நிழல்களோடு பேசுவோம்



கடைப்பெண்கள்இந்த உலகில் மிகவும் தனிமையாக இருக்கும் மனிதர்களிடம்கூட உரையாடக் கூடியவர்கள் என்றால், அவர்கள் விற்பனைப் பிரதிநிதிகள்தான். ஒரு காலத்தில் தனிமையின் பனிப்பொழிவு அடர்த்தியாக இறங்கும் பகல் பொழுதுகளில் என்ன செய்வது என்று தெரியாமல், பேசுவதற்கு யாருமில்லாமல் வெறுமனே அமர்ந்திருப்பேன்.

அப்போது யாரேனும் ஒரு விற்பனைப் பிரதிநிதி வருவது இந்த உலகத்தை மனிதத்தன்மைமிக்கதாக மாற்றுவது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தும். எனக்கு அவர்களிடம் வாங்க பெரும்பாலும் ஒன்றுமே இருக்காது. ஆனாலும் அவர்களிடம் எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பேன்.

ஒரு விற்பனைப் பிரதிநிதி ஒரு நாளைக்கு என்னைச் சந்திப்பதுபோல எத்தனை பேரை சந்திக்கக்கூடும்? எல்லா மனிதர்களுமே அவர்களுக்கு ஒன்றுதானா? அவர்கள் வீடு திரும்பும்போது அன்றைக்கு சந்தித்த யாரையாவது நினைவில் வைத்திருப்பார்களா? வைத்திருக்கலாம். தனது தந்தையின் சாயலுள்ள முதியவரையோ, மிகவும் வசீகரமான ஒரு பெண்ணையோ, சந்தித்த ஒரு நாளில் அவர்களுக்கு நினைத்துப் பார்க்க ஏதாவது இருக்கலாம். அல்லது மிக மோசமான அவமானமோ ஏமாற்றங்களோ நடந்த நாளில், அவர்கள் நினைத்துப் பார்ப்பதற்கு ஏதாவது இருக்கலாம்.

பெருநகரங்களின் அபார்ட்மென்ட்டுகள், அலுவலக வளாகங்களில் ‘விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அனுமதி இல்லை’ என்ற வாசகங்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள்மீது ஆழ்ந்த வெறுப்பை அந்த வாசகங்கள் உமிழ்கின்றன. பல இடங்களில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற போலியான விளம்பரப் பலகைகள் இருக்கும். பெரும்பாலும் அவை விற்பனைப் பிரதிநிதிகளுக்காகவே வைக்கப்பட்டிருக்கின்றன. விற்பனைப் பிரதிநிதிகள் நப்பாசையுடன் அந்த வீடுகளின் கேட்டை எட்டிப் பார்த்துவிட்டு நடந்துபோவார்கள். விற்பனைப் பிரதிநிதிகளாகப் பணியாற்றிய எனது நண்பர்கள் பலர், மனிதர்களின் நடத்தைகள் குறித்த விநோதமான கதைகளை ஏராளமாகக் கூறியிருக்கிறார்கள். எதிர்பாராத நேரங்களில் வீடுகளின் கதவுகளைத் தட்டிக் கண்ட சங்கடமான காட்சிகளைக் கூறியிருக்கிறார்கள். அவற்றில் பல அந்தரங்கமானவை. இன்னும் பல அவலமானவை. சில காட்சிகள் எவ்வளவு காலம் ஆனாலும் புரிந்துகொள்ள முடியாதவை.

வீடுகளுக்குள் எப்படி விதவிதமான மனிதர்கள் இருக்கிறார்களோ அப்படித்தான் விற்பனைப் பிரதிநிதிகளிலும் விதவிதமான ஆட்கள். பொய் சொல்வதில் கைதேர்ந்தவர்கள், உண்மைகூட சொல்லத் தெரியாமல் கூச்சத்துடன் தடுமாறுகிறவர்கள், தாங்கள் விற்க விரும்பும் பொருளைப் பற்றி மட்டுமே பேசுகிறவர்கள். நம்மிடம் கொஞ்சம் இணக்கம் கூடியதும் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் கதையைச் சொல்லத் தொடங்குபவர்கள். அரை மணி நேரம் ஒரு பொருளையோ சேவையையோ நம்மிடம் விற்கப் போராடி விட்டு, வேலை நடக்காதபோது புன்முறுவல் மாறாமல் ‘‘கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?’’ என்று கேட்பவர்கள்.

ஒருமுறை உடற்பயிற்சிக் கருவிகளை விற்கும் ஒரு விற்பனைப் பிரதிநிதி வந்தார். அவரிடம் ஒரு பொருளை வாங்குவதற்காக ஆர்டர் கூட எழுதிக் கொடுத்துவிட்டேன். திடீரென அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. ‘‘சார்... இது உங்களுக்கு வேண்டாம். இதைப் பயன்படுத்தினால் உங்களுக்கு முதுகு வலி வரலாம்’’ என்று சொல்லிவிட்டு, அந்தக் கருவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஆயிரம் பேர் ஆயிரம் பொருள்களை தவறான தகவல்களின் அடிப்படையில் விற்கலாம். ஆனால் யாரோ ஒரு விற்பனைப் பிரதிநிதி தனது தொழில்சார் நோக்கங்களுக்கு அப்பால் ஒரு அறத்தை வெளிப்படுத்துகிறார்.

என் சிநேகிதி ஒரு முறை ஒரு சம்பவத்தைச் சொன்னாள். அவள் அழகுசாதனப் பொருள்கள் சிலவற்றை வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்தபோது அவள் சிலவற்றைத் தேர்வு செய்திருக்கிறாள். அப்போது அங்கே இருந்த ஒரு கடைப்பெண் அவள் காதருகே குனிந்து ரகசியக் குரலில், ‘‘மேடம்! இதெல்லாம் இல்லாமலே நீங்க அழகாகத்தான் இருக்கீங்க... எதற்கு இதையெல்லாம் வாங்க வேண்டும்?’’ என்றாளாம்.

விற்பனைப் பிரதிநிதிகளுக்கு சில எந்திரமயமான பயிற்சிகள் அந்தந்த நிறுவனங்களால் அளிக்கப்படுகின்றன. அவற்றை ஒரு இயந்திரம் போலவே செயல்படுத்துகிறவர்கள் ஒரு சிறந்த விற்பனைப் பிரதிநிதி ஆவதில்லை. அவர்களிடம் வாடிக்கையாளர்கள் எரிச்சலடைகிறார்கள். அவர்களை நம்ப மறுக்கிறார்கள். அவர்களை ஒரு நிறுவனத்தின் எடுபிடியாக மட்டுமே பார்க்கிறார்கள். ஒரு விற்பனைப் பிரதிநிதி வாடிக்கையாளர்களிடம் தனது சொல்லாலும் உடல்மொழியாலும் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ‘நிறுவனத்தின் நலன் மட்டுமல்ல, வாடிக்கையாளர்களின் நலனும் எனக்கு முக்கியம்’ என்று தான் கருதுவதை உணர்த்த வேண்டும். தனது பொருளில் உள்ள குறைபாடுகளைக்கூட தயக்கமின்றி சொல்லி, சிறந்த ஒன்றை அவர் பரிந்துரைக்க வேண்டும்.

விற்பனைப் பிரதிநிதிகள் போலவே கஸ்டமர் சர்வீஸ் என்று சொல்லக்கூடிய சேவை மையங்களும் இன்று பெரும் துறையாக வளர்ச்சியடைந்து விட்டன. வாடிக்கையாளரின் நலன்களை ஒரு நிறுவனம் எந்த அளவு கவனிக்கிறதோ, அந்த நிறுவனம் மட்டுமே வளர்ச்சியடைய முடியும் என்பது இன்று நிறுவப்பட்ட ஒரு உண்மை. முன்பெல்லாம் சிறு வர்த்தகர்களும் தனிப்பட்ட சேவை வழங்குபவர்களும் இருந்தார்கள்..

உதாரணமாக ஒரு மளிகைக்கடைக்காரரோ, ஒரு தச்சரோ, ஒரு ஊரின் ஒவ்வொரு குடும்பத்தோடும் பிணைக்கப்பட்டிருந்தார்கள். இன்று புதிய நுகர்வுப் பொருள்களும் சேவைகளும் வந்துவிட்டன. கார்ப்பரேட் நிறுவனங்கள் அவற்றை நிர்வகிக்கின்றன. அவை வாடிக்கையாளர்களிடம் தங்கள் பிரதிநிதிகள் சரியாக நடந்துகொள்கிறார்களா என்று கடுமையாகக் கண்காணிக்கின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் சேவை தொடர்பான புகார்களைக் கையாள்பவர்கள் நம்மிடம் ஒழுங்காக நடந்துகொண்டார்களா என்று அப்புறம் போன் செய்தோ அல்லது செய்தி அனுப்பியோ விசாரிக்கிறார்கள்.

ஒரு பிரபல கார் நிறுவனம், வழியில் எங்காவது நம் கார் ரிப்பேர் ஆகிவிட்டால் ‘போன் செய்ததும் வந்து சரி செய்து கொடுக்கும்’ சேவையை வழங்குகிறது. நான் அதில் உறுப்பினர் ஆனேன். ஒருமுறை வெளியூரி லிருந்து வரும் வழியில் கார் ரிப்பேராகி நின்றுவிட்டது. அந்த எண்ணிற்கு போன் செய்தேன். ‘‘15 நிமிடங்களில் எங்கள் சேவை கிடைக்கும்’’ என்று சொன்னவர்கள், 3 மணி நேரமாகியும் எதுவும் செய்யவில்லை.

அடுத்த முறை அவர்கள் உறுப்பினர் சந்தாவைப் புதுப்பிக்குமாறு போன் செய்தபோது, ‘‘தேவையில்லை’’ என்று மறுத்துவிட்டேன். சிறிது நேரத்தில் அந்தச் சேவையின் மேலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு பெண் அழைத்தார். கடந்த காலத்தில் சேவையில் ஏதாவது குறைபாடு இருந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாகச் சொன்னார். வருங்காலத்தில் ஏதாவது பிரச்னை வந்து உடனடியாக கவனிக்காவிட்டால், எந்த நேரம் வேண்டுமானாலும் தன்னை அழைக்கும்படி சொல்லி, அவரது தனிப்பட்ட எண்ணைத் தந்தார்.

அவரது அணுகுமுறை யில் இருந்த பொறுப்பு காரணமாக அப்போது அந்த சந்தாவைப் புதுப்பித்தேன். சில மாதங்களுக்குப் பிறகு அதே போல ஒரு நாள் வழியில் பிரச்னை. எனது புகாரை அதே போல பொறுப்பற்று கையாண்டார்கள். கொட்டும் பனியில் 4 மணி நேரம் சாலையோரம் நின்று கொண்டிருந்தேன். அந்தப் பெண் கொடுத்த எண் ஞாபகம் வந்தது. அப்போது மணி இரவு பதினொன்றரை. இதெல்லாம் சும்மா என்று நினைத்துக்கொண்டே, சூழ்நிலை குறித்து எந்த நம்பிக்கையும் இல்லாமல் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

இரண்டு நிமிடங்களில் அழைத்தார். அவர் குரலில் உண்மையான வருத்தமும் தங்கள் ஆட்கள் மேல் கோபமும் இருந்தது. வேகவேகமாக எனக்கு உதவுவதற்கான முயற்சிகளை எடுத்தார். ஆட்கள் வந்துவிட்டார்களா என அடிக்கடி போன் செய்து கேட்டுக்கொண்டார். கடைசியாக நான் அவருக்கு நன்றி தெரிவித்தபோது இரவு 2 மணி. அந்தப் பெண்ணை நான் வெறுமனே ஒரு வர்த்தக நிறுவனத்தின் பிரதிநிதியாக மட்டும் பார்க்க முடியவில்லை.

நான் ஒரு பிரபல வணிக வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட கடையில்தான் என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தேவையான அழகுசாதனப் பொருள்களை வாங்குவேன். அங்கே ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் வெளிப்படும் அதீதமான நட்புணர்வு கருதியும் நல்லியல்புகள் கருதியும் எப்போதும் அந்தக் கடைக்குத்தான் செல்வேன்.

காஃப்காவின் ‘The Metamorphosis’ கதை, திடீரென ஒரு நாள் பூச்சியாக மாற்றிவிட்ட ஒரு விற்பனைப் பிரதிநிதியைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் விற்பனை என்பதை ஆழமான மனித உறவாக மாற்றுகிற எத்தனையோ விற்பனைப் பிரதிநிதிகளை நான் தொடர்ந்து சந்தித்தவண்ணம் இருக்கிறேன்.

(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்

உலக மகா கொடுமை எது? 
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.
ஒரு கொடுமையான உலகில் வாழ்வது.
மனிதனிடம் என்றுமே முடிவற்றது எது?
- வண்ணை கணேசன், சென்னை.
கண்ணீரும் புன்னகையும்.
கமல்ஹாசன், வைரமுத்து ஆகியோருக்கு பத்மபூஷண் கிடைத்திருப்பது பற்றி?
- எஸ்.கதிரேசன்,
பேரணாம்பட்டு
கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் மொழியை மாற்றியவர். வைரமுத்து தமிழ் சினிமாப் பாடல்களின் திசையை மாற்றியவர். எந்த விருதுக்கும் மேலானது இவர்களது தகுதிகள்.
லட்சியவாதிகளைவிட வாழ்க்கையில் நடிப்பவர்கள் நன்றாக இருக்கிறார்களா?
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.
லட்சியவாதிகளாக நடிப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.
வாஷிங்டனில் ஒருவர் 87 மணி நேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து கின்னஸ் சாதனை படைத்தது பற்றி...
- எஸ்.பி.பாபு, முள்ளக்காடு.
தமிழர்கள் வாழ்நாளில் சராசரியாக டி.வி. பார்க்கும் நேரத்தைக் கணக்கிட்டால், அது எந்த சாதனையையும் முறியடித்துவிடும்.

நெஞ்சில் நின்ற வரிகள்

தற்செயலாக இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு ‘யார் பாடியது’ என்று தேடிப் போனேன். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடிகை ஆண்ட்ரியாவே பாடியிருக்கிறார் என்று தெரிந்தது. ஒரு பஞ்சைப் போல அவ்வளவு இலகுவான குரல், காற்றில் எடையற்று மிதந்து செல்கிறது. காதலின் பிரிவாற்றாமையின் அந்தியோடு இசையும் குரலும் சொல்லும் கலந்து மயங்கும் தருணம். ஜி.வி.பிரகாஷின் இசையில் வைரமுத்துவின் இன்னுமொரு வசீகரப் பாடல்...

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன்...
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே
மிதக்கிறேன்...

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்

ஓவியரும் வடிவமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் ஊடகங்கள், நுண்கலை, இலக்கியம் தொடர்பாக கேலியாகவும் ஆழமாகவும் தனது முகநூலில் எழுதி வருபவர். அவரது ஒரு நுட்பமான பதிவிலிருந்து ஒரு பகுதி: தமிழ்நாட்டில் கோலங்களில் இரு வகை உண்டு. கம்பிக் கோலம் மற்றும் புள்ளிக்கோலம். கம்பிக்கோலம் என்பது புள்ளிகளில்லாமல் நேரடியாக கோடுகளை இழுத்து வரைவது. இடைவெளிகளை வண்ணப்பொடிகளால் வேண்டுமானால் நிரப்பிக்கொள்ளலாம்.

புள்ளிக்கோலம் என்பது நேராகவோ குறுக்காகவோ புள்ளிகள் வைத்து, அந்த புள்ளிகளை இணைக்கும் விதமாகவோ அல்லது அந்த புள்ளிகளைச் சுற்றி கோடுகள் வரும் விதமாகவோ இரு வகையில் வரையப்படுகிறது. புள்ளிகளைச் சுற்றிவரும் கோடுகளைக் கொண்ட கோலத்தை, சுழிக்கோலம் என்றும் சொல்கிறார்கள்.

சுழிக்கோலம் பெரும்பாலும் கைகளை எடுக்காமல் வரைவது. ஒரு இன்ஃபினிட்டி தன்மை கொண்டது. பூக்களைக் கொண்டு உருவாக்கப்படும் கோலம், பூக்கோலம். இது தமிழ்நாட்டைவிட கேரளாவில்தான் இன்றும் பழக்கத்தில் உள்ளது. மலையாளத்தில் ‘பூக்களம்’ என்றும் ‘அத்தப்பூ’ என்றும் சொல்கிறார்கள். அதுவும் திருவோண நாட்களில் மட்டுமே போடுகிறார்கள்.

அடிப்படையில் கோலம் ஒரு ஜியோமிதி கலைவடிவம். புள்ளிகள், கோடுகள், வளைவுகள் என்று கணித சூத்திரங்களுக்குள் அடங்கும் நேர்த்தியும் ஒழுங்கும் கொண்ட ஒரு அறிவியல் காட்சிக்கலை. தாந்திரிக் ஆர்ட்டிலும், கேரளாவின் ‘களம் வரைக்கல்’ போன்ற கலைகளிலும் அதன் நீட்சி உள்ளது. இன்றைய நவீன ஓவியங்களிலும்கூட இதன் தாக்கம் உள்ளது. இன்று அபார்ட்மென்ட் கலாசாரத்திற்கு மாறி, முற்றம் என்கிற ஒரு வஸ்துவே இல்லாமல் வாழும் நாம், கோலத்தைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கமுடியாத இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

மனுஷ்ய புத்திரன்