நியூஸ் வே



விஜய்யுடன் மீண்டும் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ், ‘‘எல்லாம் ரெடி. தலைப்புதான் என்ன வைக்கிறதுன்னு குழப்பமா இருக்கு’’ என்று நகம் கடிக்கிறார். ‘வாள்’, ‘ஆம்’ ஆகிய தலைப்புகள் தற்போது பரிசீலனையில் இருப்பதாக முருகதாஸ் வட்டாரங்களில் செய்தி வட்டமடிக்கிறது.

ஸ்ருதி ஹாசனை சில தமிழ்ப் படங்களில் நடிக்கச் சொல்லி கமலிடம் சில டைரக்டர்கள் சிபாரிசுக்கு போயிருக்கிறார்கள். ‘‘ஸ்ருதி கால்ஷீட், ஸ்ருதியிடம் மட்டுமே கிடைக்கும்’’ எனச் சொல்லி அவர்களுக்கு ‘விஸ்வரூபம் 2’ டீசர் காட்டி அனுப்பி வைத்திருக்கிறார் கமல்.

கமலின் அடுத்த படமான உத்தம வில்லனில் டைரக்டர் பாலசந்தர் மிக முக்கியமான ரோலில் வருகிறார். இதற்காக அவரை பெரிய தாடி, மீசையெல்லாம் வளர்க்கச் சொல்லி விட்டார் கமல். ஏதோ புதுமுகம் மாதிரி உற்சாகமாக இருக்கிறார் கே.பி. திருப்பிச் செய்கிற மரியாதை எவ்வளவு அழகு!

அஞ்சலி தேவி என்றதுமே ‘அழைக்காதே... நினைக்காதே...’ என்ற ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ படத்தின் பாடல்தான் செவிகளில் ரீங்காரமிடுகிறது. அழகுப் பதுமையாகவோ அழுக்காச்சி பொம்மையாகவோ பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் பயன்படுத்தப்பட்டு வந்த காலகட்டத்தில் வீரம் செறிந்த நடிகையாக ரசிகர்கள் மனசில் ஆழப் பதிந்தவர் அஞ்சலி தேவி.

சாதனையாளர்கள் பலருக்கும் முதல் அடி சறுக்கலாகவே அமையும். அஞ்சலி தேவியும் அதை சந்தித்தவர்தான். ‘ராஜா ஹரிச்சந்திரா’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், எல்.வி.பிரசாத் தயாரிப்பில் ‘கஷ்ட ஜீவி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். என்ன காரணத்தினாலோ படம் பாதியில் நின்று போனது.

 அடுத்து நடித்த ‘கொல்லபாமா’ என்ற படம்தான் அஞ்சனி குமாரி என்கிற அஞ்சலி தேவி கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம். அதன் பிறகு அஞ்சலி தேவியின் சினிமா பயணத்தில் அதிர்ஷ்டக் காற்று வீசத்தொடங்கியது.

‘கணவனே கண் கண்ட தெய்வம்’, ‘அடுத்தவீட்டுப் பெண்’ படங்கள் வெளிவந்த பிறகு வெகு காலத்திற்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு உட்பட சுமார் 500 படங்களுக்கு மேல் அரிதாரம் பூசியுள்ளார். நடிகர் சங்கத் தலைவி, தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டி வியக்க வைத்தவர். 86 வயதில் மண்ணை விட்டுப் பிரிந்தாலும் ரசிகர்களின் மனசில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

சிம்பு இந்த வருடத்திற்கு இரண்டு படங்களைத் தர முடிவு செய்து பயங்கரமாக உழைக்கிறார். அதிகமாக மெனக்கெட்டு பாண்டிராஜ், கௌதம் மேனன் படங்களுக்கு இரவு பகல் பார்க்காமல் வேலை செய்கிறார். சிம்புவைப் புரிந்தவர்களுக்கு இதுதான் ஆச்சரியம்!

சைலன்ஸ்


பழைய காதலர்கள் இணைந்து நடிப்பதை உன்னிப்பாகக் கண்காணிக்கச் சொல்லி ஆள் வைத்திருக்கிறாராம் புதுக் காதலி நடிகை. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு யதேச்சையாக வருவது போல அவர் எந்த நேரமும் வரலாம் என யூனிட்டில் நினைக்கிறார்கள். எப்பவும் செல்போனை ஆஃப் செய்துவிட்டே நடிக்கிறார் நடிகர். இதனால் மகிழ்ந்திருப்பது இயக்குநர்தான். சிலுக்கு மாதிரி கண்கள் கொண்ட நடிகையோடு நடிப்பதை விட்டு ஒதுங்கினார் அந்த பழைய டி.வி நடிகர். இப்போது எங்காவது எதிரே வந்தால்கூட வீட்டிற்கு பயந்து வேறு பக்கம் போகிறாராம். ‘‘என்னங்க... இந்த அளவுக்கு நடந்துகொள்ள நான் என்ன ஆவியா?’’ என நண்பர்களிடம் பொருமுகிறார் நடிகை.

வெளிநாட்டுத் தலைவர்கள் விருந்தினர்களாக இங்கு வரும்போது தங்குவதற்காக ஜனாதிபதி மாளிகையில் தனியாக விருந்தினர் பகுதி உள்ளது. இரண்டு அடுக்குகளில் 14 அறைகள். எல்லாமே ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதிகளுக்கு இணையான தரத்தில் உள்ளவை. மண்டேலா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இங்கு தங்கியிருக்கிறார்கள். காலப்போக்கில் பராமரிப்பின்றி கடந்த 19 ஆண்டுகளாக இவை மூடப்பட்டிருந்தன. பிரணாப் முகர்ஜி வந்ததும் இவற்றை புனரமைக்க உத்தரவிட்டார். பழங்கால வடிவம் மாறாமல், அதே கம்பீரத்தோடு புதுப்பிக்கப்பட்ட இந்த அறைகளுக்கு நாளந்தா, ஹிமாலயா, கங்கா என இந்தியப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. நீலகிரி என்கிற நம்ம ஊர்ப் பெயரும் இதில் அடக்கம்.

யாருடனும் சேர்ந்து நடிக்க அஞ்சமாட்டார் விஜய் சேதுபதி. இப்போது தனுஷ் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைக்க ராதிகா சரத்குமார் முயற்சி செய்கிறார். டீல் முடிகிற தருணத்தில் இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அரை மணி நேர கேரக்டர்தானாம். அதுவும் ‘மௌன ராகம்’ கார்த்திக் மாதிரி ஷார்ப் நடிப்பாம். சேதுபதிக்கு பயமே இல்லையா!

‘கோச்சடையான்’ படம் எப்போது வெளிவரும் என்பது யாருக்குமே புரிபடாமல் இருக்கிறது. பாடல் வெளியிடுவது மட்டுமே பலமுறை தள்ளி
வைக்கப்பட்டுவிட்டது. ‘‘என்னதான் நடக்கிறது இந்தப் படத்தில்’’ என மகளிடம் விசாரணை வைத்தாராம் ரஜினி. ‘‘சரியான டைம் சொல்லுங்கள்’’ என கண்டிப்பும் காட்டியிருக்கிறார்.

ஆர்யாவின் கட்டுப்பாட்டிலிருந்து அனேகமாக முழுவதும் விலகிவிட்டார் நயன்தாரா. ஆனால், நட்பு நீடிக்கிறது. இரண்டு பேருமே எதிர்காலத்திற்கு இதுதான் நல்லது என பேசி வைத்துக் கொண்டே இந்த இடைவெளியை அனுசரிக்கிறார்கள்.

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டுக்குப் போன இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அங்கு மறக்காமல் விசிட் அடித்தது ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹோலோகாஸ்ட் நினைவு மியூசியத்துக்கு. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நாஜி படைகளால் கொல்லப்பட்ட 60 லட்சம் யூதர்களின் நினைவாலயம் அது. படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் புகைப்படங்களைப் பார்த்தபோது ராஜபக்ஷே மனதில் என்ன தோன்றியிருக்கும்?

வருஷத்திற்கு இனி கண்டிப்பாக மூன்று படங்களைக் கொடுக்க வேண்டும் என அஜித்தும், விஜய்யும் முடிவு செய்துவிட்டார்கள். அதற்காக கதைகளையும் கேட்கத் தொடங்கி விட்டார்கள். ஒரு சமயத்தில் ஒரு படம் மட்டுமே செய்யும் அஜித், இப்போது மூன்று படங்களுக்கான அட்வான்ஸ் பெற்றிருக்கிறார்.

‘விஸ்வரூபம் 2’வில் நீண்ட நெடும் காலத்திற்குப் பிறகு முத்தக் காட்சியில் சூடு கிளப்பியிருக்கிறார் கமல். அது பூஜா குமாருக்கா... ஆண்ட்ரியாவுக்கா... இல்லை, இரண்டு பேருக்குமே பகிர்ந்து அளித்துள்ளாரா... என்பதுதான் படம் வெளிவருவது வரைக்கும் பாதுகாக்கப்படுகிற ரகசியம்.