வாழைநாரில் டாலர்களைக் குவிக்கும் பாமர விவசாயி!





ஆந்திர பல்கலைக்கழகம். அரங்கத்தில் நிறைந்திருக்கிற கோட்-சூட் மனிதர்கள், ஒரு அறிவார்ந்த உரையைக் கேட்பதற்காக காத்திருக்கிறார்கள். மெல்ல மேடையேறுகிறார் முருகேசன். மடிப்புக் குலைந்த வேட்டி. கசங்கல் சட்டை. வெள்ளந்தியான கிராமத்து புன்னகை. ‘இவரா... இவரா பேசப் போகிறார்’ என்கிற திகைப்பு அத்தனை முகங்களிலும் தோன்றி மறைகிறது.

ஆனால், அடுத்த அரை மணி நேரம் முருகேசனின் உள்ளுணர்வைத் தொடும் பேச்சில் அத்தனை பேரும் உறைந்து போகிறார்கள். எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு மாடு மேய்க்கச் சென்ற ஒரு சிறுவன், அமெரிக்காவும் ஐரோப்பாவும் பாராட்டும் அளவுக்கு உயர்ந்த அந்த அனுபவக் கதையை விட ஒரு நல்ல பாடத்தை எந்தப் பாடப் புத்தகமும் அவர்களுக்குக் கற்றுத் தந்திருக்காது.
முருகேசன் அப்படி என்ன செய்தார்?

வாழைநாரைக் கொண்டு, பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 22 விதமான பொருட்களைத் தயாரிக்கிறார். பயன்படுத்தி ஒதுக்கிய பொருட்களைக் கொண்டு, அதற்கான இயந்திரங்களைத் தானே உருவாக்கினார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் இவரது தயாரிப்புகளை அள்ளிச் செல்கின்றன. விருதுகளால் நிறைந்து கிடக்கிறது இவரது வீடு. 



மதுரைக்கு அருகில் உள்ள மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். அப்பா, ‘போலீஸ்’ மாயாண்டித் தேவர். விவசாயம்தான் குடும்பத்துக்கு ஜீவாதாரம். கூடவே மாடுகளும் இருந்தன. மாயாண்டித் தேவர் கொஞ்சம் கூடுதலாக எருமை மாடுகள் வாங்கிய தருணத்தில் முருகேசனின் படிப்பு பறிபோனது.

‘‘15 வயசுலயே விவசாயப் பொறுப்பை முழுசா ஏத்துக்கிட்டேன். விவசாயத்துல புதுப்புது விஷயங்களைப் புகுத்தி பரிசோதனை பண்ணிப் பாக்கணும்ங்கிற ஆர்வம்... ஆனா, மத்தவங்கள்லாம் மரபு சார்ந்த சாகுபடி முறையை விட்டு நகரக்கூட தயாரா இல்லே. கதிர் அறுக்கிற மிஷின் அறிமுகமானப்போ, ‘விவசாயத்தையே அழிச்சிடும், ஊருக்குள்ளயே கொண்டு வரக்கூடாது’ன்னு தடை விதிச்சாங்க. எல்லாரையும் சமாதானப்படுத்தி மெஷினைக் கொண்டு வந்து என் வயல்லயே கதிர் அறுத்துக் காட்டுனேன். அதேபோல வழக்கமான ரகங்களை விட்டுட்டு புதிய புதிய ரகங்களைப் பயிரிட்டேன். அதனால வேளாண் அதிகாரிகளோட பரிச்சயமும் கிடைச்சுச்சு. விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகள் எங்கே நடந்தாலும் கிளம்பிடுவேன்.



ஒரு உழவர் சங்க விழாவில, ‘விவசாயிகள் எல்லாத்தையும் காசு பண்ணணும். கழிவுகளையும் கூட மதிப்புக் கூட்டி விற்கணும்’னு ஒரு பேராசிரியர் பேசினார். ‘கரும்புத்தோகையை ஊட்டமேத்தின தொழு உரமா மாத்தலாம், வைக்கோல் மூலமா காளான் உற்பத்தி செய்யலாம்’னும் சொன்னார். அந்த வார்த்தைகள் மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சிடுச்சு. நான் அப்போ ரெண்டரை ஏக்கர்ல வாழை போட்டிருந்தேன். வாழையில தார் வெட்டின பிறகு, மரத்தால உபயோகம் இல்லை. அதை அப்புறப்படுத்த தனியா செலவு செய்யணும். இந்தக் கழிவை வச்சு என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

வாழைத்தண்டு சிறுநீரகக் கோளாறுக்கு மருந்து. வாழைத்தண்டுல சாறு எடுத்து அதை பாட்டில்ல அடைச்சு விக்கமுடியுமான்னு பாத்தேன். சரியா வரல. ஒருநாள் சந்தைக்குப் போயிருந்தப்போ, பிளாஸ்டிக் வயர்ல செஞ்ச பேக், மேட், கயிறு, பை எல்லாம் வித்துக்கிட்டிருந்தாங்க. எல்லாத்திலயும் ரெண்டு ரெண்டு வாங்கியாந்து எப்படி முடைஞ்சிருக்காங்கன்னு பிரிச்சுப் பாத்தேன்.

வாழை நார் மென்மையானது. ஆனா நாலைஞ்சா சேத்து திரிச்சா அதைவிட உறுதியான பொருள் வேறில்லை. ஒரு மரத்துல 300 கிராம் நார் கிடைக்கும். ஆனா பூக்கட்டுறதுக்கு மட்டும்தான் அதைப் பயன்படுத்துறோம். மற்றபடி மக்கி மண்ணோட போயிடுது. அதை வச்சு ஏன் இந்த மாதிரி பொருட்களைச் செய்யக்கூடாதுன்னு தோணுச்சு. முதல்ல வாழை நாரை நாலஞ்சா சேத்து கயிறு திரிக்கணும். அதுக்குத் தகுந்த மெஷின் வேணும். விவசாய அதிகாரிகள்கிட்ட கேட்டேன். அவங்க ஐ.ஐ.டியில விசாரிக்கச் சொன்னாங்க. அங்கேயும் இல்லை. ஐதராபாத் இக்ரிசாட் ஆராய்ச்சிப் பண்ணையில விசாரிச்சேன். அங்கேயும் இல்லை. சரி, நாமளே தயார் பண்ணிடுவோம்ன்னு முடிவுக்கு வந்துட்டேன்.

ஒரு மோட்டார் சைக்கிள் வீல்ல ஒரு ஊக்கை பத்த வச்சேன். ஒரு பெல்ட்டை சேத்து மாட்டுனேன். வீலை சுத்தினா ஊக்கும் சுத்தும். ஒர்க் அவுட் ஆயிடுச்சு. ஆனா இதை விட அதிக திறன் தேவை. மோட்டார் வீலுக்குப் பதிலா சைக்கிள் வீல்ல 4 ஊக்குகளை மாட்டினேன். பெல்டுகளால எல்லா ஊக்குகளையும் இணைச்சேன். ஒருத்தர் சுத்தினா ஒரே நேரத்துல நாலு பேர் கயிறு திரிக்கலாம். முதற்கட்டமா, பை, டேபிள் மேட், பழக்கூடைன்னு அஞ்சு விதமான பொருட்கள் தலா 50 செஞ்சு கடைகள்ல வச்சேன். போணியாகல. ஆனா வேளாண்மை அதிகாரிகள் உற்சாகப்படுத்தினாங்க. அவங்க மூலமா ஐ.ஐ.டியில உள்ள ‘ரோப் இண்டியா’ அமைப்புல உள்ளவங்களை சந்திச்சு பொருட்களைக் கொடுத்தேன். ‘முதல்ல இதையெல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்புறோம்... அவங்க விரும்பினா தொடர்ந்து வாங்கிக்குறோம்’னு சொன்னாங்க.

அடுத்த 10 நாள்ல பெரிய ஆர்டர் வந்துச்சு... ‘லண்டனுக்கு கூடை 5000 பீஸ், பேக் 5000 பீஸ் வேணும். 20 நாளுக்குள்ள சப்ளை பண்ணணும்’னு சொன்னாங்க. ராத்திரி, பகலா வேலை செஞ்சு பொருட்களைக் கொடுத்தேன். அடுத்து பெங்களூர்ல உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில இருந்து வந்தாங்க. அவங்களும் நிறைய ஆர்டர் கொடுத்தாங்க. தொழிலை டெவலப் பண்ண முடிவு செஞ்சேன். பேங்க்ல லோன் வாங்கி பில்டிங் கட்டினேன். முதல்ல செஞ்ச மாதிரியே 50 மெஷினை நானே தயாரிச்சேன். எங்க ஊரைச் சேர்ந்த 50 பேரைத் தேர்வு செஞ்சு பயிற்சி கொடுத்தேன். நானும், சுய முயற்சியில புதுசு புதுசா விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இப்போ 22 வகையான பொருட்கள் தயாரிக்கிறோம். ஆர்டர்கள் வர்ற வேகத்துக்கு உற்பத்தி செய்ய முடியலே. திருப்பதியில லட்டு போட்டுக் கொடுக்கிறதுக்கு பைகள் கேட்டிருக்காங்க. இப்போ 50 பேர் வேலை செய்யிறாங்க. நூற்றுக்கணக்கான பெண்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கேன். அடுத்தடுத்த கிராமங்கள்லயும் தொழிற்சாலை தொடங்க வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு’’ என்கிறார் முருகேசன்.



இதற்காக முருகேசன் இப்போது பல பகுதிகளுக்குச் சென்று வாழைநார் கொள்முதல் செய்கிறார். 1 ஏக்கர் தோப்புக்கு 5000 ரூபாய் வரை கொடுக்கிறார். கழிவுப்பொருள் பணமாவதால் விவசாயிக்கும் கூடுதல் வருமானம்.

அமெரிக்காவில் சூழலைச் சிதைக்காத தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் ‘சிட்டி ஃபவுண்டேஷன்’ விருதை முருகேசனுக்காக டெல்லிக்கு வந்து தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள். மத்திய அரசின் விவசாய விஞ்ஞானி விருது, விவசாயத் தொழிலதிபர் விருது என ஏகப்பட்ட அங்கீகாரங்கள்.

‘‘இன்னைக்கு விவசாயிங்க விரக்தியில தவிக்கிறாங்க. அவங்ககிட்ட இந்தத் தொழிலை எடுத்துக்கிட்டுப் போகணும். தமிழ்நாட்டுல வருடத்துக்கு இரண்டரை லட்சம் ஏக்கருக்கு மேலே வாழை சாகுபடி நடக்குது. உலகம் முழுக்க இந்தப் பொருளுக்கு வரவேற்பு இருக்கு. ஈடுபாடு இருக்கவங்க என்கிட்ட வரலாம். அத்தனை தொழில்நுட்பத்தையும் கத்துக் கொடுக்கத் தயாரா இருக்கேன்’’ என்கிறார் முருகேசன். இந்த வெளிப்படையான இயல்புதான் முருகேசனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகிறது.
முருகேசனைத் தொடர்பு கொள்ள: 93605 97884   
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஜி.டி.மணி


வாழை நார் மென்மையானது. ஆனா நாலஞ்சா சேத்து திரிச்சா அதைவிட உறுதியான பொருள் வேறில்லை. ஆனா அதை பூக்கட்ட மட்டும்தான் பயன்படுத்துறோம்!