ஆர்யாவும் அனுஷ்காவும் மகா காதலர்கள்! - செல்வராகவன் ஸ்டேட்மென்ட்





‘‘காதல் நம்மை எப்படியும் மாத்தும்... எல்லாம் செய்யும். காதலினால் அவங்க இயல்பு துறந்து எல்லோரும் மாறி இருக்காங்க. எனக்கு சௌகரியமான ஏரியா இது. எனக்கு ஃபேன்டஸி மேல தீராத காதல் உண்டு. ஆர்யாவும், அனுஷ்காவும் இந்த உலகின் மகா காதலர்கள். இரண்டாவது உலகத்திலும் அவங்க வேறு பெயரில் சந்திக்கிறார்கள். இப்படிப் பயணமாகும் ‘இரண்டாம் உலகம்’. நிறைய உழைச்சிருக்கேன். எல்லா உழைப்பையும் ஒரு சேர திரையில் பார்க்கும்போது எனக்குக் கண்ணீர் திரையிட்டது. இந்த சினிமாவிற்கான பயணம், கடந்த தூரம், இத்தனை நாட்கள் உழைத்த உழைப்பு எல்லாமே ஆயுசுக்கும் மனதில் நிற்கும்!’’ - அருமையாகப் பேசுகிறார் டைரக்டர் செல்வராகவன். தமிழ் சினிமாவின் நம்பகமான இயக்குநர்களில் ஒருவர்.

‘‘ ‘இரண்டாம் உலகம்’ இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்றெல்லாம் வேறு வேறு விதமா சொல்றாங்களே..?
‘‘ ‘மாற்றம் வேண்டும்... மாற்றம் வேண்டுமென்று கேட்காதே.... அந்த மாற்றமாக நீயே மாறிவிடு’ என்றார் காந்தி. எனக்கு அடுத்த கட்டத்துக்குப் போகணும்னு தோணுது. குண்டுசட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கிட்டிருந்தா எப்படி? வேற திசையில் போகணும்னு ஆசைப்பட்டேன். இது மாதிரி தமிழில் பண்றது கஷ்டம். ஆனால், எல்லாரும் சொல்ற மாதிரி இது மாயாஜாலப் படமில்ல... காதலை மாயாஜாலமா சொல்ற படம். காதல் பண்ணும்போது ஒருத்தன் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்படுவான். காதலில் விழுகிற ஒவ்வொரு சமயமும் நம்மை அறியாமலேயே ஒரு வடிவத்திற்கு ட்யூன் ஆகி டிசைன் ஆகியிருப்போம். நட்பு, பிரிவு, காதல், சண்டை, சாதனைன்னு மொத்த வாழ்க்கைக்குமான ரிகர்சல் அங்கேதான் நடக்கும். நீங்கள் காதலிச்சிருந்தால், அந்தக் காதலும் உண்மையாக இருந்தால், ‘இரண்டாம் உலகம்’ உங்கள் மனதில் அப்படியே நிக்கும். தமிழ் சினிமாவில் வேறு மாதிரி செய்திட்டேன்னு மார்தட்டல் எதுவும் கிடையாது. மீட்டெடுப்பெல்லாம் கிடையாது. சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்! இங்கே மிக நியாயமாக நிகழ வேண்டியது எதுவும் நிகழாமல் இருக்கு. அதை கேள்வி கேட்டுக்கிட்டே ஒதுங்கி இருக்காமல், நானே முயன்று பார்த்திருக்கேன். சும்மா காதலிக்கிறது, டைம்பாஸுக்கு லவ் பண்றது, டேட்டிங்... இப்படி எதுவும் இல்லாமல், உண்மையான, இந்தத் தலைமுறையில் அறியப்படாமல் இருக்கிற காதலைச் செய்திருக்கேன்!’’



‘‘ஏன் ரெண்டு வருஷம்..?’’
‘‘ஆகுமே... அதற்கேத்த மாதிரி படம் இருக்கும். இந்தப் படத்திற்கு இவ்வளவு நாள் தேவைதான்னு பார்த்ததும் புரியும். எழுதும்போது தெரியலை. எடுக்கும்போது அதன் கஷ்டம் புரிஞ்சது. கருவிகள், பணம், மேன் பவர்னு நிறைய செலவழிக்க வேண்டிய அவசியம். ஜார்ஜியாவில் - மொழி, இடம் அறியாத தூர தேசத்தில் - 100 நாட்களுக்கு மேல் உட்கார்ந்து செய்த அனுபவங்கள் அவ்வளவு. காதலை விடவும் சந்தோஷமான விஷயத்தை கடவுள் இன்னும் இந்த பூமிக்குக் கொடுக்கலை. அதை இரண்டு உலகத்திலும் பதிவு பண்ண இவ்வளவு நாள் பிடிச்சது. முரட்டுத்தனமான காதலும், ப்யூர் லவ்வும் இதில் இருக்கு. இருவேறு உலகம், இருவேறு மனிதர்கள்னு நிறைய மாற்றங்கள். இரண்டாம் உலகத்தில் பெரும் வாளை எடுத்து வீசுற அனுஷ்கா, இந்த உலகத்தில் இருப்பது பூ ஏந்தும் இளம் பெண்ணாய். முதலில் உள்நுழையவே ஆர்யா, அனுஷ்கா கஷ்டப்பட்டாங்க. கொஞ்சம் திசை தெரிஞ்சதும் அவங்களுக்கு எல்லாமே ஈஸியாகிவிட்டது.’’

‘‘ஆர்யாவுக்கு இவ்வளவு பெரிய கேரக்டர்! இன்னமும் ப்ளேபாய் இமேஜ்தானே அவருக்கு இருக்கு?’’
‘‘சரி... அப்படியே எத்தனை நாள் இருக்கிறது? விளையாட்டுப் பிள்ளை எப்ப சீரியஸா மாறுறது! நான் அந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டேன். ஆர்யா ரொம்ப சென்ஸிபிள். எப்படி வேணுமோ அப்படி மாறுகிறார். அவர் அடுத்த லெவலுக்கு கட்டாயம் போக வேண்டிய நேரம் இது. நான் ஆர்யாவைப் பத்தி இவ்வளவு அருமையாக சொல்லும்போதே, அவருடைய நடிப்பு பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே! அனுஷ்காவெல்லாம் சாதாரண பொண்ணு கிடையாது. எதையும் ப்ரூவ் பண்ணணும்னு இந்த சினிமாவை குடுக்கலை நான். இப்படி இணக்கமா வேலை செய்கிற நடிகர்கள் இல்லாட்டி, இதையெல்லாம் இந்தக் காலநேரத்திற்குள் முடிச்சிருக்க முடியுமாங்கறது சந்தேகமே! எல்லா புதுமையையும் என் காலத்திலயே பார்க்க ஆசைப்பட்டேன். அதுதான் ‘இரண்டாம் உலகம்’...’’



‘‘ஹாரிஸ் ஜெயராஜ்தான் மியூசிக் டைரக்டர். திடீர்னு பார்த்தால், அனிருத் வர்றார். என்ன நடந்தது...?’’
‘‘என்ன ஏதுன்னு டீடெயிலா பேச முடியாது. அது எங்கெங்கோ கொண்டு போய் விட்டுடும். பெரிய படம்... ஏராளமான பணம். அதன் வட்டியோட அளவு. இவ்வளவு காலத்துக்குள்ள தயாரிப்பாளர்கிட்டே முடிச்சுக் கொடுக்க வேண்டிய டைம் ஃப்ரேம்... எல்லாமே இதில் இருக்கு. என்னோட சேர்ந்து உழைக்க நேரம் இருக்கிற, அக்கறை இருக்கிறவங்கதான் எனக்கு வேணும். அது எங்கே கிடைக்குதோ, அங்கேதான் நான் போக முடியும். அப்படித்தான் அனிருத் வந்தார். சொந்தக்காரர் வேறயா... நான் சொல்லி தட்டவும் அவரால் முடியலை. புடாபெஸ்ட் நகரில் எங்களோடு வந்து பின்னணி இசை தந்தார். அவ்வளவு பெரிய பிரமாண்டத்திற்கு நியாயம் செய்த உழைப்பு அவருடையது. எந்த ஒரு படத்தையும் முதல் படம் மாதிரி செய்றவங்ககிட்ட நாமும் ஆர்வமா வேலை செய்ய முடியும். அனிருத்துக்கு இது பெரிய பெயர் வாங்கிக் கொடுக்கும். நிறைய பேருக்கு பின்னணி இசையோட அம்சம், பயன், லாவகம் புரியாது. ஏன்னா, நாம் அப்ப படத்தில் மூழ்கியிருப்போம். எனக்கு ஒவ்வொரு படத்திலும் ஒரு அடியாவது முன்னாடி போகணும். அதுதான் சுகம். இப்ப ஒண்ணும் ஹாரிஸ்கிட்டே பகையெல்லாம் இல்லை. ஐதராபாத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிற்குக் கூட வந்திருந்தார். எல்லாமே நார்மல்தான். எந்த தயாரிப்பும் இல்லாமல் பெரிய ஜெயன்ட் வீல்ல பரபரப்பா சுத்திட்டு இறங்குற அனுபவத்தையும் அருமையான காதல் தரிசனத்தையும் ரசிகர்களுக்குக் கொடுக்கத்தான் இத்தனை கஷ்டமும்!’’
- நா.கதிர்வேலன்