சம்பளம்





‘‘யம்மா... இந்த மாசம் தொட்டு எனக்கு முந்நூறு ரூபா சம்பளம் ஜாஸ்தி பண்ணும்மா. விக்கிற விலைவாசில நீ குடுக்குற சம்பளம் கட்டுப்படியாவல...’’ - பாத்திரம் கழுவியபடியே கேட்டாள் சிலம்பாயி.
நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ஏகாம்பரமும், கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருந்த அவர் மனைவி மாலதியும் ஒரு சேர அவளை நிமிர்ந்து பார்த்தனர்.
மாலதி என்ன சொல்வாள் என ஏகாம்பரம் அவள் முகத்தைப் பார்த்தார். ‘‘நீ சொல்றதும் சரிதான் சிலம்பு. விக்கிற விலையில எதுவுமே கட்டுப்படியாகலைதான். சிக்கனமா இருக்கறதுதான் நல்லதுன்னு எனக்கும் தோணுது. அதனால வீட்டு வேலை எல்லாத்தையும் நானே பார்த்துக்கறேன். அடுத்த மாசத்துல இருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்’’ - மாலதியின் பேச்சு அதிரடியாகவே இருந்தது.
‘‘ஐயோ... புரியுதும்மா! உனக்கும் சிரமம்தான்... ஏதோ உன்னால முடிஞ்சதைக் கொடு. வேலைய விட்டு நிறுத்திடாதே’’ என்று பரிதாபமாகச் சொன்னாள் சிலம்பு.
ஏகாம்பரம் சிரித்துக்கொண்டார். 

நேற்று சம்பள உயர்வு கேட்டு ஆபீஸில் எம்.டியுடன் போராடிப் பார்த்துவிட்டு, ‘‘பரவாயில்லை... சம்பளம் குறைவுன்னா வேலைய விட்டு நின்னுக்கங்க’’ என்று அவர் சொன்னதும், போராட்ட குணத்தை கைவிட்டு, சிலம்பு போலவே தானும் ‘‘வேலைய விட்டு நிறுத்திடாதீங்க சார்’’ என கெஞ்சியது அவர் நினைவுக்கு வந்தது.