எழுதுறவன் பேசக்கூடாது!



சாகித்ய அகாதமி பெற்ற பூமணி

தன் இலக்கிய வாழ்வின் காவியக் கட்டத்தில் இருக்கிறார் எழுத்தாளர் பூமணி. அவருக்கு சாகித்ய அகாதமி ‘அஞ்ஞாடி’க்காக கிடைத்திருக்கிறது. காலத்தைப் பதிவு செய்கிற முயற்சியில் பெரும் வெற்றி அடைந்திருக்கிறார். தலையெங்கும் நரையாகப் பூத்திருப்பதில் நுரைக்கும் அனுபவம்.

அசராத எழுத்துப் போராளியும், தமிழ் இலக்கியத்தின் நிஜமான பெரிய மனிதருமான பூமணி அன்பும், கருணையும், சிறு காட்டமுமாக நகர்த்திய பேச்சிலிருந்து...‘‘கேள்விக்கு உட்படாத அகாதமி விருது உங்களுக்கு. மேற்கொண்டு உங்கள் பணி தொடர எப்படி இது உதவுகிறது?’’

‘‘ ‘அஞ்ஞாடி’க்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எழுதலை. இதுக்கு முன்னாடி நாலைஞ்சு விருது வந்துடுச்சு. இது அஞ்சாவதோ, ஆறாவது விருதோ என்னவோ... சரியா ஞாபகம் இல்லை. இந்த விருது கிடைச்சதில் சந்தோஷமோ, வருத்தமோ... இரண்டும் கிடையாது. தேசிய விருதுங்கறபோது புத்தகம் நாலா பக்கமும் போகும். மொழி மாற்றம் செய்வாங்க. அதெல்லாம் சந்தோஷம்.

இது உற்சாகமா எழுதிக்கிட்டு இருக்கிற இன்னொரு நாவலுக்கு உரமா இருக்கு. இத்தனை காலத்தில உருப்படியா என்னடா பண்ணினேன்னு உட்கார்ந்து யோசிச்சா, கணக்கு ரொம்ப இடிக்குது. இன்னும் சிலதை கணிசமா, அருமையா தரவேண்டிய பொறுப்பு இருக்கு!’’

‘‘சாதி, கோஷ்டி, இசம், கட்சி என எதிலும் அடையாளம் காணப்படாத மன அமைப்பு உங்களோடது. எப்படி இதைக் கடைபிடிக்கறீங்க?’’‘‘எனக்கு இப்படியான அடையாளத்தில் இஷ்டமில்லை. எது ஒண்ணுல சேர்ந்தாலும் நம்ம படைப்பு சுத்தபத்தமா இருக்காது. சார்பு வந்திடும். யாருக்காவது விட்டுக்கொடுக்கச் சொல்லும்... கண்டுக்காம போற மாதிரி யிருக்கும். அசல் தன்மை கிடைக்காது.

நாம எப்பவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தான் பேசுறோம்... நினைக்கிறோம். அதுக்கு நீங்க சொன்ன எதிலயும் சேர்ந்து இருக்கணும்னு அவசியமில்லை. அப்படி இருக்கவும் என்னால முடியாது. நம்மால சொறிஞ்சு கொடுக்க முடியாது. நான் இயல்பா இருக்கிறதை இப்படி இருக்கீங்களேன்னு கேட்டா எப்படி ஐயா?’’

‘‘மிகவும் எளிய மனிதர்களின் வாழ்க்கையைத்தான் முன்னெடுத்து எழுதியிருக்கீங்க. வெளியிலிருந்து பார்த்த விஷயங்களா... பெற்ற அனுபவமா?’’‘‘நானே வசதிகள் இல்லாத சூழலில் இருந்து வந்தவன்தானே...

பெறவு எப்படியிருக்கும்? காத்து எப்போ வீசும், மேகம் எப்ப கறுக்கும், எந்தப் பொழுதுல மழை வரும்... பருவம் பூராத்தையும் உள்ளங்கையில் வெச்சிக்கிட்டு திரிகிற ஆளுங்கதானே நாங்க. உறவுக்களுக்காக உசிரை வளர்க்கிற மனுஷங்கதானே. இப்படிப்பட்ட சூழ்நிலையில இருந்துக்கிட்டு இவங்களைப் பத்தி எழுதறதுதானே நியாயம்? மத்தது எனக்கு தெரியாதுல்ல... தெரியாததை எப்படி சொல்றதாம்?’’

‘‘இளைஞர்கள் இழந்த வாழ்க்கையின் நுண்ணிய பதிவு ‘அஞ்ஞாடி’. இவ்வளவு பெரிய களம், கருவை எப்படி எடுத்துக்கிட்டீங்க?’’‘‘தமிழ் நாவல்களின் இடம் எனக்கு நெருடலாகவே இருக்கு. தகழி, வாசுதேவன் நாயர் மாதிரி அகண்ட தளத்தில் எழுதுறது குறைவாகிப் போச்சு. சும்மா பிணையல் அடிக்கிற மாதிரி சுத்திக்கிட்டே இருந்தா எப்படி இதை சாதிக்க முடியும்? சுத்திச் சுத்தி பொண்ணோட காதல், உறவுகள்னு சிதைஞ்சு போச்சு.

நான் காலத்தையே களமா வச்சேன். சொல்ல நிறைய விஷயம் அகப்பட்டுப் போச்சு. அப்படியே ரத்தமும் சதையுமா, உணர்வும் உழைப்புமா ‘அஞ்ஞாடி’ என்னைத் தூக்கிட்டுப் போச்சு. மரபு, கலாசாரம், பழக்கவழக்கம், மொழி, ரசனை, வாழ்க்கை... இப்படி எதிலும் பொய் சொல்லலை. அப்படியே பதிவு செய்திருக்கிறேன். எவ்வளவு நாளைக்கு நம்மகிட்டே ஒண்ணும் இல்லைன்னு தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு நிக்கிறது?’’

‘‘மிகவும் அமைதியா சட்டாம்பிள்ளை தோற்றம் தராமல், ஆழமாக இயங்கி வருகிறீர்கள். இந்த அனுபவத்தின் சாரம் என்ன?’’‘‘நினைச்சதை எல்லாம் பேசக் கூடாது. நினைப்பே தப்பாகிடலாம். குறிப்பா, எழுதுறவன் நிறைய பேசக்கூடாது. தகரத்திலே கல்லைப் போட்டு குலுக்கின மாதிரி சத்தம் போடுறது ஏன்? சிலபேர் ஒலிபெருக்கி எழுத்தாளர்களாக இருக்காங்க...

அவங்க நோபல் பரிசு வாங்கற திட்டத்தில் இருக்காங்க. நல்ல இலக்கியம்னா மனிதன் படுற பாட்டைச் சொல்லணும். இலக்கியத்தில் ஆரவாரம் என்னத்துக்கு? எழுத்தாளன் ஏன் தன்னை முன்னிறுத்தணும்?’’ ‘‘சென்னையில் ரொம்ப காலம் இருந்தாலும் நகர வாழ்வைப் பதிவு செய்யலை... ஏன்?’’

‘‘மெட்ராஸ் என் மனதுக்கு பக்கத்திலேயே வரலை; சூழலே பிடிக்கலை. அரசுப் பதவியில் எனது கொள்கைகளோடு இருந்தது பலருக்கும் பிடிக்கலை. அங்கே உறவுகள் எனக்கு சரிப்பட்டு வரலை. மெட்ராஸ் பத்தி எத்தனையோ பேர் எழுதிட்டாங்க. என் ஜனங்களையே இன்னும் எழுதி முடிக்கலையே! அதான் இங்கே வந்திட்டேன்.’’‘‘நம்ம சினிமாவின் மீதான உங்களின் அக்கறை ‘கருவேலம் பூக்களில்’ தெரிஞ்சது. அப்புறம் தொடர்ந்து அதில் ஏன் இல்லை..?’’

‘‘சினிமாவுல ஒவ்வொருத்தரும் நாலஞ்சு முகத்தை வச்சுக்கிட்டுத் திரியுறாங்க. பார்த்தாலே முரண்பாடா இருக்கு. பணத்தோட அடிப்படையிலயே உறவைப் பார்ப்பாங்க. சினிமாவுல நைட்டும் பகலுமா வேலை பார்க்கிறது அலுப்பு. உடல்நிலை ஒத்துழைக்கலை. நம்ம குணத்திற்கு சம்மந்தம் இல்லாத உலகம்.

 நமக்கு அதற்கான தகுதி குறைச்சல்!’’‘‘பின்னாடி எழுத ஏதாவது விஷயங்கள் மனசில் இருக்கா?’’‘‘சுயசரிதை எழுதணும். மகாபாரத காலத்திலிருந்து ஆண்டாள் காலம் வரையில் பெண்கள் காலம் காலமா பட்டு வருகிற அவதியை எழுதணும்; ஆரம்பிச்சிட்டேன்!’’

-நா.கதிர்வேலன், செ.காந்திராஜன்
படங்கள்: எஸ்.பி.பாண்டியன்