காரணம்



‘‘டிபன் யாரு செஞ்சது? அதுலயும் அந்தக் கேசரி அபாரம் போங்க’’ - மாப்பிள்ளையின் தந்தை சிலாகித்தார். ‘‘என்ன இப்படி கேட்டுட்டீங்க? எல்லாம் எங்க பொண்ணு செஞ்சதுதான்’’ என்றாள் பெண்ணின் தாய் மங்களம். ‘‘இந்த கைப் பக்குவத்துக்காகவே உங்க பொண்ணை மருமகளா ஏத்துக்கறோம். நல்ல நாளா பாருங்க’’ - திருப்தியுடன் கிளம்பியது பெண் பார்க்க வந்த கூட்டம்.
அனைவரும் சென்ற பின், சமையற்கட்டுக்கு ஓடி வேலைக்காரி சாரதாவின் கையை நன்றியோடு பிடித்துக்கொண்டாள் மங்களம்.

‘‘நீ செஞ்ச டிபனை என் பொண்ணு செஞ்சதா சொன்னதாலதான் கல்யாணமே நிச்சயமாகியிருக்கு. எப்படியாவது கல்யாணத்துக்குள்ள அவளுக்கு உன் கைப்பக்குவத்தை சொல்லிக் கொடுத்துடும்மா... கல்யாணத்துக்கு உனக்குப் பட்டுப்புடவை எடுத்துத் தர்றேன்’’ என்றாள் அவள் கெஞ்சலாக. சாரதா மனதுக்குள் ஓடியது... ‘என் வீட்டில் இதே டிபனை எத்தனை மாப்பிள்ளை வீட்டாருக்கு நான் செய்து கொடுத்திருப்பேன். கறுப்பா, பணமில்லாத குடும்பத்தில் பிறந்த என்னை, சமையல் ருசிக்காக யாரும் மணந்து கொள்ளவில்லையே! அழகும், பணமும்தான் இந்த பெண்ணைப் பிடித்துப்போக காரணம். அது எங்கே இவர்களுக்குத் தெரியப் போகிறது?’ நினைத்ததை சற்றும் வெளிக்காட்டாமல் சரியென்று தலையசைத்தாள் முதிர்கன்னி சாரதா.       
            
வி.சகிதாமுருகன்