சுய தொழில் அரசு வேலை... தலை நிமிரும் திருநங்கைகள்!



இந்த வாழ்க்கையை நாங்க தவமிருந்து வரமாவா வாங்கினோம். குரோமோசோம்களோட குழப்பத்தால ஆணும் இல்லாம பெண்ணுமில்லாம ஊசலாடிக்கிட்டு இருக்கற எங்க மனசும் உடம்பும் சக மனிதர்களால கிழிச்சி தொங்க விடப்படுது.

இதுல இருந்து மீண்டு, எங்களோட அடையாளத்தை மாத்திக் காட்டுற சின்ன முயற்சிதான் இந்த கார்மென்ட்ஸ் தொழில்’’ - உறுதியாய் பேசுகிறார் பாரதி கண்ணம்மா. திருநங்கைகளின் முன்னுதாரண மனுஷி. திருநங்கைகளுக்கு அரசு வேலை, சமூகநீதி என இவர் முயற்சிகள் பெற்றிருப்பது பெரும் வெற்றி!

‘‘ஒரு பிரைவேட் பேங்க்ல சேல்ஸ் மேனஜரா இருந்த நான், கை நிறைய சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். மனசால பெண்ணா உணர்ந்த பிறகு, ஆண் உடையில நடமாடுறது பெரிய அவஸ்தை. வேஷத்தைக் கலைச்சிட்டு எனக்கே எனக்குன்னு வாழ ஆரம்பிச்ச நிமிஷம்தான் என்னோடது. நட்பு, உறவுன்னு எல்லா மட்டத்துலயும் வந்த எதிர்ப்பு, கண்ணீர், அழுகை அத்தனையையும் ஒதுக்கிட்டு, இந்த வாழ்க்கைக்குள்ள வந்துட்டேன். நல்லா படிச்சு, சமூகத்தையும் படிச்சு எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்த எனக்கே இது எத்தனை சவாலா இருந்தது தெரியுமா?’’ என்கிறவர், கார்மென்ட்ஸ் ஆரம்பித்த கதையையும் சொல்கிறார்.

‘‘போன விநாயகர் சதுர்த்தியன்னைக்கு இந்த கார்மென்ட்ஸ ஆரம்பிச்சோம். பிள்ளையாரும் எங்கள மாதிரிதானே... நாங்க மனசும் உடம்பும் ரெண்டாகிக் கிடக்கிறோம். அவர், மனுச உடம்பும் மிருகத் தலையுமா இருக்காரு. அதான் அவர் பர்த்டே அன்னைக்கே ஆரம்பிச்சோம். திருப்பூர்ல ஒரு நிறுவனம், பத்மா சுப்ரமணியம், அவங்களுக்குத் தெரிஞ்ச ஒரு ஆடிட்டர்னு நிறைய பேரோட ஆதரவு கண்ணுக்குத் தெரியாம இதுக்குப் பின்னால இருக்கு’’ என நெகிழ்கிறார்.

‘‘மதுரை புறநகர் நாகமலை புதுக்கோட்டையில திருநங்கைகளுக்காகவே ஆரம்பிச்சிருக்கிற இந்த கார்மென்ட்ஸ்ல மூணே மூணு திருநங்கைகள்தான் இப்ப வேலை செய்யறாங்க. நாள் முழுக்க வேலை செஞ்சாக்கூட நாங்க 300 ரூபாதான் சம்பளமா தர முடியும். ஆனா, ஒரு தெரு முழுக்க கடைகள்ல ஏறி இறங்கினா 500 ரூபா கிடைக்கும்னு திருநங்கைகள் இந்த வேலைக்கு வர மறுக்கறாங்க’’ என வேதனைப்படும் பாரதி கண்ணம்மா, அதற்கான காரணத்தையும் புரிந்தே பேசுகிறார்.

‘‘மரபணு சிக்கலில் மாட்டிக்கிட்டு உணர்ச்சிக் குழப்பத்துல பதிமூணு வயசுக்குப் பிறகு ஒரு திருநங்கை அனுபவிக்கற அவஸ்தையை வார்த்தையால சொல்ல முடியாது. இதை அறிவியல்ரீதியா அணுகறதுக்கு இன்னும் நம்ம நாட்டுல எந்த வீடும் தயாராகல. குடும்பம், சமூகம் எல்லாம் புறக்கணிச்ச பிறகு, தெரியாத நகரத்துல சொந்த அடையாளத்தை தேடி நகரும் ஒரு திருநங்கை, பசிக்கிற வயித்துக்காக செய்யற தொழில்... பிச்சை எடுக்கறதும் பாலியல் தொழிலும்தான்.

ஒரு குடிசைப் பகுதியில சாதாரணமா ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடற குடிசை, எங்களுக்குன்னா 2000 ரூபாயா மாறிடுது. இதனால பணத்தேவை அதிகமாகுது. திருநங்கைகளோட மன பலவீனங்களைப் பயன்படுத்தி காதல்... கல்யாணம்னு ஆசை வார்த்தைகளைச் சொல்லி நிறைய பேர் ஏமாத்திடறாங்க. இதனால திருநங்கைகள் பலர் குடிக்கு அடிமையாகி இருக்காங்க. பலபேர் தற்கொலை செஞ்சிக்கிறாங்க’’ என வருந்தும் இவர், திருநங்கைகளுக்கு மனநல ஆலோசனை தரவும் அவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்களை அரசு உதவியோடு அமைக்கவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மதுரை ஊர்க்காவல்படையிலும், அரசு சட்ட ஆலோசனை மையங்களிலும் இவர் முயற்சியால் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

‘‘திருநங்கைகளுக்கு அரசு வேலை கிடைக்க ஆரம்பிச்சா, அந்த சம்பளத்துக்காவது குடும்பம் எங்களை ஏத்துக்க ஆரம்பிக்கும். மெல்ல சமூக புறக்கணிப்புல இருந்து மீள முடியும். இது நான் மட்டும் செஞ்சு முடிச்சிடுற காரியமில்ல. ஊர் கூடி தேர் இழுக்கற மாதிரி... எனக்கும் பிரியாபாபுவுக்கும் பலவகையில கை கொடுத்து மேலேற்றிவிடும், நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் எல்லாம் நன்றிக்கு உரியவர்கள். இது போல நிறைய பேர் சேர்ந்து, நாடு முழுக்க செய்ய வேண்டிய காரியம் இது!’’ என நெகிழும் பாரதி கண்ணம்மா, மதுரையில் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினரும் கூட. இந்த அமைப்பு மூலம் இவர் 19 வழக்குகளை விசாரித்து சுமுகமாக தீர்த்து வைத்திருப்பதோடு, வராத வங்கிக்கடன் ரூ.26 லட்சத்தையும் வசூலித்திருக்கிறார்.

‘‘திருநங்கையா நாங்க பிறந்தது படைச்சவனோட கவனக்குறைவு. இந்தக் குறைபாட்டை எல்லா மட்டத்துலயும் எதிர்கொண்டு பிளஸ்ஸா மாத்தற முயற்சியில இருக்கோம். அதுக்கு ரொம்ப காலம் பிடிக்கும். எங்களோட விடியலுக்கான முயற்சியில சக மனிதர்கள் கொடுக்கற ஊக்கம்தான் முக்கியம். 2014 எங்க வாழ்க்கையில பல வெளிச்சங்களைத் தரும்னு நம்பறோம்’’ - சொல்லிப் புன்னகைக்கும்போதே நம்பிக்கை மின்னல் பளிச்சிடுகிறது!

-எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: பொ.பாலமுத்துகிருஷ்ணன்