வேலை



வேலைக்குச் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் மாணிக்கத்துக்கு முதலாளியின் மேல் அளவு கடந்த மரியாதை ஏற்பட்டிருந்தது. திறமையான நகைத் தொழிலாளியான அவனுக்கு, அவரது கடையில் எல்லா வசதிகளுடன் தனி அறை, அதிக சம்பளம் என எல்லாம் கொடுத்திருந்தார் தங்கவேலன். பழைய முதலாளியை நினைத்துப் பார்த்தான் மாணிக்கம்.

என்னதான் திறமைக்கு ஏற்ற சம்பளம் என்றாலும், இந்த அளவுக்கு மரியாதை அங்கு கிடைத்ததில்லை. வேலையைக் கறந்து லாபம் பார்த்த அவர்மீது கோபம்தான் வந்தது. அவரிடம் சண்டை போட்டுக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தது தனது அதிர்ஷ்டம்தான்.

வந்து ஒரு வாரமாகிறது. இன்னும் வேலை எதுவும் இல்லை. சொகுசாக இருந்தாலும், வெட்டியாக அவனால் உட்கார முடியவில்லை. அதனால் முதலாளியைப் பார்க்கக் கிளம்பினான்.
முதலாளியின் அறைக்குள் நுழையுமுன்... ''எனக்கு புரியலையேப்பா, இத்தனை வசதிகளை செஞ்சு கொடுத்து, அந்த மாணிக்கத்தை சும்மா உக்கார வச்சிருக்கீங்க. இத்தனைக்கும் முன்னமே பலமுறை நாம கூப்பிட்டும் வேலைக்கு சேராதவன். அவனுக்கு இத்தனை மரியாதையா?’’ என்று மகன் செந்தில் கேட்க, சிரித்தார் தங்கவேலன்.

‘‘இது பிசினஸ் தந்திரம்பா! மாணிக்கம் இல்லாததுனால, அவன் முதலாளிக்கு வியாபாரத்துல நஷ்டம். அது நமக்கு லாபம். முன்னே நம்மள உதாசீனப்படுத்தின மாணிக்கத்தின் திமிரை அடக்கத்தான் வேலை கொடுக்கலை. அவன் திறமையான வேலைக்காரன் வெட்டியா  ரொம்ப நாள் அவன் இங்கே இருக்க மாட்டான்... அவனை சக்கையா வீதியில எறிஞ்சிடலாம்’’ என்று தங்கவேலன் சொன்னதைக் கேட்ட மாணிக்கம் அதிர்ந்து நின்றான்.    

பா.வெங்கடேஷ்