வேண்டுதல்





உலகம்மன் கோயில் கருவறை எதிரில் நின்று கும்பிட்டுக் கொண்டிருந்தேன். என் பின்னால் நின்று கும்பிட்டவருக்கு கணீர் குரல்.

‘‘அம்மா தாயே... அகிலாண்டேஸ்வரி! நாட்டுல நல்ல மழை பெய்யணும்... நாடு செழிக்கணும், விலைவாசி எல்லாம் குறையணும், எல்லா மக்களும் நல்ல வசதி வாய்ப்போடு வாழணும் தாயே!’’ என்று வணங்கினார்.

அவரது வேண்டுதல் என்னை சிலிர்க்க வைத்தது. பிரகார வலத்தின்போது அவரைப் பிடித்தேன்.
‘‘சார்... உங்க குணம் தங்கம் சார்! ஆளாளுக்கு தானும் தன் குடும்பமும் நல்லா இருக்கணும்னு சாமிகிட்ட அப்ளிகேஷன் வைக்கிறப்போ, நீங்க ஊர் உலகமே நல்லா இருக்கணும்னு வேண்டுறீங்களே... யூ ஆர் கிரேட்!’’ என்றேன்.

அவர் புன்னகைத்தார். ‘‘சார், நான் இந்த ஊர் தாலுகா ஆபீஸ்ல வேலை பார்க்கிறேன். இப்பல்லாம் முன்னே மாதிரி மாமூல் கிடைக்கிறதில்ல. ஐந்நூறு, ஆயிரம்னு கிடைச்ச இடத்திலே, இப்ப வெறும் ஐம்பது, நூறு கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு! மழை பெஞ்சு, மண் செழிச்சு, மக்கள் கையில தாராளமா துட்டு புழங்கினாத்தானே, எங்களை மாதிரி ஆளுங்களுக்கு தாராளமா மாமூல் கிடைக்கும்?’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர்.
மனதுக்குள் ஒரு பல்பு ஃப்யூஸ் போக, பேந்தப் பேந்த விழித்தேன் நான்.