எதிர்ப்பு



சுடச்சுட பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது... ‘சிறந்தது எது? காதல் திருமணமா? பெற்றோர் பார்த்து செய்து வைக்கிற திருமணமா?’ இரு அணியிலும் பேச்சாளர்கள், சினிமா பாடல்கள், நகைச்சுவைத் துணுக்குகள் எனக் கலந்துகட்டிப் பேசி மக்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

சிறப்பு ஏற்பாடாக பார்வையாளர்களிடமிருந்து இரண்டு பேர் மேடை ஏற்றப்பட்டார்கள். காதல் திருமணத்தை ஆதரித்து ஒரு இளைஞன் கவிதையாய் பேசிவிட்டு போனான். அடுத்துப் பேச வந்தார் ந டுத்தர வயது நபர் ஒருவர். பெற்றோர் பார்த்து செய்து வைக்கிற திருமணமே சிறந்தது என்ற தலைப்பில் நிஜமாகவே ஆதங்கத்தோடும் மனக்கவலையோடும் தன் கருத்துக்களை பகிர்ந்தார் அவர்.

காதல் திருமணங்களால் ஏற்படும் கேடுகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் பற்றிய அவருடைய உணர்ச்சிகரமான பேச்சு, அவையோரை அசரடித்தது.
‘காதலை இவ்வளவு ஆக்ரோஷமாய் எதிர்க்கிறாரே... ஒருவேளை காதலித்து தோல்வியடைந்தவராய் இருப்பாரோ!

அல்லது, இவருடைய மகள் காதலித்து ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டு, இவருக்கு தீராத அவமானத்தை கொடுத்து விட்டதால் இருக்குமோ!’ என எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

நடுவர் அவரிடமே கேட்டார்...‘‘காதல் திருமணத்தை இவ்வளவு தீவிரமா எதிர்க்கறீங்களே... ஏன்?’’‘‘நான் ஒரு கல்யாண புரோக்கர்!’’          

சுபாகர்