாகியிருந்தது. ‘‘கிருஷ்ண ஜெயந்திக்கு இன்னும் நாள் இருக்கே’’ என்று சந்தேகத்துடனே எட்டிப் பார்த்தால், ‘இது எங்க ஏரியாதான் உள்ள வாங்க’ என வரவேற்றது சுட்டி டி.வி டீம். கோகுலமாகியிருந்த அந்த இடம் சென்னை அடையாறு குமார ராணி மீனா முத்தையா கல்லூரி வளாகம். தமிழ் பேசும் மழலைகளின் செல்ல சேனலான சுட்டி டி.வியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘லிட்டில் கிருஷ்ணா’வில் குரல் கொடுப்பதற்காகவே குழுமியிருந்தனர் குட்டீஸ்.

‘‘குழந்தைகளைக் கவரும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை நேர்த்தியா தர்றதாலதான் அவங்க ‘சுட்டி’யோட ஒட்டிக்கிறாங்க. இந்த ‘லிட்டில் கிருஷ்ணா’வும் அவங்களுக்கு பெரிய சந்தோஷத்தைத் தரும். ஆங்கிலத்துல இருந்து தமிழுக்கு மாத்தறப்ப, கேரக்டர்களுக்கு ஏத்த குரல் வேணும்னுதான் இந்தத் தேடல். கிருஷ்ணன், ராதை உள்ளிட்ட ஏழெட்டு கேரக்டர்களுக்கு, இந்தக் குழந்தைகள்ல இருந்துதான் யாரோ வாய்ஸ் தரப் போறாங்க’’ என்கிறார், கவிதா ஜாபின். (கிளஸ்டர் ஹெட், கிட்ஸ் சேனல்ஸ், சன் குரூப்).

பாடல், டயலாக், மிமிக்ரி என என்ன முடியுமோ அதை வாங்க ‘வாய்ஸு’ பசங்களிடம் மைக் நீட்டி மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர் சேனலின் வீ.ஜே.க்கள்.
‘‘காலையில எழுந்ததுமே ‘நான் இன்னிக்கு வாய்ஸ் டெஸ்டுக்குப் போறேனாக்கும்’னு அக்கம்பக்கத்துல சொல்லிட்டு, என் பொண்ணு எனக்கு முன்னே கிளம்பிட்டா. இதை வெறுமனே ‘வாய்ஸ் டெஸ்ட்’னு மட்டும் சொல்லிட முடியாது. திறமைகளை வெளிப்படுத்த மேடை, கேம்ஸ், தியேட்டர்னு பொழுதுபோக்குக்கும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. கோகுலம் எஃபெக்டுக்காக ஒரு பசு மாட்டைக் கூடக் கட்டி வச்சிருக்காங்கன்னா பாருங்களேன். எம் பொண்ணு இதுல செலக்ட் ஆகறாளாங்கிறது தெரியல. ஆனாலும் ரெண்டு நாளும் பசங்களை பிக்னிக் கூட்டிப் போன மாதிரி ஒரு ஃபீலிங்’’ என்கிறார் தாம்பரத்திலிருந்து குடும்பத்தோடு வந்திருந்த சுகன்யா.

வளாகத்தில் கால் வைத்ததும், பெற்றோர் கையை உதறிவிட்டு என்ஜாய் பண்ணக் கிளம்பிய மழலைகளை நிறையக் காண முடிந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஒரே ‘கிருஷ்ண’மயமாக இருந்ததால், தங்கள் பிள்ளைகளையே அடையாளம் காண முடியாமல் பெற்றவர்கள் திணறித்தான் போனார்கள். கேமராவைத் தூக்கியதும், ‘‘கொஞ்சம் இருங்க’’ என்றபடி பசு மாட்டைத் தேடிப் பிடித்து பக்கத்தில் நின்று போஸ் கொடுக்கிறார்கள் குழந்தைகள்.
மழலைகளின் மனசே ஒரு தினுசு!
- அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன்