ரஜினி சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்!



இயக்குனர் பி.மாதவன் காட்சி பற்றி விளக்க, பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவில் நடிகர் திலகம் நடிக்கத் தயாராக இருக்கும் இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் சிம்மையா ஆனந்த். பி.மாதவன் படங்களுக்கு ஆஸ்தான புகைப்படக்கலைஞராக பணிபுரிந்திருக்கும் அவர், இந்தப் புகைப்படத்தை ஒட்டிய செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்...‘‘

‘மன்னவன் வந்தானடி’ படப்பிடிப்பில் எடுத்தது இந்தப் படம். மாதவன் சாரின் குணம் பற்றி சொல்றேன். எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் கொண்டவராக இருந்தாலும், எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார். அப்படிப்பட்டவர் எனக்காக ஒரு முறை முடிவை மாற்றி இருக்கிறார்.

அப்போ நான் பிஸியான போட்டோகிராபர். ஒருநாள் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி எதிரே சென்றுகொண்டிருந்தபோது என் நண்பர் ஒருவர், ‘எனக்காக கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியுமா?’ என்று வண்டியை நிறுத்தினார். சிறிது நேரத்தில் ஸ்கூட்டரில் வந்த ஒருவரை அறிமுகப்படுத்தி ‘பாலசந்தர் படத்தில் இவர் நடித்திருக்கிறார். மாதவன் சாரிடம் இவரை அறிமுகப்படுத்த முடியுமா?’ என்று கேட்டார். ‘இரண்டு நாள் கழித்து ஆபீசுக்கு வாங்க’ என சொல்லிவிட்டு வந்தேன்.

இரண்டு நாள் கழித்து அலுவலகம் வந்த அவரை, மாதவன் சாரிடம் கூட்டிப் போனேன். அவரை நடிக்க வைத்துப் பார்த்த இயக்குனர், நடிகரை அனுப்பி வைத்துவிட்டு என்னைக் கூப்பிட்டு ‘எனக்கு திருப்தி இல்லைய்யா...’ என்றார்.

‘இல்லை சார்... பாலசந்தர் இயக்கிய ‘மூன்று முடிச்சு’ படத்தில் அவரோட ஆக்டிங் பார்த்தேன். நல்லா பண்றார் சார்’ என்று வலியுறுத்தினேன். ஒரு வாரம் கழித்து அவரை மீண்டும் அழைத்து வரச்சொன்னார். அப்போது மியூசிக் அகாடமி எதிரே ஓட்டு வீட்டில் தங்கியிருந்த அந்த நடிகரை தேடிச் சென்று அழைத்து வந்தேன். அலுவலகம் வந்த அந்த நடிகர், 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு அக்ரிமென்ட்டில் கையெழுத்து போட்டார். அந்தப் படம்தான் ‘சங்கர் சலீம் சைமன்’. அந்த நடிகர்தான் ரஜினி.

சில வருடங்களில் ரஜினி பெரிய ஸ்டாராக வளர்ந்து நின்றார். நான் தயாரிப்பாளர் ஆனேன். ரஜினி ‘முரட்டுக்காளை’ படம் பண்ணியபோது ‘கடவுளின் தீர்ப்பு’ என்று ஒரு படம் எடுத்தேன். அந்தப் படத்துக்காக ரஜினியிடம் மூன்று நாள் கால்ஷீட் கேட்டேன். அவரால் கொடுக்க முடியாத சூழ்நிலை. பிறகு ஸ்ரீகாந்தை நடிக்க வைத்தேன். அதன் பிறகும் ரஜினியிடம் பேச முடியாத சூழ்நிலையே தொடர்ந்தது. சொந்தப் படம் தயாரித்ததில் சொத்து, சொந்தம் என்று நிறைய இழந்தேன். அதையெல்லாம் தாண்டி ரஜினியின் மனசில் ஒரு இடம் கிடைக்கவில்லை என்ற வருத்தம்தான் கடவுளின் தீர்ப்பு போல!’’

-அமலன்
படம் உதவி: ஞானம்