இனம் A STORY FROM CEYLON





ரஜினியின் கதை இது...!

காமன்வெல்த் மாநாடு தொடர்பான கொதிப்புகளும் கோபங்களும் குமுறல்களுமாக தமிழ்ச் சமூகம் கொந்தளிப்பில் இருக்கும் தருணத்தில், ஈழப் பிரச்னை பற்றிய தனது ‘இனம்’ படம் பற்றி நம்மிடம் பேசினார் சந்தோஷ் சிவன். 

‘‘ஒரு நிலத்தின் வாழ்வையும், அதன் ஈரமிக்க பக்கங்களையும், அதன் பிரச்னைகளையும் சார்போடு பதிவு செய்ய வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களை உண்மையுடன் சொல்ல முயன்றிருக்கிறேன். தமிழ் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கண்ணீரில் வெடிக்கும் தேசமாக ஈழம் மாறிவிட்டது. அமைதியாக்கப்பட்டு விட்ட போராட்டத்தின்  முன் முடிவுகளையும், காரணங்களையும் நான் சொல்லவில்லை. ராணுவத்தையும் முன்நின்று நடத்திய இயக்கத்தையும் பற்றிய விமர்சனம் நேரடியாக இதில் கிடையாது. என்னுடைய ‘இனம்’, மத்தியில் அகப்பட்ட பெருவாரியான ஜனங்களின் கதையைப் பேசும். மனிதாபிமானத்தின் அருகிலிருந்து குரல் கொடுக்கிறேன். நான் எந்தப் பின்னணியும் அற்றவன். எனக்குத் தொழில் சினிமா’’ - யதார்த்தம் பேசுகிறார் ஒளிப்பதிவாளர், இயக்குநர் சந்தோஷ் சிவன். 11 தேசிய விருதுகளும் பல சர்வதேச விருதுகளும் பெற்ற கலைஞர்.



‘‘ ‘இனம்’ எப்படியிருக்கும்?’’
‘‘சொந்த நிலத்தில் இன்னும் பிடிப்போடு இருக்கும் ஈழ மக்களில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன் ஒரு டின்னருக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கே அறிமுகமானார் ஒரு அகதிப் பெண்மணி. எனக்கு இப்படி அவரைக் குறிப்பிடவே தயக்கமாக இருக்கிறது. எப்படியென்றாலும் தமிழகத்தின் கணக்குப்படியும், நிலைப்பாட்டின்படியும் அவர் ‘அகதி’தான். அவரின் கதை என்னை உலுக்கி எடுத்தது. பிறப்பில் நான் தமிழனாக உருவெடுக்காவிட்டாலும்... இந்தச் சோற்றையும், காற்றையும்தான் உண்டு சுவாசிக்கிறேன். எனது பொது வாழ்வின் மீதான அக்கறையை யாரும் புறம் தள்ளிவிட முடியாது. அங்கே படிந்திருக்கிற துயரமும் இப்போது நிலவும் கடும் ஏழ்மையும் எனக்குப் பிடிக்கவில்லை. அழுகையும், பரிதவிப்பும் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல அங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ஆச்சரியம். அவர்களின் துயரங்களுக்கு முன்பு, ‘நாமும் கஷ்டப்படுகிறோம்’ எனச் சொல்வது கூட தவறுதான்.’’



‘‘ஒளிப்பதிவு செய்வதெல்லாம் ‘துப்பாக்கி’ மாதிரி கமர்ஷியல் படங்கள். ஆனால், உங்களின் அக்கறை இது மாதிரி பிரச்னை சார்ந்த படங்களாக இருக்கிறது. ஏன்..?’’
‘‘இது மாதிரி என் அக்கறைகளைப் படமாக்கும்போது அதை இன்னொருத்தர் பணத்தில் செய்யக் கூடாது. ‘துப்பாக்கி’ மாதிரியான படங்கள் தொழிலாக, வியாபாரமாக இருக்கும்போது, அதில் புரட்சியில் ஈடுபடும் தியாகம் என்னிடம் இல்லை. ஆனால், ‘இனம்’ மாதிரியான படங்கள் தமிழ்ச் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை கேள்வி கேட்டுப் பெறுவது. இது ரஜினி என அழைக்கப்படுகிற 20 வயதுப் பெண்ணின் வாழ்க்கைக் கதை. அந்தக் கதையில் ராணுவத்தினரும், இயக்கமும் ஊடாடி வரலாம். என் பணத்தில், என் ஆர்வத்தில், என் வழிமுறையில் எடுக்கப்படுகிற படம்தான் இது. இந்த இரண்டு பெரும் பிரிவுகளுக்கு மத்தியில் அவதிப்படும் பொதுமக்களின் துயரங்களைச் சொல்லப் புகுந்தேன். ரஜினி என்ற அகதிப் பெண்ணின் துயர் வாழ்க்கைப் பதிவுதான். சமயங்களில் இதில் தீவிரம் இருக்கத்தான் செய்யும்... கொஞ்சம் ரத்தம் கசியத்தான் செய்யும்... நான் இந்தப் படத்தில் எந்தத் தப்பும் செய்யவில்லை. யாரோடும் வாதமும் செய்யவில்லை.’’
‘‘முற்றிலும் புதுமுகங்கள் போலிருக்கிறது..?’’



‘‘அப்படியேதான். ஆனாலும் சரிதா, கருணாஸ் இருக்கிறார்கள். மிகச் சரியான கேரக்டர்களில் அவர்கள் வருகிறார்கள். முக்கிய பாத்திரத்தில், போராளியாக சுனந்தா ராம் வருகிறார். எனக்கு எந்தச் சாயலும், நிர்ப்பந்தமும், கலரும் இல்லாததுதான் இந்தப் படம் எடுப்பதற்குரிய முதல் தகுதி என நினைக்கிறேன். நிறைய ஆய்வும், படிப்பும், அனுபவமும், புரிந்துணர்வும் கொண்டுதான் இந்தப் படத்தை எடுக்கிறேன். ‘இந்தப் படம் எதைச் சொல்ல வருகிறது, இந்தப் படத்தை எப்படிப் பார்க்க வேண்டும்’ என்று கேட்டால், ‘இது மனிதநேயம் பற்றியது’ என்றுதான் ஒற்றை வரியில் சொல்ல முடியும். மனிதநேயம் எது என்பதை எல்லா அத்துமீறல்களின் நடுவிலும் சொல்ல முயன்றிருக்கிறேன். அரசியல் ரீதியில் எது சரி... எது தவறு... என்று சொல்வது என் வேலையல்ல. நடப்பை, அறிந்த கதையை சொல்வதுதான் என் கடமை!’’



‘‘பிரச்னை உருவாகும் என்ற பயம் இல்லையா..?’’
‘‘இல்லை... உண்மையைச் சொல்லும்போது என் நியாயம் எல்லோருக்கும் புரியும். மற்றபடி இது ஆவணப்படம் இல்லை. இதில் நேரிடையான எந்த சாடலும் இல்லை. யாரையும் விரல் நீட்டிப் பேசவில்லை. ‘ரஜினி’யின் கதை இது. அவ்வளவுதான்!’’
- நா.கதிர்வேலன்