வரலாற்றை சேகரிக்கும் பசுமை நடை



உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்று மதுரை. இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாட்டுப்புறப் பாடல்கள், வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகள் என அதன் தொன்மத்துக்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ஆனால், சரித்திரத்தைப் பாதுகாக்கத் தெரியாத தமிழ் சமூகம் அந்த குன்றங்களை கல்லாகவும், காசாகவுமே பார்க்கிறது.

தம் வரலாற்றுக்கான ஆதாரங்களை அழியாமல் பாதுகாக்கிற சமூகமே சுயமரியாதையோடும், பெருமிதத்தோடும் வாழும். அந்த அக்கறையை உருவாக்குவதற்கான முயற்சிதான் ‘பசுமை நடை’. சூழலியல் சார்ந்த எழுத்தாளரும், தீவிர செயற்பாட்டாளருமான அ.முத்து கிருஷ்ணன் தொடங்கியிருக்கிற இந்த அமைப்பு, ஆக்கபூர்வமான விளைவு களை ஏற்படுத்தி வருகிறது.

‘‘மதுரையைச் சுற்றியிருக்கிற கோட்டைகளும், அரண்மனை மிச்சங்களும் வெறும் ஐந்நூறு ஆண்டு கால வரலாற்றை மட்டுமே சொல்கின்றன. ஆனால் குன்றங்களில் இருக்கிற வட்டெழுத்துகள், சிற்பங்கள், படுகைகள் சுமார் 2000 ஆண்டு கால வரலாற்றுச் சாட்சி. எல்லாவற்றையும் ஆட்கொள்ளத் துடிக்கிற மனிதர்களின் அதிகாரப்பசிக்கு பல வரலாற்றுச் சான்றுகள் இரையாகி விட்டன. மலை
மாஃபியாக்களின் பிடியிலிருந்து மிச்சமிருக்கிற சான்றுகளையாவது காப்பாற்ற வேண்டும். அதுபோக இளம் தலைமுறைக்கு அதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். அப்படியான நோக்கத்தில்தான் ‘பசுமை நடை’ நடக்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பு யானைமலையை சிற்ப நகர மாக்கும் திட்டம் ஒன்றை அரசு அறிவித்தது. அதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தன்னெழுச்சியாகப் போராடினார்கள். நான் அந்த மலைக்குச் சென்று பார்த்து, அதன் வரலாற்றுப் பாரம்பரியம், பண்பாட்டுப் பதிவுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதைப் படித்த மதுரைக்கார நண்பர்கள் பலர், ‘இவ்வளவு நாள் மதுரையில் இருக்கிறோம். இப்படியொரு மலை இருப்பது தெரியாமல் போய்விட்டதே...’ என்றார்கள். மிகவும் வேதனையாக இருந்தது.

அவர்களுக்காக மீண்டும் ஒருமுறை யானைமலைக்குச் செல்ல திட்டமிட்டேன். 35 நண்பர்கள் ஆர்வமாக முன்வந்தார்கள். வரலாற்றறிஞரும், பேராசிரியருமான சுந்தர்காளியும் உடன் வர சம்மதித்தார். ஒரு அதிகாலைப் பொழுதில் உற்சாகமாகக் கிளம்பினோம். ஒரு குகைத்தளத்தில் எல்லோரும் அமர்ந்திருக்க, 2000 ஆண்டுகளுக்கு பிற்பட்ட காலத்துக்கு சுந்தர்காளி எல்லோரையும் அழைத்துச் சென்றார். அவர் எடுத்த வகுப்புக்குப் பிறகு யானைமலையை நண்பர்கள் பார்த்த பார்வையே மாறிவிட்டது. மலையில் படிந்துள்ள மகாவீரரையும், பார்சுவநாதரையும், பாகுபலியையும், யக்ஷியையும் தொட்டுத் தொட்டு வியந்தனர்.

அந்தப் பயணம் ஏற்படுத்திய விளைவு மறக்க முடியாதது. ‘அடுத்த மாதமும் இப்படி ஒரு பயணத்தை ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார்கள் நண்பர்கள். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், பேராசிரியர் கண்ணன் போன்ற பலர் உற்சாகமூட்டினார்கள். இரண்டாம் பயணம் திருநீலக்குடிக்கு. அடுத்தடுத்து நிறைய நண்பர்கள் ஒருங்கிணைய, பசுமை நடை உருக்கொண்டது...’’ என்கிறார் முத்துகிருஷ்ணன்.

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று ‘பசுமை நடை’ பயணிக்கிறது. குடும்பம், குடும்பமாக பங்கேற்கிறார்கள். சுற்றுலாவுக்கான குதூகலத்தையும், நகரத்துப் பற்சக்கரங்களுக்குள் தொலைந்த வாழ்வை சற்று மீட்டெடுக்கிற இன்பத்தையும், வரலாற்றுச் சித்திரங்களை அதற¢கு நெருக்கமாக நின்று தெரிந்துகொள்கிற பெருமிதத்தையும் பசுமை நடை உருவாக்குகிறது. 

‘‘சரியாக ஆறரை மணிக்குப் பயணம் தொடங்கும். 10 மணிக்கு முடிந்து விடும். பரந்து விரிந்த ஒரு சரித்திர மேட்டில் ஏறி இறங்கிய உணர்வோடு திரும்புவோம். காலை உணவையும் அந்த சூழலிலேயே சாப்பிட ஏற்பாடு செய்கிறோம். அங்கு குவிந்து கிடக்கும் மது பாட்டில்களையும், கழிவுகளையும் அகற்றி சுத்தம் செய்வோம். அங்கு வசிக்கிற மக்களோடு பேசுவோம். மலையை அபகரிக்க வருபவர்களை எதிர்க்கும் தைரியத்தை அவர்களுக்கு உருவாக்குவதோடு, சட்ட உதவிகள் செய்வது, ஆவணங்களைப் பெற்றுத் தருவது போன்ற வேலைகளையும் செய்கிறோம்...’’ என்கிறார், பசுமை நடை பணிகளை ஒருங்கிணைக்கும் உதயகுமார்.

அரிட்டாபட்டி, அழகர்மலை, கிடாரிப்பட்டி, கீழவளவு, கருங்காலக்குடி, திருவாதவூர், காரைக்கேணி உள்பட ஏராளமான சமணத்தலங்களுக்கு பசுமை நடை பயணித்துள்ளது. முழுநாள் பசுமை நடையையும் ஏற்பாடு செய்கிறார்கள். ‘‘மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், ஆட்டோ டிரைவர் உள்பட எல்லா தரப்பினரும் இதில் பங்கேற்கிறார்கள். நிறைய மாணவர்கள் வருகிறார்கள். குழந்தைகளை ஆர்வத்தோடு அழைத்து வருகிறார்கள். ஒரு நடைக்கு 2000 புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

பலர் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். நிறைய புதிய பிளாக்கர்கள் உருவாகியிருக்கிறார்கள். சத்தமில்லாமல் மதுரையின் வரலாறு ஆவணமாகிக் கொண்டிருக்கிறது...’’ என்கிறார், பசுமை நடையின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் இளஞ்செழியன். 25வது பசுமை நடை ‘விருட்சத் திருவிழா’ என்ற பெயரில் பிரமாண்டமாக நடந்துள்ளது. 800க்கும் மேற்பட்டவர்களை ஒரு ஆலமரத்தின் கீழ் திரட்டி வரலாறு, சூழலியல் சார்ந்த அக்கறைகளோடு இயற்கை உணவுகளும் பரிமாறி கொண்டாடியிருக்கிறார்கள். தமிழகத்தின் பிரதான தொல்லியல் அறிஞர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

‘‘சமண அறவோர் தமிழுக்குத் தந்த நூல்கள் ஏராளம். அவற்றை அப்புறப்படுத்தி விட்டால் தமிழ் இலக்கியத் தளமே வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் சமணத்தின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சமணர் சரித்திரச் சான்றுகளை பாதுகாப்பதிலும், ஆவணப்படுத்துவதிலும் யாரும் ஆர்வம் காட்டவில்லை. அந்த வரலாறு மீதான அக்கறையை உருவாக்குவதோடு ஆவணப்படுத்தும் பணியை ஒருங்கிணைக்கவும் பசுமை நடை இயங்கப் போகிறது. எதிர்காலத் தில் மாணவர்களுக்கு மட்டுமேயான பசுமை நடையையும் முன்னெடுக்க இருக்கிறோம்’’ என்கிறார் முத்துகிருஷ்ணன்.

இதுநாள் வரையிலுமான பசுமை நடையில் தொகுக்கப்பட்ட ஆவணங்களை ‘மதுரை வரலாறு- சமணப் பெருவெளி யின் ஊடே...’ என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டுள்ளார்கள். மதுரையின் மிக நீண்ட வரலாற்றை துளித்துளியாக சேகரித்துக் கொண்டிருக்கும் பசுமை நடையில் இணைய அழைக்கலாம்: 9789730105.

வெ.நீலகண்டன்
படங்கள்:
பொ.பாலமுத்துகிருஷ்ணன்