சூரி ஹாட்! வடிவேலுவை பார்த்ததில்லை... சந்தானத்தோடு பழகியதில்லை!



அடிச்சது லக்கி பிரைஸ்!  சந்தானத்திற்குப் பிறகு நகைச்சுவை உலகின் அடுத்த இடம் சூரிக்கே!
‘‘மக்கள் எனக்கு அங்கீகாரம் கொடுத்தது ரொம்ப சந்தோஷம்ணே. எங்கே போனாலும் குழந்தைகள் நான் பேசின டயலாக்குகளை என்னை மாதிரியே பேசி ஆசீர்வதிக்கிறாங்க. அதுதான் ரீச். ‘போகலாம் ரை.... ரைட்ஸ்’னு விசிலடிச்சு பப்ளிக் ரசிக்கிறாங்க. ந்தா... இப்பப் பாருங்க, ‘ஜில்லா’வில விஜய்யோட ஒண்ணுமண்ணா ஃபுல் கட்டு கட்றேன். இந்த சூரிப்பய காட்லயும் வெளுக்குதுண்ணே மழை!’’ - வழக்கம் போல பணிவுக்குடை பிடித்துப் பேசுகிறார் சூரி.

‘‘ ‘வெண்ணிலா கபடிக்குழு’வில் புரோட்டா சாப்பிடுகிற சீன். அதற்குப் பிறகு நிற்காத பயணம். எப்படி உணர்றீங்க?’’‘‘ஆச்சரியமா இருக்குண்ணே. நான் தவிச்சு ரசிச்ச டைரக்டர்ஸ், ‘சூரி, உங்க படம் பார்த்தேன்... நல்லாயிருக்கு’ன்னு சொல்லும்போது அழுகை வருதுண்ணே. ‘சார் நீங்களா... அண்ணே நீங்களா...

எனக்கு ஒண்ணும் புரியலையே’ன்னு சொல்றேன். சினிமா மட்டும்தான் அன்னன்னைக்கு பாடம் காட்டிக்கிட்டே இருக்கும். மத்த துறைகள்ல கூட கொஞ்சநாள் ஓட்டிப் பார்க்கலாம். இங்கே அது முடியாது. அப்படிப்பட்ட ஃபீல்டு இது. கலைத்தாய் நம்மளைப் பார்த்து கொஞ்சம் திரும்பியிருக்கு. அப்படித்தான் எடுத்துக்கணும். ஆனால், பயம் இருக்குண்ணே.

அவ்வளவு அவமானப்பட்டிருக்கேன். அத்தனையும் அனுபவமா கையைப் பிடிச்சு இந்த இடத்துக்குக் கொண்டாந்து விட்டுச்சு. ஒரு வீட்டுல குடியிருந்தேன். மாடியில மரமா இருந்தது. மகளை கூட்டிட்டுப் போய் போட்டோ எடுத்தேன். கீழ்வீட்டு அம்மா வகைதொகையில்லாமல் சத்தம் போட்டுச்சு. கொஞ்ச நாள்ல வேற வீடு பாத்திட்டு வந்திட்டேன். இப்ப ஒருநாள் ஷூட்டிங்கில் இருந்தேன். ‘மாமா... அந்த வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பிளாட் விலைக்கு வருது’ன்னு சம்சாரம் சொல்லிச்சு. ‘கஷ்ட நஷ்டப்பட்டு வாங்கிரலாம்... அட்வான்ஸ் கொடுத்துரு’ன்னு சொல்லிட்டேன். அவமானப்படுத்தின இடத்தில மரியாதையா போய் உட்காரணும். இது எல்லாமே இந்த மக்கள் கொடுத்த பரிசு!’’

‘‘எப்பவும் ஹீரோவுக்கு நண்பனாவே வர்றீங்களே?’’‘‘அதுதான்ணே ஈஸி. ஹீரோக்கள் ஜனங்களுக்கு நெருங்கி இருக்காங்க. நாம அவங்களுக்கு நெருங்கி இருக்கோம். என்னோட டைப் ரொம்ப யதார்த்தம்னே. என்னைய மாதிரி ஒரு பத்துப் பேரை உங்க தெருவில நீங்க பார்ப்பீங்க. ரொம்ப நடிச்சிட்டா ஒட்ட மாட்டேங்குது. சுசீந்திரன் அண்ணன், சிவகார்த்தி கேயன், விமல், விஷ்ணு, விஜய் சேதுபதி, சசிகுமார் அண்ணே, எஸ்.ஆர். பிரபாகரன் எல்லோரும் என்னைக் காப்பாத்தி கரை சேர்க்கிறாங்க. பாண்டிராஜ் அண்ணே, எழில் சார், ராஜ்குமார் அண்ணன் இவங்க என்னைக் கொண்டு சேர்க்கிற இடம் பெரிசு. அவங்க கை பட படத்தான் நான் மெருகேறினதா நினைக்கிறேன். இயல்பா இருக்கிறதை ரசிக்கிற கட்டம்ணே இது. அப்படியே நடிச்சிட்டுப் போறேன்.’’
‘‘விஜய் கூட பெரிய ரோல் பண்றீங்க...’’

‘‘அதுதான்ணே ஆச்சரியம். கூப்பிட்டு ‘ஜில்லா’வில பெரிய ரோல் கொடுத்தாரு. வெளியே அவருக்கு அவ்வளவு மரியாதை காட்டுவேன். கேமராவுக்கு முன்னாடி போயிட்டா அது சினிமா தான். ரகளைதான். ரொம்ப ரசிப்பார். அவ்வளவு மரியாதையான மனுஷன். நம்மளை கொண்டு வந்து சேர்த்துட்டாரு. அவர் கூப்பிட்டா எந்த காமெடியனும் வருவாங்க. நம்மளைக் கூப்பிட்டு பண்ணச் சொல்லிட்டாரே... அவ்வளவு சந்தோஷம்.  ‘தல’ கூடவும் நடிச்சிட்டா போதும்ணே.’’
‘‘ஹீரோவா நடிக்கலையா..?’’

‘‘அண்ணே... ஏன் உங்களுக்கு இந்த கொலவெறி! ‘சுனாமிக்குப் பிறகு ஒரு ஆபத்தும் வரல்லை’ன்னு சயின்ஸ்ல சொல்றாங்க. ஜனங்களும் நம்பிக்கிட்டு இருக்காங்க... ‘ஓஸோன் ஓட்டை’ன்னு சொன்னாங்க. இப்ப அதுவும் பொய்னு சொல்றாங்க. ‘2012ல உலகம் காலி’ன்னு சொன்னாங்க. 2014ல வந்து நிக்கிறோம். இதுக்குப் பிறகும் சூரிங்கிற ஹீரோ சுனாமி வந்து சித்ரவதை செய்ய வேண்டாம். நடிச்சிட்டு இருந்தால் போதும்ணே. இன்னும் சொன்னா, ஓடுற படத்துல இருந்தால் போதும். இதுக்கு முன்னாடி ஒருத்தர் வந்துட்டா 20 வருஷத்துக்கு நிப்பாங்க.

இப்ப 5 வருஷம் ஆயிட்டா டப்பா டான்ஸ் ஆடுது. எவ்வளவு பெரிய திறமை இருந்தாலும் அவன் இடத்திற்கு இன்னொருத்தன் வர்றான். சூரி போனா, அந்த இடத்திற்கு வர, வெளியே 100 சூரி காத்துக்கிட்டு இருக்கான். வர்றவனை தடுக்கவும் முடியாது. சினிமா கம்பெனி மேனேஜர்கிட்டே இருந்து இத்தனை போன் வந்திச்சுன்னு தகவல் இல்லைன்னா பதறுதுண்ணே!’’
‘‘சிம்புக்கு எப்போதும் சந்தானம்தான். இப்ப நீங்க வந்துட்டீங்க...’’

‘‘ஆமாண்ணே. சிம்பு கூட நடிக்கப்போறேன்னு சொன்னதும், ‘ஏய்யா... இது 100% செட்டாகாது... அவரு ஏ கிளாஸ்’னு சொன்னாங்க. ஆனா, பழகிப் பார்த்தா சிம்பு சார் ரொம்ப ஜாலிங்க. சிரிப்பு சிரிப்பா பேசுறாரு. ஷூட்டிங் முடிச்சு ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு ‘டாப் அப்’ போடுறோம். பாண்டிராஜ் அண்ணே சொன்னதும் சிம்பு சாரே ‘சூரி நல்லா பண்றாரு. நல்லா நடிக்கட்டும். பிரச்னையே இல்லை’ன்னு சொன்னாராம்.  படம் நல்லா வரும். அண்ணே, சொல்ல மறந்திட்டேன்,

 ‘ஜில்லா’வுக்குப் பின்னாடி என் மச்சான், மாப்பிள்ளை விஜய் சேதுபதியோட ‘ரம்மி’ வருது. சும்மா கலக்கும். அவனுக்கு நான் பெரிய ரசிகன். அடுத்து கனி அண்ணனோட ‘நிமிர்ந்து நில்’ வேற இடத்திற்குப் போகும். அதில் என்னை நகைச்சுவைக்கு மேலே ஒருபடி கொண்டு போயிருக்கார். ‘பிரம்ம’னில் அதிரிபுதிரியான வேஷம். இப்ப பாருங்க... இரா.சரவணன்னு பத்திரிகையாளர் டைரக்ட் பண்ற படத்துல நடிக்கிறேன். புதுசுன்னு தெரியாத அளவுக்குப் பின்னி எடுக்கிறார் அவர்!’’‘‘வடிவேலு, சந்தானத்தை கவனிப்பீங்களா?’’

‘‘அவங்க எல்லாம் சீனியர்ஸ். அவங்களை விட்டுட்டு இப்ப இருக்கிற காமெடியை எப்படிப் பிடிக்க முடியும்! கலைவாணர்கிட்ட ஒருத்தர் பாடம் படிச்சாரு. அப்படியே வந்து சந்திரபாபு, சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம்னு எல்லார்கிட்டேயும் கத்துக்காம யார் இங்கே என்ன செய்ய முடியும்? ரிலே ரேஸில் கட்டையை வாங்கிட்டு ஓடுவாங்களே... அது மாதிரி நாங்க வாங்கி ஓடிக்கிட்டு இருக்கோம்!’’

‘‘வடிவேலு, சந்தானம் கூட பேசிப் பழகியிருக்கிறீர்களா?’’
‘‘அந்தக் கொடுப்பினை இல்லைங்க... வடிவேலு அண்ணன்கிட்டே பார்த்தே பேசினதில்லை. ‘வேலாயுதம்’ படத்தில் நானும், சந்தானமும் சேர்ந்து நடிச்சோம். சில காம்பினேஷன் ஷாட்ஸ் கூட இருந்தது. இருந்தும் பழக்கம் இல்லை. கூப்பிட்டுப் பேசினதில்லை. ஆனா, தம்பி ராமய்யா, சிங்கமுத்து, சிங்கம்புலி, சாம்ஸ் இப்படி நிறைய பழக்கம் இருக்கு.’’

- நா.கதிர்வேலன்