உதயநிதிக்கு கதை தேடிய சந்தானம்!



‘‘ஒவ்வொரு ஹீரோவுக்கும், டைரக்டருக்கும் ரெண்டாவது படம்தான்... ஆசிட் டெஸ்ட்! ஏன்னா, வெளியே எதிர்பார்ப்பு இருக்கும்... உள்ளே கொஞ்சம் தலைக்கனம் ஏறும். ‘சரி, பார்த்துக்கலாம்’னு மனசு சொல்லும். அப்படி எதையும் மனதில் ஏத்திக்காம நானும் டைரக்டர் பிரபாகரனும் செய்த படம்தான் ‘இது கதிர்வேலன் காதல்’.


நல்ல மரியாதையான வெற்றி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. அடுத்து, ‘நண்பேன்டா’ன்னு இன்னும் அழகாக அருமையா ஒரு கதை சொல்லப் போறோம். இதில் காதல், சிரிப்பு, கனவுன்னு வாழ்க்கை கொஞ்சம் அழகா இருக்கும்...’’ - ரிலீஸ் பரபரப்புக்கு இடையில் பேசுகிறார் உதயநிதி. தமிழ் சினிமாவின் நம்பிக்கை முகம்.

‘‘ ‘ஓகே ஓகே’ பார்த்த பின்னாடி உங்க மேல நம்பிக்கை வந்தாச்சு. இப்போ எப்படியிருக்கு?’’ ‘‘முதல் படம் வந்தபோது எனக்கு அடிப்படையில எந்த நம்பிக்கையும் இல்லை. ஒரே படபடப்பு. ஆனா, என்னை கௌரவப்படுத்தி அடையாளப்படுத்தி னாங்க தமிழ் ஜனங்க. 175 நாட்கள் கரை புரண்டு ஓடுச்சு படம். எங்கே டி.வியை திறந்தாலும், பார்த்தாலும் எங்க காம்பினேஷன் காமெடிதான். ரெண்டாவது படத்துக்கு அவசரமே இல்ல! எனக்கு நல்லா கோலம் போட வரும்னு வச்சுக்கங்க... நிதானமாவும் போடலாம். சீக்கிரமாவும் போடலாம். கோலம் நினைச்ச மாதிரி வருதாங்கிறதுதான் எனக்கு முக்கியம்.

எனக்காக சந்தானமும் கதை தேடினார். யாராவது சொன்ன கதையில ஒரு சின்னப் பொறி கிடைச்சாலும் எனக்கு அனுப்பி வைப்பார். நானும் ‘அவருக்குச் சொல்லுங்க’ன்னு அனுப்பி வைப்பேன். என்னை ஆச்சரியப்படுத்தியது அவரோட அக்கறை. அப்பதான் ‘சுந்தரபாண்டியன்’ பார்த்தேன். எனக்கு பிரபாகரன் அப்ரோச் பிடிச்சிருந்தது. எமோஷனலிலும் விளையாடுறார்.

காமெடியிலும் களை கட்டுறார். அவரையே வரச்சொல்லி நாங்க கதை கேட்டப்போ அருமையாக இருந்தது. அப்பா - பையனோட துல்லியமான உறவு பேசப் பட்டிருக்கு. அதை ஓவர் சென்டிமென்ட்டா அழுது குவிக்காம பார்த்துப் பார்த்து செய்திருக்கார். முதல் பாதியில் என் முதல் படம் மாதிரி காமெடியில் புகுந்தவர், அடுத்த பகுதியில் ‘சுந்தரபாண்டியன்’ மாதிரி எமோஷனில் பின்னுகிறார். அவருக்கான எந்த இடத்திலும் குறை வைக்கலை. இப்ப, ‘குடும்பத்தோட வாங்க’ன்னு சொல்லிவிட்டு எதை எதையோ காட்டுறாங்க. அப்படியில்லாமல் ஒரு சுவாரஸ்யமான குடும்பத்தின்
அழகான பக்கங்களை யும், நல்ல காதலையும் இதில் பேசலாம்.’’

‘‘நயன்தாரா உள்ளே வந்தது எப்படி?’’
‘‘எனக்கு ‘ஆதவன்’ எடுக்கும்போதே நயனை நல்லாத் தெரியும். என்னோட சின்ன அறிமுகம் அந்தப் படத்தில் இருக்கு. அந்த சீன்ல அவங்களும் உண்டு. எப்பவும் என்னோட குட்புக்கில் இருக்கிற வெரிகுட் கேர்ள். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ல ஹன்சிகாவுக்கு முன்னாடி நாங்க கேட்டது நயன்தாராவைத்தான். ‘ஸாரி உதய்... இனிமே நான் நடிக்கறதாவே உத்தேசமில்லை’ன்னு ஒரே வரியில சொல்லிட்டாங்க. அப்புறம்தான் ஹன்சிகா ஸ்கிரிப்ட்டில் இறங்கினாங்க. இப்போ கேட்டதும், மேக்ஸிமம் எவ்வளவு உற்சாகமா நடிக்க முடியும் என்று அளவு இருக்கோ, அது மாதிரி நடிச்சுக் கொடுத்தாங்க.’’

‘‘இரண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்களா?’’‘‘ஏற்கனவே ஃப்ரெண்ட்ஸ்தானே. இது பரவாயில்லை, முதல் பதினைந்து நாட்கள் டைரக்டர் என் கண்ணிலேயே நயனைக் காட்டலை. நானும் தினம் தினம் ‘இன்னிக்காவது ஸ்பாட்டுக்கு வந்திடுவார்’னு பார்த்தால், சந்தானம்தான் வந்துக்கிட்டு இருந்தார். ‘என்ன சார்... அவங்களை ஆளையே காணோம்’னு யதார்த்தமா, சாவகாசமா பேசுற மாதிரி கேட்டேன். என்னை சரியாப் புரிஞ்சுக்கிட்டு ‘நயன்தாரா அடுத்த ஷெட்யூல் சார்’னு சொல்லிட்டார்.

எனக்கும் அவங்களுக்கும் காம்பினேஷன் குறைவு. ஆனா, பாடல் காட்சியில் நயன்தாரா காட்டிய அக்கறை எனக்குப் பிடிச்சது. ‘ஓகே ஓகே’யில் என்னோட ஸ்டெப்ஸ் முன்னேறணும்னு சொன்னவங்களை ‘வெரிகுட்’ சொல்ல வைக்க நினைச்சேன். அதுக்காக மெனக்கெட்டதில் அவங்க பங்கும் அதிகம். ‘இன்னும் அழகா... இன்னும் பெட்டரா’ன்னு நான் அடுத்தடுத்த டேக் போகும்போது, அவங்க சரியா செய்திருந்தாலும் புன்சிரிப்பு மாறாம ஸ்டெப்ஸ் போடுவாங்க. காமெடிகளில் சொல்லவே வேணாம்... சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க. ஓகே ஆன ஷாட்டில் கூட, அவங்க ஓங்கிச் சிரிச்சு அடுத்த ஷாட்டுக்கு போன இடங்கள் இதில் அநேகம்!’’

‘‘இப்பவும் சந்தானம்தான் உங்களுக்கு சரிக்கு சரியா வர்றாரா?’’
‘‘நிஜமாகவே என் மேல் அவருக்குப் பிரியம் உண்டு... அதேதான் எனக்கும்! டென்ஷன் தாங்காம ஓடுற மாதிரி எதையும் சந்தானம் செய்வது கிடையாது. அவரோட டீமை வச்சுக்கிட்டு டப்பிங் வரைக்கும் மெருகேத்திக்கிட்டே போறார். நம்மளை இது முடியும்னு நினைக்க வச்சு, நம்மளையும் உள்ளே இறங்கி ஜெயிக்க வைக்கிற மனசு அவருடையது. கேமராவுக்கு வெளியே பேசிக்கிறதைத்தான் நானும் அவரும் கேமராவுக்கு முன்னாடியும் பேசிக்கிறோம்.’’

‘‘தொடர்ந்து ஹாரிஸ், பாலசுப்ரமணியெம்..?’’ ‘‘நீங்க ஒண்ணு. மூணாவது படம் ‘நண்பேன்டா’விலும் அவங்கதான். நல்லா கொண்டு போய் சேர்க்கிறாங்க. ஹாரிஸ் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் போட்ட, ‘வேணாம் மச்சான் வேணாம்...’ பாட்டு, பட்டிதொட்டியெங்கும் குட்டிப் பசங்ககிட்டே கூட கொண்டு போய்ச் சேர்த்தது.

பாலசுப்ரமணியெம்முக்கு எதெல்லாம் வீக் பாயின்ட்ஸ்னு தெரியும். அழகா தவிர்ப்பார். நான் என்னை ஒரு நடிகனா பார்க்கிறதே இல்லைங்கறதுதான் நிஜம். நல்ல ரசிகனாதான் என் படத்தையும் பார்ப்பேன். எனக்குள்ள இருந்த ரசிகன்தான் ‘அடுத்த கட்டத்துக்குப் போ...’ன்னு நடிக்கிறதிலும் தள்ளிவிட்டான். ஆனா, அதனோட பெரும் வர்த்தக வெற்றியில தொடங்கி, இன்னிக்கு நீங்க என்னோட பேசுறது வரைக்கும் அதுதான் காரணம்!’’

- நா.கதிர்வேலன்