மதயானைக் கூட்டம்



ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கலாசாரத்தைக் கண்டடைகிற வாழ்க்கைச் சித்திரம். அவர்களின் தனித்த பழக்க வழக்கங்களையும், வறட்டு கௌரவத்தையும், அதிகப்படியான வன்முறையைக் கைக்கொள்ள நேர்கிற அவசரத்தையும், காரணங்களையும் ஒரே கதைக்குள் கொண்டு வந்திருப்பதே ‘மதயானைக் கூட்டம்’.

ஊரின் ‘பெரிய தலைக்கட்டு’ மனிதரின் சாவு சடங்குகளை அருமையான காட்சி விவரணைகளுடன் விலாவாரியாகக் கொண்டுவந்து தொடர்கிறது படம். நடனமாடிய
படியே, பெரியவரின் சிறப்புகளை அடுக்கடுக்காக சொல்லும் அழகில் நிஜமாகவே உட்கார வைக்கிறார் அறிமுக இயக்குநர் விக்ரம் சுகுமாரன். இப்படியான ஆரம்பமே தமிழ் சினிமாவிற்கு புத்தம் புதுசு.

அந்தப் பெரியவரின் இரண்டு மனைவிகள், இரண்டு மகன்கள் என அடுத்தடுத்து தொடரும் வீம்பும் பகையும் கௌரவமும்தான் முழுப்படத்தையும் ஆக்கிரமிக்கிறது. ஆனால், மிகச்சிறந்த வகையில், சூழ்நிலைகளின் இறுக்கத்தோடு திரைக்கதையைக் கொண்டு செல்வதால் விக்ரம் சுகுமாரனுக்கு ஒரு ஹக்!

கொஞ்சம் இன்னும் நீண்டால் ஆவணப்படத்தின் சாயலை அடைந்துவிடும் அபாயம். ஆனாலும், கதையின் போக்கில் நம்மை சாமர்த்தியமாக நிமிர்த்திக் கொண்டு போய் விடுவது ஆறுதல். மதயானைக் கூட்டத்தின் முன்னணித் தலைவராக வரும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, உடல்மொழியில் பின்னியிருக்கிறார். ஊடுருவித் தாக்கும் பார்வையும், விறுவிறு நடையும், எண்ணி வார்த்தைகளை செலவிடும் அழகும் தமிழ் சினிமாவிற்கு இலக்கிய உலகிலிருந்து நல்ல இறக்குமதி.‘பெரிய தலைக்கட்டு’ முருகன்ஜி, பிரமாதம். இப்பொழுதெல்லாம் புதுமுகங்கள் மிகச்

சிறப்பாக தமிழ் சினிமாவின் வெற்றிடங்களை நிரப்புகிறார்கள். தொடக்கத்திலிருந்து, சாவு வரையிலான அவரது மிடுக்கு நடிப்பு அப்படியே கண்ணில் நிற்கிறது. விஜி சந்திரசேகர் நடிப்பு தத்ரூபம்.
அறிமுக ஹீரோ கதிர், சிறப்பான தேர்வு. ஆரம்பத்தில் விடலைத்தனமும் காதலுமாக அலைகிறார். பிறகு குடும்ப வன்முறைக்கு பலியாவது வரை இயல்பின் துடிப்போடு செய்திருக்கிறார். இப்பொழுதெல்லாம் ஓவியா எந்தப் படங்களிலும் இடம் பெறுவது, சும்மா வந்து போவதற்கும் சிரித்து வைத்து இடத்தை நிரப்புவதற்கும்தான். இதிலும் அதே ஓவியா.

ராகுல் தர்மனின் ஒளிப்பதிவு மிக நேர்த்தி. அறிமுக ஒளிப்பதிவாளரிடம் இத்தனை சாதுரியங்களும், கதையை விட்டு கடுகளவும் விலகாத நுட்பமும் சமீப காலங்களில் பார்க்கக் கிடைக்கவில்லை. சாவு பாடல்களுக்கான காட்சி அழகே ஒரு சோற்றுப் பதம். இரவுக் காட்சிகளில் இதுவரை இல்லாத மிடுக்கு.

‘பிரமாதம்’ என்று கிறக்கத்துடன் சொல்ல வைக்கிற பிரமையை முதல் பாடலிலேயே ஏற்படுத்தி விடுகிறார் இசையமைப்பாளர் ரகுநந்தன். காட்சியில் வரும் இயல்பான சத்தங்களை தன் இசையோடு அற்புதமாகக் கலந்திருப்பது இன்பச் சிலிர்ப்பு. பாடல் வரிகளில் ஏகாதசி, ‘இது சூப்பர் கூட்டணி’ என சொல்ல வைக்கிறார் ஆனால், இம்மாதிரி படங்களுக்கென ஒரு தர்மம் இருக்கிறது.

படத்தில் விமர்சனப் பார்வையும் இருந்திருக்க வேண்டும். சாதிப் பெருமிதம் நிறைய இடங்களில் வசனமாய் வெளிப்படுவதைத் தவிர்த்திருக்கலாம். மாறி வரும் இந்தச் சமூகத்திற்கு பழைய நடை
முறைகளை, அதன் அச்சு அசல் வாழ்க்கையை (உண்மையாகவே இருந்தாலும் கூட) முன்வைப்பது தவறோ என்று கூடப்படுகிறது. இதிலிருந்து இளைய தலைமுறை வேறு பாடங்களைக் கற்றுக்கொண்டு விடக்கூடாது என்பது முக்கியம். எல்லாவற்றையும் மீறி, நிச்சயம் இது ஒரு மண்வாசனைப் படம்.

- குங்குமம் விமர்சனக் குழு