கவிதைக்காரர்கள் வீதி



மௌன மேகங்களைத்
தழுவிக் கிடந்தது பூங்குளம்
வண்ணங்களைச் சுமந்தபடி
திரிந்தன பட்டாம்பூச்சிகள்
பாறைச் சிதறலொன்று
கரையோர நாணற் புதரில்
ஒளியுமிழ்ந்தபடி

வெறும் கல்லாகிக் கிடந்தது
முன்தினத்தின் மதியப் பொழுதில்
விளையாடிய சிறுவனின்
குறி தவறிய கல்லாய்க்கூட இருக்கலாம்
நிலத்திலும் நீரிலும்

ஞானம் தேடியலைந்த தவளைக்கு
தியானம் செய்யப் போதுமானதாய்
இருந்தது அந்தக் கல்
பூக்களற்ற அல்லித் தண்டுகளில்
நறவம் போல் வழிந்தன

சிட்டுக்குருவிகள் சேந்தி விளையாடிய
அமுதத் திவலைகள்
கமல இலைகளில் முத்துச் சிதறலாய்
உயிர்த் துளி மின்ன
தாமரைக் குளத்தின்
அழகிய சலனங்கள் வழியாக
அமைதியடைகிறது
சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்

முல்லை முகையவிழ்த்து
மெல்லக் கசிகிறது இரவு
திறந்த சாளரங்களின் வழியாக
நெகிழ்ந்து தழுவுகிறது
பூக்களின் வாசனைகளைப்
புணர்ந்த குளிர்காற்று.

அதிரும் தந்திக் கம்பிகளின்
ஊடாகப் பிரிவின் இசையை
மீட்டியபடி பெய்கிறது மழை.
பாடத் தொடங்கும் அவனின்
ஆழ்மனக் குளத்திலிருந்து
எழுந்து வருகிறாள் அவள்.

பி.ஜி.சரவணன்