சாஃப்ட்வேரை விட்டோம்... சாப்பாட்டுக் கலையில் வென்றோம்!



திருமண சிறப்பிதழ்

பெங்களூருவில் சாதிக்கும் இளைஞர்கள்

வெறுமனே விஜய், விமல் என்றால் ‘ஹீரோவா?’ என்பீர்கள். பெங்களூரு என ஊரைச் சொன்னால், சாஃப்ட்வேர் இளைஞர்கள் என்பீர்கள். ஐந்து வருடம் முன்பு வரை உங்கள் கெஸ் சரி. ஆனால், இப்போது இவர்கள் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் அல்ல... அதுக்கும் மேல! வருடத்துக்கு லட்சங்களில் டர்ன் ஓவர் செய்யும் சமையல்காரர்களாக்கும்!

‘‘பூர்வீகம் பாலக்காடு பாஸ். ஸ்கூல் படிக்கும்போதே பெங்களூருல செட்டில் ஆகியாச்சு. ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துல கமல் சார் பண்ணின காமேஸ்வரன் கேரக்டரை இப்போ நாங்க கச்சிதமா பண்ணிட்டு இருக்கோம்!’’ - நச்சென ஓப்பனிங் கார்டு போடுகிறார் விஜய். பின்னணியில் அவர்களின் ‘ஐயர்ஸ் கேட்டரர்ஸ்’ போர்டு அம்சமாய்!

‘‘ரெக்கார்ட்ஸ்படி என் பேரு ஜெயச்சந்திரன், தம்பி பேரு ஜெயசங்கர். வீட்டுல விஜய், விமல்னு கூப்பிடுவாங்க. நான் பி.காம் முடிச்சிட்டு ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் செக்யூரிட்டி நிறுவனத்துல பிராஞ்ச் மேனேஜரா இருந்தேன். தம்பி விமல், பி.காம் ப்ளஸ் டெக்னிக்கல் ரைட்டிங் படிச்சுட்டு சி.டி.எஸ் சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்த்தான். ரெண்டு பேருக்குமே கை நிறைய சம்பளம்.

நான் வருஷ போனஸே ஐந்தரை லட்சம் ரூபாய் வாங்கினேன். ரெண்டு பேருமே நல்ல வொர்க்கர்ஸ்னு பேரெடுத்தோம். ஆனா, ஒரே மாதிரியான வேலையை பார்க்க ரெண்டு பேருக்குமே பிடிக்கல. வேற ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. சொல்லி வச்சாப்ல 2010ம் வருஷம் ஒருநாள் திடீர்னு வேலையை விட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டோம்!’’ - விஜய் கூலாகச் சொல்ல, நமக்குப் பதறுகிறது.

‘‘ரிசைன் லெட்டர் கொடுத்ததும் உங்களை மாதிரியேதான் எங்க ஆபீஸ்லயும் என்னை ஆச்சரியமா பார்த்தாங்க. ‘நல்லா வொர்க் பண்றீங்க. அப்புறமா ஏன் போறீங்க?’னு கேட்டாங்க. ‘பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்’னு சொன்னதும் எல்லாரும் சேர்ந்து எச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதெல்லாம் ரிஸ்க். உள்ளதும் போயிடும். அப்படி இப்படினு எல்லாம் நெகட்டிவ் தாட்ஸ். அப்போ நான் எதுவும் பேசலை. ஆனா, இப்போ அவங்களே கை குலுக்கி பாராட்டுறாங்க!’’ என்கிறார் விமல் உற்சாகம் பொங்க.

‘‘வேலையை விட்டுட்டோமே தவிர, என்ன பண்ணப் போறோம்ங்கிற ஐடியா அப்ப இல்ல. எனக்கு அப்போதான் கல்யாணமாகி ஒன்றரை வயசுல ஒரு குழந்தை இருந்துச்சு. தம்பிக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. நாங்க ரெண்டு பேருமே அக்கா, தங்கையை திருமணம் பண்ணிருக்கோம். அந்த நேரத்துல என்னோட அப்பா எங்களைத் தட்டிக் கொடுத்தார். ‘உங்களால முடியும்’னு அம்மா சொன்னாங்க. மனைவி பக்கமிருந்து தைரிய வார்த்தைகள் வந்துச்சு.

ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாம்னு நினைச்சோம். ஆனா, அந்த பிசினஸ்ல நிறைய பேர் இருக்காங்க. வேற புதுசா பண்ணலாமேன்னு யோசிச்சப்பதான் எங்க மாமனார் கணேஷ், கேட்டரிங் பண்ணிட்டு இருந்ததை பார்த்தோம். அவர் கூடவே சேர்ந்து ஓட ஆரம்பிச்சோம். மெதுவா முளைச்சுது ‘ஐயர்ஸ் கேட்டரர்ஸ்’. பெங்களூரூல தமிழ் பிராமணர்கள் கணிசமா இருக்காங்க. ஆனா, அவங்களுக்கான கேட்டரிங் குறைவு. அவங்கள டார்கெட்டா வச்சு இதைத் தொடங்கினோம்!’’ என்கிற விஜய்க்கு இப்போது 36 வயதுதான். தம்பி விமலுக்கு 34. 

‘‘ஆரம்பிச்ச புதுசுல ஆர்டர் வர்றதே கஷ்டமா இருந்தது. நாங்க விடல. ஒரு கல்யாண ஆர்டர் கிடைச்சாலும் அதுக்கு வர்ற ஆயிரம் பேரும் பத்தாயிரம் இடத்துல நம்மளைப் பத்திப் பேசணும்னு முடிவெடுத்தோம். பந்திக்கு வெளிய பாப் கார்ன், பீடா ஸ்டால்ஸோட சாக்லேட் ஃபவுன்டனும் போட்டோம். பந்திக்கு நடுவுல ஐஸ் வண்டியை சுத்தி வர விட்டோம்.

யார் என்ன வெரைட்டி ஐஸ் கேட்டாலும் அதுல கிடைக்கும். அடுத்து, ரெகுலர் மீல்ஸைத் தாண்டி, நார்த் இண்டியன், சைனீஸ், இத்தாலியன்னு புதுசான ஐட்டங்கள் நிறைய சேர்த்தோம். சமையல்ல ஒருத்தர் செட்டாகிட்டா அவ்வளவு சீக்கிரம் மாத்த மாட்டாங்க. மெதுவா மவுத் பப்ளிசிட்டி மூலமா அதைத் தகர்த்து நாங்க உள்ள நுழைஞ்சோம். இப்ப நிக்க நேரமில்ல... ஓடிக்கிட்டே இருக்கோம். வேலை பார்த்த காலத்தை விட நல்லா சம்பாதிக்கிறோம். முக்கியமா, வாழ்க்கை போரடிக்கலை!’’ என்கிறவர்கள், தற்போது திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் கவனிக்கும் ஈவென்ட் மேனேஜ்மென்டையும் கையில் எடுத்திருக்கிறார்கள்.

‘‘சில பேர் உணவுக்கு ஆர்டர் கொடுக்கும்போதே ‘நாதஸ்வரக்காரர்கள் தெரியுமா? திருமணக் கோலம் போடுவறங்க இருக்காங்களா?’ன்னு கேட்பாங்க. அதையும் நாமே பண்ணலாமேன்னு செஞ்சோம். இப்போ திருமணப் பதிவு வரை செய்து கொடுக்குறோம். நாங்க, பெங்களூரூ தவிர வேற இடங்களுக்கு போறதில்ல. சிலர் ‘சென்னை வர முடியுமா?’னு கேப்பாங்க.

 ‘அங்கேயே நிறைய கேட்டரர்ஸ் இருக்காங்களே’ன்னு சொல்லிடுவோம். அது நமக்கு சிரமம். அதோட, அங்குள்ள கேட்டரர்ஸை நாம பாதிக்கக் கூடாதுனு ஒரு பாலிஸி. எங்களைப் பொறுத்தவரை இருக்கிறதை சிறப்பா செய்யணும். அவ்வளவுதான்!’’ என்கிறார்கள் இந்த சக்ஸஸ் சமையல்காரர்கள்!

- பேராச்சி கண்ணன்