மரியாதை





தன் முதலாளியை நினைத்து ஏமாற்றமாக இருந்தது குமாருக்கு. போட்டிக்கு பல சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்ட ஏரியாவில் அவர்களுடையது ஒரு பலசரக்குக் கடை. கல்லாவில் உட்கார்ந்து கடைக்கு வருபவர்களிடம் சிரித்த முகத்துடன் பேசி மரியாதையாக நடத்துவார் முதலாளி. அப்படிப்பட்டவர் தன் மகளுக்குத் திருமணம் நடத்தும் இந்த சமயத்தில், வாடிக்கையாளர்களில் ஒருவருக்குக் கூட பத்திரிகை வைக்கவில்லை. அவர் தரும் மரியாதை வெற்று நடிப்புதான் என்பதை நினைக்கும்போதே அவனுக்கு வெறுப்பாக வந்தது.

‘‘குமாரு... இந்த பார்சல்ல நிறைய எவர்சில்வர் தட்டு இருக்கு. அடிபடாம பத்திரமா எடுத்து வை! கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கஸ்டமர்கள் எல்லாருக்கும் மறக்காம கொடுக்கணும்’’ என்றார் முதலாளி.

‘என்ன இவர்... யாருக்கும் பத்திரிகை கொடுக்காமல் அன்பளிப்பு மட்டும் கொடுக்கிறாரே’ என்று குழப்பமாகப் பார்த்தான் குமார்.

‘‘அது ஒண்ணுமில்லடா... அவசரத்தில நாம யாருக்காவது பத்திரிகை கொடுக்காம விட்டுப் போகலாம். அதனால அவங்க தப்பா நினைச்சுக்கிட்டு கடைக்கு வராம போகலாம். பத்திரிகை கொடுத்தும் கல்யாணத்துக்கு வர முடியாம போனவங்க அதுக்கு அப்புறம் நம் முகத்தைப் பார்க்க வருத்தப்பட்டு பக்கத்துக் கடைக்குப் போயிடலாம். இதெல்லாம் எதுக்கு? ‘கல்யாணம் ஊர்ல நடந்தது... இந்தாங்க அன்பளிப்பு’ன்னு கொடுத்துட்டா அவங்களுக்கும் இழப்பில்ல... நமக்கும் இழப்பில்ல’’ என்றார் முதலாளி!
நம்ம முதலாளியை அடிச்சுக்க ஆளில்லை என்று முடிவெடுத்தான் குமார்.