நானிக்கு பத்மினி மேல் காதல்!



ராக்கெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் விஜய்சேதுபதியின் அடுத்த டார்கெட் ‘பண்ணையாரும் பத்மினியும்’. அறிமுக இயக்குனர் அருண்குமாருக்கு இது முதல் படம் என்றால் நம்ப மறுக்கும் அளவுக்கு படத்தின் டைட்டில், டிசைன்களிலேயே கவனம் ஈர்க்கிறார். எடிட்டிங்கில் இருந்தவருடன் பேசினோம்.

‘‘கார் ஓட்டத் தெரியாத ஒரு பண்ணையார்... அவருக்கு டிரைவராக வரும் ஒரு இளைஞன்... இவர்கள் இருவரையும் இணைக்கும் பழைய மாடல் பத்மினி கார் மற்றும் சில உறவுகளைச் சுற்றிப் பின்னப்பட்ட ஒரு கதைதான் இது. 1990களின் பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில் பண்ணையாராக ஜெயப்பிரகாஷ், டிரைவர் முருகேசனாக விஜய்சேதுபதி நடிக்கின்றனர். விஜய்சேதுபதியின் காதலியாக ஐஸ்வர்யா, பீடை என்கிற நண்பர் கேரக்டரில் பாலசரவணன், பண்ணையாரின் மகளாக நீலிமா, மனைவியாக துளசி மேடம் என்று எல்லா கேரக்டருமே ஸ்பெஷல். ஒவ்வொரு காட்சிக்கும் ஆடியன்ஸ் பக்கம் இருந்து கை தட்டல் வேணும் எங்களுக்கு. அது கிடைக்கும்னு நிச்சயமா சொல்லலாம்.’’

‘‘இந்த டைட்டிலுக்கே ஏகப்பட்ட வரவேற்பாமே?’’ ‘‘அட, அதை ஏன் கேக்கறீங்க! டைட்டில் வெளியிட்ட மறுநாளே ஏகப்பட்ட போன். ‘கரகாட்டக்காரன்’ படத்தில் காருக்கும் சொப்பன சுந்தரிக்கும் இடையேயான லிங்க் பற்றி கவுண்டமணியிடம் செந்தில் கேட்பாரே... அது மாதிரி ‘ஆமா... இந்த பத்மினிங்கறது யாரு?’ன்னு எக்கச்சக்க விசாரிப்பு. ‘பிரீமியர் பத்மினி கார்தாங்க அது’ன்னு பதில் சொல்றதுக்குள்ள போன் சார்ஜே இறங்கிடுச்சு. படத்தில எல்லா கேரக்டர்களும் முடிவாகிடுச்சு. ஆனா, இந்த பத்மினி காரை தேடிப் பிடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அந்த மாடல் காரை வச்சிருக்கும் எல்லாருமே ஷூட்டிங்கிற்கு காரைத் தரவோ விற்கவோ விரும்பல. ஒரு வழியா நாங்களே பழைய பத்மினி காரை வாங்கி அதை ரெடி பண்ணி ஷூட்டிங் போனோம். படத்தில் அந்தக் காருக்கும் ஒரு ‘கனமான’ கேரக்டர் உண்டு!’’

‘‘விஜய்சேதுபதி படம்ங்கிற ரசிகர்களோட எதிர்பார்ப்புக்கு என்ன ட்ரீட் இருக்கும்?’’ ‘‘இவ்வளவு உயரத்துக்கு வந்தும், தனக்கு மட்டுமே படத்தில் முக்கியத்துவம் இருக்கணும்னு நினைக்காமல் கதை, மற்ற கதாபாத்திரங்களையும் உள்வாங்கி எல்லாமே திருப்தியாக இருக்கணும் என நினைப்பவர் விஜய்சேதுபதி. அவருடைய டேஸ்ட்டுக்கும் ஆடியன்ஸோட ரசனைக்கும் நல்ல தீனியா இந்தப் படம் இருக்கும். படத்தில் காமெடி மட்டுமில்லாமல் சென்டிமென்ட்டிலும் எல்லோரோட மனசிலும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ பதிவார்கள். சிறப்புத் தோற்றத்தில் சினேகாவும் ‘அட்டக்கத்தி’ தினேஷும் நடிச்சிருக்காங்க. அது என்ன கேரக்டர் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.’’

‘‘டெக்னிக்கலா என்ன ஸ்பெஷல்?’’
‘‘ஏற்கனவே நான் இயக்கி எல்லோருடைய பாராட்டுக்களையும் அள்ளிக் குவித்த குறும்படத்தைத்தான் இப்போ சுவாரஸ்யமான திரைக்கதை பூட்டி படமாக்கியிருக்கேன். என்னுடைய குறும்படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன்தான் இந்தப் படத்துக்கும் இசை. அவர் ஹாரிஸ் ஜெயராஜிடம் சவுண்ட் எஞ்சினியராக இருந்தவர். அபார திறமைசாலி. பாடலுக்கான சூழ்நிலையைச் சொன்னதும் கடகடவென்று முப்பது டியூன்கள் கொடுத்தார். கம்போஸிங் முடிந்ததும் இதை எப்படி படமாக்கப் போறோம் என்கிற பதற்றம் தொற்றிக்கொண்டது. கேமராமேன் கோகுல் பினோய் தன்னோட ஒளிப்பதிவில் அந்தப் பாடல்களை அற்புதமாகப் படமாக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்துக்கு முதுகெலும்பாக அமைந்திருக்கிறது.’’
‘‘ஐஸ்வர்யாவை விஜய்சேதுபதி தான் சிபாரிசு செய்தார்னு டாக் இருக்கே?’’

‘‘ஏங்க? நல்லாதானே போய்க் கிட்டு இருக்கு..? திடீர்னு ஸ்டியரிங் ஒடிக்கிறீங்களே... அதெல்லாம் எதுவும் இல்லை. இந்த காம்பினேஷன் யதேச்சையாக அமைந்ததுதான். எல்லா கேரக்டர்களும் முடிவான பிறகு, கார்மென்ட்ஸில் வேலை பார்க்குற மாதிரியான கதாநாயகி கேரக்டருக்கு மட்டும் யாரும் செட் ஆகலை. கடைசியா ஐஸ்வர்யாதான் பொருத்தமாக இருப்பார்னு முடிவு பண்ணி, அவரோட கால்ஷீட் வாங்கினோம். மற்றபடி ஐஸ்வர்யாவை விஜய்சேபதி சிபாரிசு பண்ணல. அதுதான் உண்மை.’’ ‘‘ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு. அந்தக் காரை இப்போ யார் வச்சிருக்காங்க?’’

‘‘ஆஹா... மறுபடியும் அதே காமெடியா? உண்மையை சொல்லப் போனா, படத்தில் பணிபுரிந்த எல்லோருக்குமே அந்தக் கார் மேல காதல் வந்திடுச்சு. தயாரிப்பாளர் கணேஷ் அந்தக் காரை வச்சிக்கலாம்னு முடிவு பண்ணினப்போ, நடிகர் நானி அதைக் கேட்டு வாங்கிட்டார். யெஸ், இந்தப் படத்தோட தெலுங்கு ரீமேக் உரிமையை நானி வாங்கியிருக்கார். அதுல விஜய்சேதுபதி கேரக்டரை அவர் பண்ணப் போறார். இன்னொரு பிரீமியர் பத்மினி காரை தேடிப் பிடிச்சு வாங்குறது சிரமம்னு சொல்லி, நாங்க யூஸ் பண்ணின காரையே வாங்கிட்டார். ஆக, தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழி ரசிகர்களையும் இந்த பத்மினி கவரப் போகுது...’’

- அமலன்