கதவு



கோடிப் பேரில்
எத்தனை விழுக்காடு பேர் திருடராய்
இருந்துவிடப் போகிறார்கள்

திருடனுக்கு பயந்து
கதவு மாட்டியிருப்பதாய்
சொல்லிக் கொண்டு திரிகிறோம்
திருடுபவனுக்கு
கதவும் பூட்டும்
ஒரு பொருட்டே இல்லை

இயங்கும் சுவர்
இசைக்கும் சுவர்
கதவு

வீதியில் நடந்து போவோருக்கு
என் சேமிப்புகள்
கண்ணை உறுத்தாமலிருக்க வேண்டுமே!

நிம்மதியாய் டிவி பார்க்க
சோறு சாப்பிட
திறந்தமேனிக்கு படுத்து உருள
என் கதவு எனக்குக் காவல் காக்கிறது
எனக்கான வேஷம் போடும்வரை
வீதிக்குத் திரையாய் வாழ்கிறது!
என் சத்தங்கள்
சச்சரவுகளுக்கு
எல்லை வகுத்து நிற்கின்றது
காதலி மனைவி குழந்தை
எல்லோரோடும்
நான் குழந்தையாய் இருக்கும்
என் தருணங்களைப் போர்த்துகிறது
போற்றுகிறது!

இப்போது சொல்லுங்கள்...
கதவின் முதற்காரணம்
வெளியில் உலவும் திருடர்களா?
வீட்டிற்குள் இருக்கும்
திருட்டுத்தனங்களா?

கு.திரவியம்