இந்தியா 2020 கனவு நிறைவேறுமா?




இப்போதுதான் மில்லினியம் ஆண்டு பிறந்தது போல் இருக்கிறது. படபடவென்று 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. புத்துணர்வோடு 2015ல் அடியெடுத்து வைக்கிறோம். நமது இலக்கு ஆண்டு 2020. தொட்டுவிடும் தூரத்தில் வந்து விட்டது. வல்லரசு கனவு நோக்கிய நம் பயணம் சரியான பாதையில் நகர்கிறதா? நாட்டைத் தூக்கி நிறுத்தும் முக்கியத் துறைகளில் நம் போக்கு எப்படி இருக்கிறது? அலசுகிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்...

விவசாயம்


பாமயன் வேளாண் சிந்தனையாளர்

மிகவும் சிக்கலான காலகட்டம் இது. விவசாயத்தின் மீது மட்டுமின்றி அத்தனை இயற்கை வளங்கள் மீதும் கொடுமையான தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. கடந்த காங்கிரஸ் அரசை விட தற்போதுள்ள பி.ஜே.பி. அரசு, விதிகளைத் தளர்த்துவதில் கூடுதல் வேகம் காட்டுகிறது. தண்ணீர், மண், காடு என அத்தனை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியாவின் பெருமுதலாளிகளுக்கும் குற்ற உணர்வே இல்லாமல் திறந்து விடுகிறார்கள்.

விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் கொடுப்பதற்கான அத்தனை அடிப்படை வேலைகளும் முடிந்து விட்டன. சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒரு தொழிலைத் தொடங்க வேண்டுமென்றால் பல்வேறு துறைகளில் ‘கிளியரன்ஸ்’ வாங்க வேண்டியிருந்த நடைமுறையை மாற்றி ஒரே ‘விண்டோ’வில் அத்தனை வேலைகளையும் முடிக்கும் அளவுக்கு எளிமையாக்கிவிட்டது தற்போதைய அரசு.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டு கடந்த அரசு தடை செய்திருந்த பல அழிவுத் திட்டங்களுக்கு தற்போது உடனுக்குடன் அனுமதி வழங்கப்படுகிறது. கனிமச்சுரண்டலுக்காக பெருவாரியான காடுகள் அழிக்கப்படுகின்றன. அதனால் மழைவளம் குறைகிறது. தண்ணீர் பிரச்னை தலையெடுக்கிறது.

இச்சூழலைப் பயன்படுத்தி சிறு, குறு விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டுவதே இவர்களின் தொலைநோக்குத் திட்டம். வளர்ச்சி என்பது இவர்களின் அகராதியில் பன்னாட்டு கம்பெனிகளின் மேம்பாட்டையே குறிக்கிறது. தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மரபணு மாற்ற விதைகள் விஷயத்தில் தீவிர ஆர்வம் காட்டுகிறார். கள ஆய்வுகளுக்கான கதவுகள் தட்டியவுடன் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் இந்திய விவசாயிகளை அந்நிய நிறுவனங்களிடம் கையேந்த வைக்க முயற்சிக்கிறார்கள்.

ரசாயன விவசாயத்துக்குக் காட்டும் ஆர்வத்தை இயற்கை வேளாண்மைக்குக் காட்ட மறுக்கிறார்கள். ரசாயன உரங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1500 கோடி ரூபாய் மானியம் தரப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்கு 100 கோடி ரூபாய் கூட ஒதுக்கப்படுவ தில்லை. தற்சார்பு விவசாயத்தை ஊக்கப்படுத்தாமல் விவசாயத்தை மேம்படுத்தவே முடியாது. விவசாயத்தின் மீது சரியான புரிதல் உள்ள அரசும், அதிகாரிகளும் வரும் வரை நாம் முன்னோக்கி நகரவே முடியாது.

கல்வி

பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை

இந்தியா என்பது பண்பாட்டு ஒருமை கொண்ட ஒரே தேசமல்ல. பல்வேறு கலாசாரங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நம் சிறப்பு. கல்வி என்பது பண்பாட்டின் கூறு. பண்பாட்டின் அடிப்படையில் உருவாவதே மொழி, கல்வி எல்லாம். ஆனால் எந்த அளவுகோலும் இல்லாமல் கல்வியில் ஒரு பொதுத்தன்மை திணிக்கப்படுகிறது. இது விபரீதமானது.

உலகத்தரமான கல்வி என்று இங்கே ஒரு மோசடியான சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. கல்வியில் உலகத்தரம் என்றெல்லாம் எதுவும் இல்லை. கல்வி என்பது சொந்த மண்ணை, சொந்த உறவுகளை, சொந்த மொழியை, சொந்த வரலாற்றை, சொந்த அரசியல் சாசனத்தை கற்பிப்பதாகும். படிப்பது என்பது வேறு, கற்பது என்பது வேறு. படிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கற்றலுக்கு நாம் கொடுப்பதில்லை. மாணவர்கள் புத்தகத்தில் இருப்பதைப் படித்து மனப்பாடம் செய்து எழுதி மதிப்பெண் பெறுகிறார்கள்.

அங்கே படிப்பு நிகழ்கிறது, கற்றல் நிகழவில்லை. அதனால்தான் பொறியியல் உள்ளிட்ட அத்தனை தொழில்நுட்பங்களிலும் நம் மாணவர்கள் பின்தங்கி நிற்கிறார்கள். உலக நிறுவனங்கள் நம்மைத் தவிர்க்கும் அளவுக்கு நிலை மோசமாகியிருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு தோல்வியையும் தேர்ச்சியையும் சமமாக எதிர்கொண்டு, அட்டெம்ப்ட் எழுதி பாஸ் செய்தவர்கள் இன்று முன்மாதிரி மருத்துவர்களாகவும், நீதிபதிகளாகவும் உயர் அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால் நாம் மதிப்பெண்களுக்காக பிள்ளைகளை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறோம்.

1980க்குப் பிறகு கல்வி பெரும் சந்தையாக மாறிவிட்டது. சந்தையில் விற்பனை நன்றாக நடக்க ரிசல்ட் தேவைப்படுகிறது. இது அரசுப்பள்ளிகளையும் பாதித்து விட்டதுதான் சோகம். சமூக வளர்ச்சியை முன்நிறுத்துகிற கல்வி முனை மழுங்கி, விற்பனைப் பொருளாக நம் முன் இருக்கிறது. ஆட்சிக்கு வருகிற ஒவ்வொரு அரசும் தத்தம் கோட்பாடுகளை பாடப்புத்தகங்களில் திணித்து கல்விச்சூழலின் இயல்பைக் குலைக்கின்றன. பிரமாண்ட மனநிலை மாற்றத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக இந்தக் குறைகளை எல்லாம் களைய வேண்டும். இல்லாவிட்டால் நிலை எதுவும் மாறப்போவதில்லை.

அறிவியல் தொழில்நுட்பம்


டாக்டர் டி.வி.வெங்கடேஸ்வரன்
அறிவியலாளர்,விக்யான் பிரசார்

அறிவியல் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை அண்மைக்காலமாக ஒரு ஆக்கப்பூர்வமான திசையில் இந்தியா நகரத் தொடங்கியிருக்கிறது. சிறு சிறு ஆராய்ச்சிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்த நம் கவனம், இப்போது சர்வதேச ஆய்வுத்திட்டங்களின் மேல் படியத் தொடங்கியிருக்கிறது. உலகளாவிய விஞ்ஞான திட்டங்களில் இந்தியாவும் பங்கெடுக்க முடிவு செய்துள்ளது. அறிவியல் என்பது தனித்து இயங்கக்கூடிய துறையல்ல. சர்வதேசங்களும் இணைந்து செயலாற்ற வேண்டிய திட்டம். தொழில்நுட்பம் மட்டுமே வேறாக இருக்கமுடியும்; அறிவியல் பொதுதான். அந்த அடிப்படையில் இப்போது திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

அணுத்துகள் உள் கட்டுமானம் தொடர்பான சர்வதேச ஆராய்ச்சியில் இந்தியாவும் ஒரு அங்கத்தினராக சேர்ந்துள்ளது ஆக்கப்பூர்வமான மாற்றம். கனடா, சீனா, அமெரி க்கா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு இணைந்து ஹவாய் தீவில் 30 டையா மீட்டர் அளவு கொண்ட பிரமாண்ட டெலஸ்கோப்பை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த டெலஸ்கோப் அமைக்கப்பட்டால் இப்போதிருப்பதை விட 100 மடங்கு உள்ளீடாக இந்த பிரபஞ்சத்தை ஆராய முடியும்.

நியூட்ரினோ தொடர்பான ஆய்விலும் நாம் வெகுவாக முன்னேறியிருக்கிறோம். அது தொடர்பான ஆய்வகம் ஒன்றையும் தமிழகத்தின் தேனி பகுதியில் அமைக்கவிருக்கிறோம். உயிரியல் துறையைப் பொறுத்தவரை மதிப்பு மிக்க நாடுகளில் நாம்தான் முன் நிற்கிறோம். நமது ஆராய்ச்சிகளையும், செயல்பாடுகளையும் உலகமே உன்னிப்பாக கவனிக்கும் அளவுக்கு நம் வளர்ச்சி இருக்கிறது. விண்வெளித் துறையிலும் நாம் நல்ல வளர்ச்சியை எட்டியிருக்கிறோம்.

சிக்கல் என்னவென்றால், திறன் வாய்ந்த இளைஞர்கள் அறிவியல் துறையின் பக்கம் வர மறுக்கிறார்கள். வர்த்தகம், ஐ.டி துறைகளையே விரும்புகிறார்கள். வேலை செய்யும் இந்திய இளைஞர்களில் 1 லட்சம் பேரில் 200க்கும் குறைவானவர்களே அறிவியல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார்கள். இதை அதிகப்படுத்த ‘இன்ஸ்பையர்’ உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போதுள்ள வளர்ச்சியை வைத்துக் கணிக்கும்போது 2020ல் இந்தியா மிகப்பெரும் மைல்கல்லை எட்டும் என்பதில் எனக்கு சந்தேகம் வரவில்லை.

தொழில்துறை

எஸ்.ரத்தினவேல்
முதுநிலை தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்

கடந்த காலமும், நிகழ்காலமும் ஆக்கப்பூர்வமாக இல்லை. ஆனால் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. எல்லா தொழில்களுமே பின்னோக்கிச் செல்லும் நிலைதான் இப்போது. இந்தியா பெருமளவு விவசாயிகளைக் கொண்ட நாடு. 90 சதவீத விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள். அவர்களை நம்பித்தான் தொழில்துறை இயங்குகிறது. விவசாயம் பொய்த்தால் தொழில்துறை பாதிக்கும். கடந்த 3 ஆண்டுகளாக சரியாக வேளாண்மை நடைபெறவில்லை.

அதனால் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விற்பனை பாதிக்கப்பட்டதால் உற்பத்தியும் குறைந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் எந்த அரசுமே வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரவில்லை. அதன் விளைவு இப்போது தொழில்துறையில் எதிரொலிக்கிறது. இப்போதிருக்கும் அரசும் பழமையான சிந்தனையில் இருக்கிறது.

‘மேக் இன் இந்தியா’ போன்ற அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்களைப் போல உள்நாட்டு விவசாய உற்பத்தியை மேம்படுத்தி பணப்புழக்கத்தை அதிகரிக்க எந்த ஆக்கப்பூர்வமான திட்டமும் இல்லை. உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்பூட்டுதல் போன்ற தொழில்களுக்கான வாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது. அதற்கேற்ற மனித வளமும் இருக்கிறது.

ஆனால் அந்த தொழில்களுக்கு ஆதரவில்லை. இஸ்ரேல் போன்ற பல நாடுகளில் விவசாயிகள் ஒருங்கிணைந்து பெரிய அளவில் விவசாயம் செய்கிறார்கள். அதற்கு, அரசுகள் உதவுகின்றன. வெளிநாட்டு முதலீடுகளுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் தரும் முக்கியத்துவத்தை உள்நாட்டு சிறு, குறு தொழில்களுக்கும், அதன் அடித்தளமாக இருக்கும் வேளாண்மைக்கும் அரசு கொடுத்தால் மட்டுமே 2020 பற்றி நாம் கனவு காணமுடியும்.

விளையாட்டு

பி.விஸ்வநாதன்
முன்னாள் இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் உறுப்பினர்

இந்திய விளையாட்டுக் களங்களில் அரசியல் புகுந்து விளையாடுகிறது. விளையாட்டுக்காக அரசுகள் ஒதுக்கும் பணம் விழலுக்கு இறைத்த நீராகப் போய்க்கொண்டிருக்கிறது. அரசு சார்ந்த விளையாட்டு அமைப்புகளில் தனி நபர்களின் கை ஓங்கி இருக்கிறது. இந்திய விளையாட்டு அணிகளில் இடம் பிடிக்க திறமை மட்டுமே போதுமான தகுதியாக இருக்கவில்லை. உலகத்தின் ஆகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் களத்திற்கு வரமுடியவில்லை. அவர்கள் மீது வெளிச்சம் படவில்லை.

இன்று இந்தியாவுக்குக் கிடைக்கும் பெரும்பாலான வெற்றிகளும் பதக்கங்களும் அரசு சாராத விளையாட்டு அமைப்புகளாலும், தனி நபர்களின் இணையற்ற உழைப்பாலும் விளைந்தவைதான். விளையாட்டை நாம் ஒரு துறையாகவே கருதவில்லை என்பதுதான் உண்மை. பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் செக்யூரிட்டி மாதிரிதான் நடத்தப்படுகிறார்கள். பிசிக்கல் எஜுகேஷன் சிஸ்டமே குழப்பமாக இருக்கிறது. ஒலிம்பிக்கில் 26 விளையாட்டுகள் இருக்கின்றன.

 ஆனால் பள்ளிகளில் வெறும் 6 விளையாட்டுகளைத்தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கும் முக்கியத்துவமில்லை. ‘விளையாடுவது வீண்வேலை, விளையாடுபவன் உருப்படாதவன்’ என்ற மனநிலைதான் இங்கு இருக்கிறது. ஏதாவது ஒரு விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றால் அரசு வேலை கிடைக்கும் என்ற மனோபாவமும் இங்கிருக்கிறது. விளையாட்டு நாட்டின் கௌரவம் என்று யாரும் நினைப்பதில்லை.

அதனால்தான் ஒலிம்பிக்கிலும், ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் பதக்கப் பட்டியலில் பின்நிற்கிறோம். அரசின் விளையாட்டு ஆணையங்களின் நிர்வாகத்துக்குச் செய்யப்படும் செலவில் பாதியை வீரர்களுக்கு செலவிட்டாலே இந்தியா ஒலிம்பிக்கில் தனித்துவமான இடத்தைப் பிடிக்கும். இந்தியாவில் எந்த பின்புலமும் இல்லாத குடும்பத்திலிருந்து ஒரு விளையாட்டு வீரன் உருவாவதென்பது எளிதான காரியமல்ல. அரசு விளையாட்டு அமைப்புகள் அவனுக்கு எந்த விதத்திலும் உதவ முன்வருவதில்லை.

சத்துணவு, உபகரணங்கள் அனைத்துக்கும் அவன் யாரிடமாவது கையேந்த வேண்டியிருக்கிறது. அதிகாரிகளைச் சந்திக்கவே நிறைய பரிந்துரைகள் தேவையாக இருக்கிறது. சப் ஜூனியர் மற்றும் கேடட் பிரிவு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி வந்த உதவித்தொகையை அரசு நிறுத்திவிட்டது. ‘எலைட் ஸ்போர்ட்ஸ் பெர்சனல் ஸ்கீம்’ என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிப்படுத்துவதே இந்த ஸ்கீமின் நோக்கம்.

அந்த திட்டத்தால் விளைந்தது என்ன? யாருக்கு அந்தத் தொகை ஒதுக்கப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. விளையாட்டுத் துறையில் அரசியல்வாதிகளின் ஊடுருவல், அத்துமீறல், முறைகேடுகளைக் களைந்து, திறமையின் அடிப்படையில் வீரர்களைக் கண்டறிந்து, அடிப்படையிலிருந்து அவர்களை வளர்த்தெடுத்து களமிறக்காவிட்டால் 2020லும் நாம் பதக்கங்களை விரல்விட்டுத்தான் எண்ணிக் கொண்டிருப்போம்.

உள்கட்டுமானம்

டாக்டர் குமார்
முன்னாள் சேர்மன், கான்ஃபடரேஷன் ஆஃப் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா

இந்தியா மிகப்பெரிய மாறுதலுக்கு தயாராக வேண்டிய தருணம் இது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் மனித வளம் இங்கு உருவாகியிருக்கிறது. இளைஞர்கள் எண்ணிக்கையிலும் இந்தியா தான் முதன்மையாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கையிலும் இந்தியாதான் நம்பர் ஒன். 22 மில்லியனாக இருக்கிற நடுத்தர மக்களின் எண்ணிக்கை 2030ல் 91 மில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. உள்கட்டமைப்பில் நாம் பெரிய மறுமலர்ச்சிகளை எட்டியாக வேண்டிய கட்டாயம்.

இப்போதைக்கு வளர்ச்சியை எட்டுவதற்கு சாதகமான வாய்ப்பு கள் இந்தியாவுக்கு மட்டுமே இருக்கிறது. சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. அங்குள்ள தொழில் நிறுவனங்கள் ‘லீவரேஜ்’ எனப்படும் பெருங்கடனில் சிக்கித் தவிக்கின்றன. ஐரோப்பிய பொருளாதாரம் அண்மைக்காலமாக பின்தங்கிக்கொண்டே செல்கிறது.

பிரேசிலில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து நடப்புக்கணக்கு பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார சிக்கல் உருவாகியுள்ளது. இந்த சூழல் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை இந்தியாவின் திசையில் திரும்பியிருக்கிறது. அந்நிறுவனங்களின் முதலீட்டால் இந்தியாவின் உள்கட்டமைப்பு பெருமளவு வளர்ச்சியை எட்ட வாய்ப்புண்டு.

கடந்த சில ஆண்டுகளில் அரசுகளின் தவறான அணுகுமுறை, பாலிஸி உருவாக்கம் காரணமாக நாம் பல வாய்ப்புகளை இழந்திருக்கிறோம். உலக அளவில் தொழில் தொடங்க சிக்கலான நடைமுறைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் 135வது இடத்தில் இருக்கிறோம் நாம். எது வளர்ச்சி என்பதில் இங்குள்ள பாலிஸி மேக்கர்களிடம் குழப்பம் இருக்கிறது. உலகமயமாதலை ஏற்றுக்கொண்ட பிறகு நகரங்களை மேம்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் நகர்ப்புற வளர்ச்சிக்கு நம் அரசுகள் பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. 2030ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 70% நகரங்களில் இருந்தே கிடைக்க இருக்கிறது. 70% வேலைவாய்ப்பு களையும் நகரங்களே தரும். அதை மனதில் வைத்து சாலை வசதிகள், வீட்டு வசதிகள், பொதுக் கட்டுமானங்களை அரசு உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியா மிகப்பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

பொருளாதரம்

ஆத்ரேயா பொருளாதார நிபுணர்

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள கடந்த 6 மாதத்துக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில் பணவீக்கம் குறைந்திருப்பதாக பெருமையோடு குறிப்பிடப்படுகிறது. பணவீக்கம் குறைவு என்றால் விலைவாசி குறைகிறது என்று பொருளல்ல. விலைவாசி உயரும் வேகம் குறைந்திருக்கிறது. கிராமப்புற மக்களின் கூலியைக் குறைத்திருப்பது, மானியங்களை வெட்டியிருப்பது, ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்திருப்பது மூலமாகவே பணவீக்கத்தைக் குறைத்திருப்பதாக வெளிப்படையாகவும் மகிழ்ச்சியாகவும் சொல்கிறது இந்த அறிக்கை. இதன்மூலம் இவர்கள் கிராமப்புற மக்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை என்பது புலனாகிறது.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 4.75 சதவீதத்தில் இருந்து சற்று உயர்ந்திருக்கிறது. அதிகபட்சம் 5.5 சதவீதத்தை எட்டிப்பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமானமுன்னேற்றம் இல்லை. பொருளற்ற வளர்ச்சி. பொருளாதாரத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் சிறு முன்னேற்றம் என்பது பி.ஜே.பி அரசு ஏற்படுத்தியது அல்ல. முன்பிருந்த காங்கிரஸ் அரசின் இறுதிக்கால செயல்பாடு களால் விளைந்தவை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

2013-2014 கடைசி 6 மாதத்தில் ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தி 4.5% ஆக இருந்தது. புதிய ஆட்சி யில் அது 3.5% ஆக குறைந்திருக்கிறது. ஆலைப்பொருள் உற்பத்தி மிகமிக மந்தமாகிவிட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நிய முதலீட்டை அதிகப் படுத்துவதன் மூலமாக நிகழும் மாயாஜாலம் என்று நம்புகிறது மோடி அரசு. அது தவறு. அந்நிய முதலீடு என்பது உற்பத்தியில் பிரதி பலிக்காது. பங்குச்சந்தை, நிதிச்சந்தையைக் குறிவைத்தே அந்நிய முதலீடுகள் இங்கு வருகின்றன.

அதையும் தாண்டி சேவைத்துறைகளுக்கு வந்தால் நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், ஐ.டி துறைகளில்தான் முதலீடு செய்யப்படுகிறது. அது நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தப் போவதில்லை. ‘மானியங்களைக் குறைப்போம், கூலியைக் குறைப்போம், உதவித்திட்டங்களை நிறுத்துவோம்... அதன்மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம்’ என்பது தான் இப்போதைய அரசின் பொருளாதார திட்டம். அதே நேரத்தில் ‘மேக் இன் இந்தியா’ என்று கூறிக்கொண்டு அந்நிய நிறுவனங்களை அழைத்துவந்து, ‘இந்தா இந்தியா... சுரண்டிக்கொள்’ என்று வழங்குகிறார்கள். இது வளர்ச்சியல்ல.
பின்னோக்கிய பயணம்.

பருத்துவம்

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம்

மத்தியில் இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசைக் காட்டிலும் தற்போதிருக்கும் பி.ஜே.பி அரசின் செயல்பாடுகள் மோசமாக இருக்கின்றன. இந்தியாவின் மிக முக்கிய சுகாதாரத் திட்டமான தேசிய சுகாதார இயக்கத்துக்கு காங்கிரஸ் அரசு ஒதுக்கிய தொகையில் 2500 கோடி ரூபாயை தற்போதுள்ள அரசு குறைத்துவிட்டது. இது இந்திய சுகாதாரச் செயல்பாட்டையே பெரிய அளவில் பாதிக்கும்.

தேசிய சுகாதார இயக்கத்துக்குப் பதிலாக தேசிய நல்வாழ்வு உத்தரவாத இயக்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இத்திட்டம் மருத்துவக் காப்பீட்டை மையமாக வைத்து செயல்பட உள்ளது. இந்தக் காப்பீட்டின் கீழ் 58 மருந்துகளைக் கொண்டு வருவோம் என்கிறார்கள். அதைச் சொல்லி முடிப்பதற்குள் 108 மருந்துகளை விலைக்
கட்டுப்பாட்டுப் பட்டியலில் இருந்து நீக்குகிறார்கள். அதனால் 8 ஆயிரம் ரூபாய் விற்ற, ஒரு மாதத்துக்கான புற்றுநோய் மருந்து 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாகி விட்டது. பெரிய பெரிய மருந்துக் கம்பெனிகளுக்கு மக்களின் பணத்தைக் கொட்டிக் கொடுப்பதற்காகவே இப்படியான புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்றால் பொது சுகாதார அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமித்துப் பராமரிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருத்துவத்துக்கு என்று 1.2% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அதை 5% ஆக உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் கனவு காண இங்கு எதுவும் இருக்கப்போவதில்லை.

தொகுப்பு: வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர், ஏ.டி.தமிழ்வாணன்