சொல்றேண்னே சொல்றேன் : இமான் அண்ணாச்சி




மிருகங்களுக்கெல்லாம் திடீர்னு பேச்சு வந்துருச்சுன்னா என்ன ஆகும்ணே? யோசிச்சிப் பாருங்க... ஒரு நாயி இன்னொரு நாயப் பாத்து, ‘போடா சோமு... போடா ராமு... போடா ஆண்டர்ஸன்’னு திட்டுமோ!

‘‘ஏண்டா, கன்னுக்குட்டியக் காட்டி என் பாலைக் கறந்துட்டு, என்னவோ அதை நானே வாலன்டரியா தர்ற மாதிரி, ‘பசு பால் தரும்’னு புரூடா விடுறீங்களா?’’ன்னு பசு மாடு பஞ்சாயத்து கூட்டுமோ!

‘‘நீங்க திங்கிறதெல்லாம் ஆம்லெட் இல்லடா... என்னையப் பொறுத்தவரைக்கும் அபார்ஷன்’’னு கோழி கொரவளையக் கொத்துமோ!
‘‘நமத்துப்போன மிக்சரையும் ஊசிப்போன சாதத்தையும் எனக்குப் போடுறதுகூட பரவாயில்லடா... இதையெல்லாம் திங்கறதுனால செத்துப்போன உன் தாத்தாவா என்னைய நெனச்சிட்ட பாரு... அதத்தான் தாங்கிக்கிட முடியல’’ன்னு காக்கா காண்டாகுமோ!

‘‘காட்டுக்கு நான் ராஜான்னு உங்ககிட்ட சொன்னேனா? இல்ல நீங்க தான் எலக்ஷன் வச்சி எடுத்தீங்களா? அந்தா பெரிய யானைகளுக்கும் எங்களுக்கும் எதுக்குடா பாலிடிக்ஸ் பண்ணி விடுறீங்க?’’ன்னு சிங்கம் சீன் கிரியேட் பண்ணுமோ!
‘‘நல்ல மனுசனுக்கு நாலு சூடு’’ன்னு வண்டி மாடெல்லாம் கம்பியக் காச்சிக்கிட்டு தொரத்துமோ!
இப்படி ஒரு காட்சிய மனசுக்குள்ள ஓடவிட்டுப் பாருங்களேன்...

கடலுக்குள்ள இருந்து ஒரு கயிறு கரைக்கு வந்து விழுகுது. அது மொனையில பார்த்தா, கட்டுக் கட்டா பணம் கட்டியிருக்கு... எவனாச்சும் அதை எடுக்கப் பக்கத்துல போகும்போது, படார்னு அந்தக் கயிறு சுருக்கு போட்டு அவனை அப்படியே கடலுக்குள்ள இழுத்துட்டுப் போயிருது. தண்ணிக்குள்ள அவனை கட்டி வச்சி மீனுங்க எல்லாம் சுத்தி நின்னு குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுது. ‘‘இத்தன நாளா எங்களை நீங்க இப்படித்தானேடா புடிச்சீங்க’’ன்னு அதுகல்லாம் பேசினா எப்படி இருக்கும்?

நான் இப்படித்தான்ணே... எடக்கு மடக்கா எதையாச்சும் பேசிக்கிட்டிருப்பேன். மத்த ஜீவனுக மேல ஒரு அம்பாரத்துக்கு அன்பு. என்னவோ நான்தான் அதுக சார்பா பேசுற ஒரே ஆளுங்கற மாதிரி என் சவுண்டு தாங்க முடியாது. ஆனா, பாருங்கண்ணே... எனக்கும் இந்த ஜீவனுகளுக்கும்தான் எப்பவுமே ஆகாது.



ஒரு காலத்துல எங்க வீட்ல நிறைய ஆடு வளத்தோம்ணே. அதுல ஒரு ஆடு குட்டி போட்டப்ப, ஒரே ஒரு கிடா குட்டிக்கு மட்டும் கழுத்துல ரெண்டு பக்கமும் தொங்கட்டானா கொஞ்சம் சதை தொங்கிச்சி. எது என்ன ஸ்பெஷல் ஆடோ! ஆனா, வளர வளர பாக்கோம்... அந்த ஆட்டுக்கு மட்டும் அப்படி ஒரு அறிவு! எதையும் கையில குடுத்தாதான் சாப்பிடும்... கண்ட கண்ட இடத்துல கக்கா போகாதுன்னு ஒழுக்கம் வேற! எங்க அப்பா காலடிச் சத்தம் பக்கத்துத் தெருவுல கேக்கும்போதே இங்க இது துள்ளிக் குதிக்கும். எங்க எல்லாருக்கும் அது ஒரு செல்லப் பிள்ளைன்னே சொல்லலாம்.

ஆரம்பத்துல எங்க ஊருலயே அந்த ஆட்டுக்கு மட்டும்தான்ணே அந்த தாடி சதை இருந்துச்சி. நல்லா வாட்டசாட்டமா அது வளர்ந்து நின்னப்ப பாத்தா, ஊருக்குள்ள அத்தனை குட்டிகளுக்கும் தாடிச் சதை தொங்குது. அப்பதான் தெரிஞ்சது அந்த ஆடு எங்களுக்கு மட்டும் செல்லப் பிள்ளை இல்லைனு!

பொதுவா, ஒரு ஆடு இப்படி அன்பா பழகிருச்சுன்னா, சின்னப் பிள்ளைங்க நாங்கல்லாம் சேர்ந்து, ‘அதை வெட்டக் கூடாது, விக்கக் கூடாது’ன்னு கொடி புடிச்சிருவோம். அப்படி நாங்க கொடி புடிக்க, அந்த ஆடு சதை புடிச்சி ஓகோன்னு வளர்ந்துச்சிண்ணே. ஒரே ஒரு நாளு... நானே என் கையால அந்த ஆட்டுக்கு தழை வெட்டிப் போட்டுடணும்னு ஆசைப்பட்டு போட்டேன்... அவ்வளவுதான். அடுத்த நாளே அது வாயில நொர தள்ளி அந்தால செத்துக் கெடக்கு. தெரியாத்தனமா என்னவோ ஒரு வெசச் செடிய வெட்டிப் போட்டுட்டேன் போல. என் இரக்க குணத்தால அது இறக்கும்படி ஆயிருச்சி பாருங்க!

இன்னொரு நாளு, காலங்காத்தால எங்க வீட்டு கோழிக் கூண்டை தெறக்கப் போனேன்ணே... தெனமும் அதை என் தம்பியோ அண்ணனுகளோ தெறந்து கோழிகள வெளிய மேய விடுறது வழக்கம்தான். என்னவோ மொத மொறையா நான் அந்த வேலையச் செய்யப் போனேன். கூண்டத் தெறந்துட்டுப் பாக்கேன்... வெளிய வர்ற கோழியெல்லாம் பத்தடி தூரம் நடந்துட்டு அப்படி அப்படியே விழுந்து சாகுதுங்க. ‘‘என்னலே ஆச்சி?’’ன்னு கூண்டுக்குள்ள கைய விட்டா உள்ளேயும் நாலஞ்சு கோழிக செத்துக் கெடக்கு. அப்படியே என் கைய உரசிக்கிட்டு அஞ்சடி நீளத்துக்கு ஒரு பாம்பு விருட்டுன்னு வெளிய போச்சிண்ணே. எனக்கு ஈரக் கொலயில ஈட்டி குத்தினாப்ல ஆயிருச்சு. அப்புறம் அந்தப் பாம்பு வீட்டுக்குள்ள புகுந்துக்க... அத அடிக்க நான் கம்போட தொரத்த... கடைசியில கட்டிலுக்கு அடியில கண்ணு தெரியாத இருட்டுல, பாம்புன்னு நினைச்சி எங்க அண்ணன் பெல்ட்டை நான் மரண அடி அடிச்சது வேற கதை. மொத்தத்துல கோழியா இருந்தாலும் பாம்பா இருந்தாலும் இந்த அண்ணாச்சிக்கும் அதுகளுக்கும் ஏழாம் பொருத்தம்தான்.

இதெல்லாம் தெரிஞ்சும் நான் கடை வச்சிருக்கும்போது, அங்கன பக்கத்துல வெளாண்டுக்கிட்டுத் திரிஞ்ச ஒரு பூனைக்கு பால் ஊத்தி வளத்தேன்ணே. அப்பவே எல்லாரும் சொன்னாங்க... ‘‘எல, கட நல்லா ஓடிக்கிட்டிருக்கு... பூனை வளத்தா வீட்டுக்கு நல்லதில்லம்பாங்க... உனக்கும் வாயில்லா ஜீவனுகளுக்கும் வேற சரியா வராது... விட்ரு!’’ன்னு. நான் கேட்டனா? ‘‘பூனை வீட்டுக்குத்தான் ஆகாது... இது கடை’’ன்னு வம்பு பேசிட்டு அத வளத்தேன். தெனமும் மூணு வேளை பாலு, நல்ல தீனி போட்டதுல அது பூனை சைஸையும் தாண்டி புலியாட்டம் வளந்துச்சுன்ணே. எழுந்து ஓடி எலியப் புடிக்கிற அளவுக்கெல்லாம் அலட்டிக்கறதில்ல... மாஸ் ஹீரோ மாதிரி கண்ணைத் தொறந்து எலிய மொறைச்சிப் பார்த்துட்டு திரும்பத் தூங்கிரும். அப்பத்தான் லேசா எனக்கு வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சுது. பூனை வெயிட்டு ஏற ஏற கடைக்கு வெயிட்டு கொறைய ஆரம்பிச்சிருச்சு. பக்கத்துலயே ஒரு பய கடையப் போட்டு, கஸ்டமர்ஸை பங்கு போட்டான். போகப் போக வாசல்ல நின்னு கையப் புடிச்சி இழுத்தாலும் யாரும் நம்ம கடைக்கு வர்றதில்லைன்னு ஆயிருச்சு. கொழுகொழுன்னு வளந்த பூனை ஒரு நாளு ஓடிப் போயிருச்சுண்ணே... அன்னிக்கி சாயங்காலமே பில்டிங் ஓனரு வந்தார்... ‘‘நீங்க என்ன தம்பி யாவாரம் இல்லாம சும்மா கடைய வச்சிக்கிட்டு... காலி பண்ணிருங்க, நானே வேற கடை வச்சிக்கிடுறேன்’’னுட்டார். பூனையும் போச்சு, கடையும் போச்சு. அன்னிக்கு முடிவெடுத்தேன்ணே... இனிமே வாயில்லா ஜீவனுகளுக்கு வாயா இருக்கறதில்லன்னு!  
(இன்னும் சொல்றேன்...)
தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்