அழியாத கோலங்கள்



இன்றும் பெயர் பெற்று விளங்கும் பிரசாத் ஸ்டூடியோவை உருவாக்கி தமிழ்நாட்டு சினிமா பொருளாதாரத்தை வளர்த்தவர் எல்.வி.பிரசாத். 35 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் தயாரிப்பான ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் கதாநாயகியின் தாத்தாவாக நடித்து புகழ் பெற்றவர்.

அவரது மறைவுக்குப் பிறகு அவர் மைந்தர் ரமண பிரசாத் அவர்களால் அனைத்தும் நிர்வகிக்கப்படுகிறது. சீனியர் பிரசாத் அவர்கள் என்னிடம் பல முறை கூறிய ஆசையை - அதாவது, ஒரு திரைப்படக் கல்லூரி தொடங்கும் ஆசையை - அவர் குமாரர் நிறைவேற்றி இருக்கிறார்.

பாலசந்தரின் இயக்கத்தில் கமலை நாயனாக வைத்து இந்தியில் ஒரு படம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார் எல்.வி.பிரசாத். தெலுங்கில் வெற்றி கண்ட ‘மரோ சரித்ரா’ (‘மீண்டும் ஒரு சரித்திரம்’ என்பது கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த தமிழாக்கம்) கதையைத் தேர்வு செய்தார். ‘மரோ சரித்ரா’ 1978ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து தாறுமாறான வெற்றியை அடைந்தது. ஒரே ஒரு சென்னை திரையரங்கில் நாள் ஒன்றுக்கு ஒரே காட்சி வீதம் 700 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

நான் ஏற்கனவே கே.பாலசந்தரின் தீவிர ரசிகன். ஆனாலும் இந்தப் படத்தின் கதை என்னைத் தீவிரமாக ஈர்க்கவில்லை. ஆனால் அதை இவர் கொடுத்திருந்த விதம், தெய்வீகக் காதலில் நம்பிக்கை கொண்ட மக்களைக் கவர்ந்தது தெரிந்தது.

 இந்தப் படத்தின் 700 நாள்  ஓட்டத்தின் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம், ‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் கொக்கு காத்திருக்க வேண்டும்’ என்பது தான். அன்று ஒரு திரையரங்கின் இருக்கைகள் 600 முதல் 900 வரை எண்ணலாம். ஆறு சண்டைகள், ஆறு பாடல்கள், ஒரு பெரிய நட்சத்திர நாயகன், அவருடன் காதல் செய்ய ஒரு கவர்ச்சி அழகி... இவையே இந்த 600 முதல் 900 இருக்கைகளை நிரப்பலாம்.

சென்னையில் இந்த ‘மரோ சரித்ரா’வின் 700 நாள் ஓட்டத்திலும் ஒரு காட்சிக்கு 200 பேர்களே வந்திருப்பார்கள். மொத்தம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் பார்த்திருக்கலாம். மொத்த வசூல் ஏழு லட்சம் ரூபாய். படத்தை 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வினியோகஸ்தருக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் லாபம் கிடைத்திருக்கலாம்.

எப்போதுமே ஒரு நல்ல, தரமான, புதிய கருத்துள்ள படம் ஓடுவதற்கு அதற்கேற்ற ரசிகர்கள் வேண்டும். அவர்கள் சின்ஸியராக ஒரு அலுவலகத்தில் தினம் 8 மணி நேரம் உழைப்பவர்களாக இருப்பார்கள். இந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்டு அதைப் பார்ப்பதற்கு அவர்கள் ஒரு நாள் ஒதுக்க வேண்டும். அதுவரை உங்கள் ‘நல்ல படம்’ திரையரங்குகளில் நிலைக்க வேண்டும். 
                    
 இந்திப் படம் விஷயமாகப் பேச கே.பி - கமல் ஆகிய இருவரின் சார்பில் எல்.வி.பிரசாத்தை சந்தித்தேன். ஒப்பந்தம் போடுவது என் பணி. கமல் தமிழில் மூன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நாட்கள் அவை. பிரசாத் ‘‘ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்ததில்லை’’ என்றார். அவரும் உறுதியாக இருக்க, நானும் உறுதியாக இருக்க... எங்களுக்குள் பெரும் வாக்குவாதமே ஏற்பட்டது. அவர் ஒண்ணரை, ஒண்ணே முக்கால் என்று வந்து, ‘‘படம் 100 நாட்கள் ஓடினால், கூட ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன்’’ எனச் சொன்னார்.

நான் ஒரு வழி கூறினேன்... ‘‘சார்! ஹீரோவுக்கும் இயக்குநருக்கும் சம்பளம் மூன்றரை லட்சம் என்று நிர்ணயிப்போம். ஐம்பதாயிரம் ரூபாய் முன்பணம் கொடுங்கள். படம் 175 நாட்கள் ஓடிய பிறகு, இருவருக்கும் ஆளுக்கு மூன்று லட்சம் கொடுப்பதாக ஒப்பந்தம் எழுதுங்கள். இரண்டு பேரிடமும் கையெழுத்து வாங்கி அனுப்புகிறேன்!’’ என்று சொல்லி அதன்படியே வாங்கி அனுப்பினேன். ஒப்பந்தத்தைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து அதில் சாட்சிக் கையெழுத்து போடச் சொன்னார்.

நான் கையெழுத்து போட்டுவிட்டு, ‘‘ஒரு இயக்குநரும் ஹீரோவும் என்னை நம்பிய அளவுக்கு நீஙகள் நம்பவில்லை என்று தெரிகிறது’’ என்றேன்.‘‘இந்த ஒப்பந்தம் சரியென்று நீ நினைக்கிறாயா? உண்மையில் உன் இடத்தில் நான் இருந்தால் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்’’ என்றார்.  நான் சொன்னேன்...  ‘‘30 படங்களின் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அனுபவம் பெற்றிருக்கும் நீங்கள் தயாரித்து, கே.பி. அவர்கள் இயக்கி, கமல் நடித்து இந்தியில் அது 175 நாட்கள் ஓடாவிட்டால் எப்படி? உங்கள் மூன்று பேர் திறமையில் நான் வைத்திருக்கும் நம்பிக்கை, உங்களுக்கு என் நேர்மையின் மீது இல்லை என நினைக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு வந்தேன். ‘ஏக் துஜே கே லியே’ நான் கணித்ததையும் தாண்டி ஓடியதும், பிரசாத் அவர்கள் சொன்னதைச் செய்ததும் நடந்தது.

 அதன்பின் ‘ஹாசன் பிரதர்ஸ்’ என்ற எங்கள் நிறுவனத்தின் பெயரில் ‘ராஜபார்வை’ படம் தயாரித்தோம். அதில் கதாநாயகியின் தாத்தாவாக நடிக்க எல்.வி.பிரசாத் மாதிரி நரைத்த தலையுடன் ஒரு முகம் வேண்டும் என்று கமல் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்.

உடனே பிரசாத் சாரைப் பார்த்து, ‘ராஜபார்வை’ கதையையும் தாத்தா கேரக்டரையும் விளக்கினேன். ‘‘நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும். கமல் உங்களிடம் கேட்கத் தயங்குகிறார். நீங்கள் கிடைக்கவில்லை என்றால் இந்தக் கதையை விட்டுவிடுவோம் என்று இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவிடம் கமல் கூறினார்!’’ என்றதும் அவர் ஒப்புக்கொண்டு விட்டார்.

‘‘இந்தியாவின் சிறந்த ஸ்டூடியோ அதிபர்... ஆசியாவின் முதல் 70 எம்.எம் ஸ்டூடியோவின் தலைவர்... அவருக்கு ஏன் நடிக்கும் வேலை?’’ என அவரது மகன் ரமேஷ் பிரசாத் எதிர்த்தார். ‘‘உங்கள் தந்தை 30 படங்கள் செய்து, ஸ்டூடியோ, லேபாரட்டரி எல்லாம் கட்டிவிட்டார். இந்தப் படத்தில் நடித்தால் பெரியவர் மனம் சந்தோஷம் பெறும்.

இன்னும் பத்தாண்டுகள் சாதனையோடு அவர் வாழ்நாள் நீளும்!’’ என்று உறுதி கொடுத்து அவரையும் என் பக்கம் இழுத்துக்கொண்டேன். 1981ல் ‘ராஜபார்வை’ வந்தது. வியாபார வெற்றியில்லாவிட்டாலும் பிரசாத் நடிப்பு பெயரும் புகழும் பெற்றது. அந்த வருடம் அவார்டு தலைமையை பிரசாத் ஒப்புக் கொண்டதால் விருதுகளிலிருந்து தன்னைத் தள்ளி வைத்துவிட்டார்.

பிரசாத் அவர்கள் என்னை இயக்குநராக்கி படம் செய்ய கிட்டத்தட்ட ஒரு வருஷமாக முயன்றார். என் கதைகளை அவர் ஒப்புக்கொள்ளாமலும், அவர் கதைகள் எனக்குப் பிடிக்காமலும் போயின. நான் எங்கோ கிடைத்த வாய்ப்பில் நுழைந்து எனக்கு எட்டிய தேசிய விருதோடு முடித்துக் கொண்டேன்.  என் தந்தையின் வயதில் ஒரு இனிய நண்பரும் வழிகாட்டியுமான L.V அவர்கள் இன்றும் என்னால் மறக்க முடியாத  மனிதர்.

என்னை இயக்குநராக  உயர்த்த முடியவில்லை என்றாலும் ஒரு ஆசானாக என் அறிவை வளர்த்தவர். அவர் 1994 வரை வாழ்ந்தார். PRASATH... MAY HIS TRIBE INCREASE.எல்.வி.பிரசாத் தயாரித்து, கே.பி. அவர்கள் இயக்கி, கமல் நடித்து இந்தியில் அந்தப் படம் 175 நாட்கள் ஓடாவிட்டால் எப்படி?

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்