சீஸன் சாரல்



பாபனாசம் அசோக்ரமணி

பார்த்தசாரதி சபையில் இசை விழா துவக்க நாளன்று ரவிகிரண் சித்ரவீணை கச்சேரி. இந்தக் கச்சேரியின் ஸ்பெஷல், அரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் தவில் கூட்டணி. பி.யு.கணேஷ் பிரசாத் வயலின்; புருஷோத்தமன் கஞ்சிரா. ஏ.கே.பழனிவேல் கையில் தவில் விளையாடியது மட்டுமல்ல... பாட்டுக்கு மிருதங்கம் வாசிப்பது போல் ஒரு சௌக்கியம், நளினம், மிடுக்கு... இப்படி எல்லாம் கலந்த வாசிப்பு. இந்த சித்ரவீணை - தவில் ஜோடியின் இசையைக் கேட்கக் கேட்க, ருசியோ ருசி.

ரவிகிரண் வாசிப்பு சுத்தமான சங்கீதம். ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யரின் ஆபோகி ராக ‘குரு பாதார விந்தம்’ கீர்த்தனை அருமையோ அருமை. வாசஸ்பதி ராகத்தை சித்ரவீணையில் கேட்ட போது, ஒரு உத்தமமான குரலில் கேட்ட ராகம் போல இருந்தது. ஒரே மீட்டில், பல நொடிகளில் ராகத்தை இழைத்துக் கொடுத்த லாவகம், ரசிகர்களை பிரமிக்கச் செய்தது.

ராகம், தானம், பல்லவி தான் மெயின். ராகத்தை கணேஷ் பிரசாத் அழகாகக் கையாண்டார். ரவிகிரண் ‘எமை ஆள வா, பழனி வேலவா, தாமதமேன்’ என்று தவில் மேதை ஏ.கே.பழனிவேலின் வாசிப்புக்கு அர்ப்பணிப்பு என்று பல்லவியை அமைத்துப் பாடிக் காட்டியது பொருத்தம்தான்.

அந்தக் காலத்திலிருந்தே இசைக் கச்சேரிகளில் ராகம், தானம், பல்லவி ரொம்ப பிரபலம். பல ரசிகர்கள் இந்த வித்தியாசமான ஸிஜிறியைக் கேட்பதற்கே பல மைல் நடந்து, மணிக்கணக்கில் கச்சேரியில் காத்துக் கொண்டிருப்பார்கள். கீர்த்தனையிலிருந்து பல்லவி வரியை எடுத்து, ஸிஜிறி பாடுவதும் வழக்கம். ‘லோகாவன சதுர’, ‘மஹிமை தெலிய தரமா’... இவையெல்லாம் கீர்த்தனைகளின் முதல் வரி. ஏதாவது ஒரு ‘தீம்’ இல்லாமல் பல்லவி பாடும் முறையும் உண்டு. ‘ஆற்றங்கரை ஓரத்திலே ஒரு வண்டு கிர்ரென கிர்ரென கத்துது’ என்பது போலவும் பல்லவிகள் உண்டு.

ஒரு முறை டைகர், சீர்காழி கச்சேரி ஒன்றில், ஸிஜிறி பாடச் சொல்லிக் கேட்டவுடன், காம்போதி ராகத்தைப் பாடி, வயலினுக்கு இடைவெளி விட்டார். அந்த நேரத்தில்,
‘‘கத்தரிக்காய், கத்தரிக்காய்’’ என்று தெருவில் ஒரு வியாபாரியின் சத்தம். அதைக் கேட்டதும் அவர் பல்லவி வரியாக, ‘கத்தரிக்காய் வாங்க வாயேண்டி தோழி’ என்று பாடியது சமயோசிதம். அவர் இன்னொரு பல்லவியை, ‘உப்புமா கிண்டடி பெண்ணே நன்றாக’ என்று மேடையில் பாடியதற்கு ஏற்ப, சபா கேன்டீன் எல்லாம் ஒரே கமகம!

சரி... சரி... நாம் ரவிகிரண் கச்சேரிக்கு வருவோம். அன்று பொருத்தமாக அவர் பாடிய பல்லவிக்கு வாசித்த பழனிவேல், இனிமேல் அந்தத் தாளத்தில் வாசிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற அளவிற்கு லயார்ப்பணம் செய்தார். புருஷோத்தமன் கஞ்சிராவுடன் அவர் வாசித்த வாசிப்பு, பல வருடங்கள் நினைவில் நிற்கும். மியூசிக் அகாடமி... கச்சேரி பாடுவதற்கும் சரி, கேட்பதற்கும் சரி, ஒரு பொருத்தமான இடம்.

அருமையான மேடை, துல்லியமான ஒலி, தேர்ந்த ரசிகர்கள், இப்படிப் பல நல்ல அம்சங்கள். நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரியை அகாடமியில் கேட்க ரசிகர்கள் திரண்டனர். எம்.ஏ.கிருஷ்ணசாமி வயலின், நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியன் மிருதங்கம், ஏ.எஸ்.கிருஷ்ணன் மோர்சிங். ‘ஸுநாத விநோதினி’ வர்ணம் முடிந்து ‘நின்னாட’ என்கிற கந்நட ராக கீர்த்தனையும் ‘கண்ட ஜுடுமி’ கீர்த்தனையும் தியாகய்யருக்கு அர்ப்பணிப்பு.

அடுத்து வந்த ‘தியாகராஜ யோக’ தீட்சதர் கீர்த்தனை, நித்ய ஸ்ரீயின் குடும்பச் சொத்து. லலிதா ராகம் மெயினாகப் பாடி, ‘நந்நு ப்ரோவு’ கீர்த்தனையில் தனி கேட்டது சுகம். அடாணா ராகத்தில் ராகம், தானம், பல்லவி. பலே, நல்ல முயற்சி. எம்.ஏ.கே வயலின், நெய்வேலி ஸ்கந்தாவின் மிருதங்கம், கிருஷ்ணன் மோர்சிங் கூட்டணி, கச்சேரியை வெற்றியாக்கியது நிச்சயம்.
அன்றே இரவு அகாடமியில் விஜய்சிவா கச்சேரி.

 பாட ஆரம்பிக்கும் முன்பு, ‘ஸா... பா... ஸா...’ என்று முணுமுணுக்கும்போதே பளிச்சென்று ஸ்ருதி சேரக்கூடிய குரல். ரெண்டு தம்புரா பின்னாடி இணைந்ததால், ஒரே ஸ்ருதிமயம்தான். ஸ்ரீராம்குமார் வயலின், ஜே.வைத்தியநாதன் மிருதங்கம். அடடா, எங்கு திரும்பினாலும் நாதம்.

சந்திரசேகர சர்மா கடம். ‘வாதாபி கணபதிம்’ கீர்த்தனையும் ‘ஹிமாத்ரி தனய’ ஆனந்த பைரவி கீர்த்தனையும் கச்சேரியை ராஜபாட்டையில் கொண்டு போனது. ஆரபி ராக ஆலாபனை.
‘மரகதமணி மய’ கீர்த்தனை, ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் ஒரு அருமையான - லய விசேஷமான கீர்த்தனை.

விஜய்சிவா, ஸ்ரீராம்குமாருடன் அந்தக் கீர்த்தனையைப் பாடி ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றது உறுதி. சாமரம் ராகம் அருமை. தீட்சதர் கிருதியான ‘ஸதாச்ரயே’ ரொம்ப கௌரவம். அடுத்தது காம்போதி ராகத்தில், ‘காண கண் கோடி வேண்டும்’. சிவனின் அந்தக் கீர்த்தனையை சிவா பாடியதைக் ‘கேட்க கோடி காதுகள் வேண்டும்’. என்றும் விஜயம்தான் சிவாவின் கச்சேரிக்கு!

அகாடமி கேன்டீனில் மோர்க்களி, வாழைப்பூ வடை, கடலை பக்கோடா அருமையோ அருமை!சிங்கப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி வருடா வருடம் அங்கிருக்கும் திறமை வாய்ந்த கலைஞர்களை இங்கு இசை விழாவில் பாட வைத்து வாய்ப்பளிப்பது சாலச் சிறப்பு. மியூசிக் அகாடமி மினி ஹாலில் நடந்த இசை விழாவில் ஸ்ரீகாந்த் ராதாகிருஷ்ணன் பாட்டு. நல்ல தைரியம், சாரீரம். ‘ஸரஸிருஹாஸன ப்ரியே’, ‘பாஹிமாம்’, ‘எந்நேரமும்’ பூர்விகல்யாணி கீர்த்தனை, சாவேரியில் ராகம் தானம் பல்லவி என்று முழுமையான கச்சேரி. நன்கு உழைத்தால், நல்ல முன்னேற்றம் உண்டென்பதற்கு எடுத்துக்காட்டு ஸ்ரீகாந்த்!

படங்கள்: புதூர் சரவணன்