குட்டிச்சுவர் சிந்தனைகள்





பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க, பழைய படத்த ரீமேக் பண்றாங்க, அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்? அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம். அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம். ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’.

பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்
பழசு: இளங்கன்று பயமறியாது
புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது
பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்
பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு
புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு
பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்
புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு   ணிssணீஹ்வே   அனுப்பும்
பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்
பழசு: ஆறிலும் சாவு... நூறிலும் சாவு
புதுசு: ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்
பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது
புதுசு: நெட்வொர்க்காரனை திருத்த முடியாது
பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு
புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு
பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு
புதுசு: செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு
பழசு: கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது
புதுசு: பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது
பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்
பழசு: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்
பழசு: குரைக்கிற நாய் கடிக்காது
புதுசு: கொரியன் போன் உழைக்காது
பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்
பழசு: ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது
புதுசு: டவர் கிடைக்கும் வரை டைம் காத்திருக்காது
பழசு: கடை தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே
புதுசு: அடுத்தவன் போன எடுத்து உன் ஆளுகிட்ட பேசாதே
பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே
புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே
பழசு: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
புதுசு: கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை
பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்
புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்
பழசு: பேராசை பெருநஷ்டம்
புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்  

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...
முன்னாள் முதல்வர் முதல் இந்நாள் முதல்வர் வரை இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கக் கூடாதுன்னு
கேட்டும், கொலைக் களத்திற்கு குறும்பாடை அனுப்பும் மத்திய அரசு!

ஆல்தோட்ட பூபதி



செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம், நாக தோஷம், ஜலதோஷம்னு சந்தோஷத்தைத் தவிர எல்லா தோஷமும் வச்சிருக்கிற என் நண்பன் ஒருத்தன் இன்னமும் பேச்சிலர்.  

அவனுக்கு ரொம்ப வருஷங்களுக்கு பிறகு டாஸ்மாக்குல கூலிங் பீர் கிடைச்ச மாதிரி, கும்முன்னு ஒரு ஜாதகம் பிரேம்ஜி - சோனா ஜோடியாட்டம் பொருத்தமா அமைஞ்சது. சரி, திரேதா யுகம், கலி யுகம்னு பல யுகம் தாண்டி, இவனுக்கும் ஒரு நவ யுகம் ஆரம்பிச்சிருக்குன்னு, நானும் அவனும் பொண்ணப் பார்க்க கிளம்பினோம். ராஜஸ்தான்ல போய் சேட்டை கண்டுபிடிச்சுடலாம் போல... அந்த சின்ன ஊருக்குள்ள பொண்ணோட வீட்டைக் கண்டுபிடிக்க முடியல. நான், ‘வேட்டையாடு விளையாடு’ கமலா மாறி, நண்பன் ‘புலன் விசாரணை’ விஜயகாந்தா மாறி, தேடி துப்பறிஞ்சு கடைசியா தெருவுக்கு வந்துட்டோம். அய்யய்யோ, இருங்க... நான் சொல்றது பொண்ணு குடியிருக்கிற தெருவுக்கு வந்துட்டோம்னு.

மத்தியானம் மெகா சீரியல் பார்த்துட்டு தூங்குற டைம் போல, ஒருத்தரையும் ரோட்டுல காணாம். எங்க நல்ல நேரம், ஒரே ஒரு அம்மா மட்டும் ஒரு வீட்டுக்கு வெளிய வடாம் காய வச்சுக்கிட்டு இருந்தது. ‘‘கந்தசாமி வீடு எதுங்க?’’ன்னு கேட்டதுக்கு, ‘‘இந்த வீடுதான்’’னு காட்டிச்சு. அய்யய்யோ, வீட்டுக்காரம்மாகிட்டயே வீட்ட கேட்டுட்டோமேன்னு நாக்கை கடிச்சுக்கிட்டு விஷயத்தச் சொன்னா, அந்தம்மா வெட்கப்பட்டுக்கிட்டு வீட்டுக்குள்ள ஓடுது.

என்னடா இது, சந்தானம் கைல கிடைச்ச சரக்கு பாட்டில் மாதிரி சீன் மாறுதுன்னு உள்ள போனா... அடுத்த கத்திக்குத்த கந்தசாமி இறக்கினாரு. நாங்க வெளிய நின்னு பேசிக்கிட்டு இருந்த அம்மாதான் கல்யாணப் பொண்ணாம். கொஞ்சம் மூச்ச இழுத்து ஆசுவாசப்படுத்திக்கிட்டு திரும்பி நண்பனைப் பார்த்தேன். பயபுள்ள பஞ்சாயத்து ரோட்டுல மினி பஸ்ஸ மறிச்சு, உள்ள ஏறிக்கிட்டு இருக்கான். அடேய்ய்ய் பொண்ணு வீட்டுக்காரங்களா... கல்யாண புரோக்கர்களா... உங்க ‘போட்டோஷாப்’ திறமையைக் காட்ட கல்யாணப் பொண்ணு போட்டோதானாய்யா கிடைச்சது?

பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்ல ஆரம்பிச்சு, பந்து போடுற ஹர்பஜன்சிங் வரை...
வட்டச் செயலாளர்ல ஆரம்பிச்சு, வருத்தப்படாத வாலிபர் சங்க செயலாளர் வரை...
பொண்ணு பின்னால சுத்துறவன்ல ஆரம்பிச்சு, போலீஸ பின்னால சுத்த விடுறவன் வரை...
பணக்காரனுங்க முதல் பிச்சைக்காரர்கள் வரை...
எல்லா மனுஷப் பயலுகளும் அப்பப்ப தனக்குள்ளயே, தனக்குத்தானே பேசிக்கிட்டுதான் இருக்கான். என்ன... கொஞ்சம் சத்தமா பேசிட்டா, அவன ‘லூசுப்பய’ன்னு இந்த பாழாப்போன உலகம் சொல்லிடுது, அம்புட்டுதான்!