வேலைக்குப் போகாதீர்கள்! உங்களைத் தேடி வேலை வரும்





தோல்வி அடையும்போது உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வேலையை இன்னும் அர்ப்பணிப்போடு செய்ய அது தூண்டுதலாக இருக்கும்.
- நடாலி குல்பிஸ்

உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் ஒரு கணம் நன்றாகப் பாருங்கள். இப்போதைக்கு பார்த்தவற்றை மறந்துவிட்டு வேறு சில விஷயங்களைப் பார்க்கலாம்.  
நாம் வேலைக்கு வருவது நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் வாழ வைப்பதற்காக... அதற்கு அடிப்படையான ஊதியத்தைப் பெறுவதற்காக. சரி, ஊதியம் வழங்கப்பட்டு விட்டது. அதில் எவ்வளவு சேமித்திருக்கிறீர்கள்? இதற்கு விடை காணும் முன், ‘‘எங்கே... இவனுக தர்ற சம்பளம் அன்றாட செலவுக்கே பத்த மாட்டேங்குது. இப்ப இருக்கற விலைவாசியில எப்படிங்க சேமிக்கறது?’’ என்ற அங்கலாய்ப்புகளுக்கு விடை காணலாம்.

இந்தக் கேள்விகளில் நியாயம் இருக்கலாம். ஆனால் சேமிப்பு என்பது வருமானம் சார்ந்த விஷயம் அல்ல... முற்றிலும் மனம் சார்ந்த விஷயம் என்பதும் உண்மையே.  
எந்தக் காலத்தில் சேமிப்பதற்கென்று மனிதன் தனியாக சம்பாதித்தான்? எந்தக் காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது? எல்லா காலங்களிலும் எலிகளும் இருக்கின்றன... பூனைகளும் இருக்கின்றன. வலைகளின் வீச்சையும் மீறி மீன்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எந்தக் காலத்திலும் சேமிப்பவர்கள் உண்டியலை நிரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். காரணங்களைச் சொல்பவர்கள் புதிது புதிதாக காரணங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு வியாபாரிக்கோ, தொழிலதிபருக்கோ வர்த்தகத்தை விரிவாக்கி வருமானத்தை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சம்பளக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தையே மாதந்தோறும் பெற வேண்டியிருக்கிறது. திடீர் ஊதிய உயர்வோ, எதிர்பாராத வரவோ வர வாய்ப்பில்லை. எனவே, சொல்லப் போனால் நீங்கள்தான் அவர்களைவிட கண்ணும் கருத்துமாக சேமிக்க வேண்டியுள்ளது. 

வருமானம்தான் கட்டுக்குள் அடங்குகிற ஒன்றே தவிர, செலவு என்பது கட்டுக்குள் அடங்காததாகவும், இரக்கமற்றதாகவுமே எல்லோருக்கும் இருக்கிறது. எதிர்பாராத ஒரு அசம்பாவிதம், ஒரு விபத்து, ஒரு நோய்... ஏழை, பணக்காரன் பார்த்து வருவதல்ல. எதிர்பார்க்கிற செலவுகளான குழந்தைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல்... போன்றவற்றை ஊதியக்காரர்களுக்கு என்று யாரும் பிரத்தியேகமாக நிர்ணயிக்கப் போவதில்லை.

ஆக, எப்படிப் பார்த்தாலும் நீங்கள் சேமித்தாக வேண்டும். சேமிப்பு என்றவுடன் தங்கம், வெள்ளி, நிலம், பங்குச் சந்தை... போன்றவற்றில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டுவது பற்றி சொல்ல வரவில்லை. அவற்றில் எல்லாம் முதலீடு செய்வதென்றாலும் அதற்கு முதலில் நீங்கள் சேமித்தாக வேண்டுமே! அந்த அடிப்படையான விஷயம்... சேமிக்கிற மனோபாவம்.

அதற்கு முன்னால் நீங்கள் சிக்கனத்திற்கும், கஞ்சத்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டை அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒரே ஆடை அணிந்து ஒரே முகத்துடன் காணப்படும். சில நேரம் ஒன்றை அழைத்தால், மற்றொன்று வந்து நிற்கும். சிக்கனத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாவிட்டால், உங்களால் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாது. கருமித்தனத்துடன் நீங்கள் கை குலுக்கிக்கொண்டால், நீங்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்காது. நினைவில் கொள்ளுங்கள்... நீங்கள் இந்த உலகிற்கு வந்திருப்பது உண்டியலை நிரப்பிக் கொண்டே இருப்பதற்கு அல்ல. சிக்கனவாதிகள் என்றால், ‘தனது பர்ஸை எப்போது திறக்க வேண்டும்’ என்பதை அறிந்தவர் என்று பொருள். கருமி என்றால், ‘தனது பணப்பெட்டியின் சாவியைத் திட்டமிட்டே தொலைத்தவர்’ என்றும் அதன் மூலம் வாழ்வையே தொலைக்கப் போகிறவர் என்றும் பொருள்.

நீங்கள் ஒரு கடைக்குச் செல்கிறீர்கள். ஒரு பொருளை வாங்க வேண்டுமா என்று தோன்றினால் அதைக் கண்டிப்பாக வாங்காதீர்கள். இப்படி ஒரு கேள்வி எழுவதே, அந்தப் பொருள் இல்லாமலும் உங்களால் இருக்க முடியும் என்பதையே காட்டுகிறது. ஒரு அத்தியாவசியமான மருந்தை வாங்கும்போது இந்தக் கேள்வி உங்களிடம் வரப்போவதில்லை. ஆனால், இரண்டு கிலோ ஸ்வீட் வாங்கினால் ஒரு ஷாம்பு பாக்கெட் இலவசம் என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் உங்களுக்கு இந்த சந்தேகம் வரும். வாங்கவா, வேண்டாமா?

எனவே, தேவையில்லாத பொருள்... அது எவ்வளவு மலிவாக இருந்தாலும் வாங்காதீர்கள். மலிவு என்பதற்காக எத்தனை பொருட்களை வாங்கிக் குவித்துக்கொண்டே இருப்பீர்கள்? உங்கள் வீட்டை பொருட்களின் குடோனாக மாற்றுவது வெகு சுலபம். வீடாக வைத்திருப்பதுதான் கடினம்!

தேவையற்ற பொருட்களை வாங்குவதைக் குறைத்தாலேயே உங்களால் நிச்சயம் சேமித்து விட முடியும். தேவையற்ற பொருட்களை வாங்குவதால், தேவையான நேரத்தில் தேவைப்படும் பொருளை அடைய முடியாமல் திணறுவீர்கள். உங்கள் கையில் இருந்து ஒரு ரூபாயை செலவு செய்யும் முன், அந்த ஒரு ரூபாயை யாரும் வலிய வந்து உங்களிடம் தரவில்லை என்பதை உணருங்கள். பல கஷ்டங்கள், அவமானங்கள், சகிப்புத்தன்மைகள், அலைச்சல்கள், உளைச்சல்களுக்குப் பிறகுதான் இந்த ஒரு ரூபாயை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். பணம் என்பது உங்களின் சேமிக்கப்பட்ட உழைப்பு. உங்கள் வலிமையின் குறியீடு. அதை சரியாகக் கையாளத் தெரிந்தால் நீங்கள் வலிமையானவராக இருப்பீர்கள்.  

‘ஒரு ரூபாய்தானே, செலவு செய்தால் என்ன குடியா முழுகி விடப் போகிறது’ என்பவர்களுக்கு ஒரு தகவல். ஒரு மாதத்தில் நீங்கள் செய்யும் பெரிய செலவுகள் நான்கைந்துதான் தேறும். அது உங்களுக்குத் தெரிந்து, முழு விழிப்புடன் நிகழும். பொதுவாக அவை தவிர்க்க முடியாதவையாகவும், நியாயமானவையாகவும் இருக்கும். ஆனால், சிறு செலவுகள் உங்கள் கண்ணுக்கும் தெரியாது, அறிவுக்கும் தெரியாது. ஆராய்ந்து பார்த்தால் அவை பெரும்பாலும் தவிர்க்கக் கூடியவையாகவே இருக்கும். அவைதான் உங்கள் நிதி நிலைமையை சீர்குலைக்கும்.

பணம் என்பது உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் காரணிகளில் ஒன்று. ஒரு ஓட்டலில் இட்லி பத்து ரூபாய் என்றால், சரியாக பத்து ரூபாயுடன் சென்று ஆர்டர் கொடுக்கும்போது ஏற்படுகிற உங்கள் மனநிலை, நடத்தை... எப்படி இருக்கும்? அதே இட்லியை கையில் ஆயிரம் ரூபாயுடன் சென்று ஆர்டர் கொடுக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களிடம் பணம் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களை உங்கள் விருப்பப்படி செய்யும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள். இல்லை என்றால் சூழ்நிலைக் கைதியாகவும், அந்த விஷயங்களை உங்களுக்காக செய்பவரின் அடிமையாகவும் இருப்பீர்கள். ‘பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை’ என்பது ஆழ்ந்து அனுபவித்து எழுதப்பட்ட வரிகள்.  

தேவையின்றி செலவு செய்வது ஒரு நோய். நீங்கள் இதற்கு பலியாகிவிட்டால், பொருளாதாரத் தன்னிறைவை இழப்பீர்கள். மெல்ல மெல்ல கடனாளி ஆவீர்கள். இது உங்கள் பணியிடத்திலும் எதிரொலிக்கும். கடன் பட்ட நெஞ்சமுடன்... அல்லது, குறைந்தபட்சம் பற்றாக்குறை மனதுடன் உங்களால் பணியில் கவனம் செலுத்த முடியாது. ‘கடன்பட்டார் நெஞ்சம் போல’ ராவணனே டென்ஷன் ஆகிறபோது நீங்கள் எம்மாத்திரம்?

பணரீதியாக தன்னிறைவு பெற்று பணிபுரிபவர்களைப் பார்த்து, உங்களுக்கே தெரியாமல் பொறாமை கொள்வீர்கள். ‘‘உனக்கென்ன, ஒரு கஷ்டமும் இல்லை...  ஜாலியா இருக்கற...’’ என்றெல்லாம் பொருமுவீர்கள். இதன் மூலம் பணியிடத்தில் உங்கள் நற்பண்புகளை இழப்பீர்கள்!

சரி, முதல் வரிகளுக்கு வருவோம். சம்பாதிப்பது பெரிய விஷயமே அல்ல. ஆனால், வருகிற வருமானத்திலிருந்து சேமிக்கிற வித்தையை ஒரு சிலரே அறிவர். காரணம், சேமிப்பது வெகு சிரமமானது. கடைகளில் நீங்கள் பார்க்கும் பொருட்கள் ஈர்ப்பைத் தர வல்லவை. இன்றைய நுகர்வுக் கலாசார விளம்பரங்கள், சூழ்நிலைகள் உங்களிடம் சில பொருட்கள் இல்லை என்றால் உங்களை ‘பைத்தியம்’ என்கின்றன. சில பொருட்கள் தேவையில்லை என்றால் ‘முட்டாள்’ என்கின்றன. அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிக் கிடக்கிறோம் நாம். பொருட்களை வாங்கிவிட்டு, பெருமை அடித்துக் கொண்டு, ‘எங்களாலயும் முடியும்டா...’ என்று பக்கத்து வீட்டாருக்கெல்லாம் சவால் விட்ட பிறகு, சீந்துவாரற்றுக் கிடக்கும் பொருட்கள் எத்தனை என்பதை நேர்மையுடன் யோசித்துப் பாருங்கள்.
(வேலை வரும்...)