குட்டிச்சுவர் சிந்தனைகள்



நேயர்களே! வண்டு மார்க் லுங்கிகள் வழங்கும் டாப் டென் திரைப்படங்கள் நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...இந்த வாரப் புதுவரவு, ஜட்ஜய்யா கொக்கி குமார் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ரன்னை அறிந்தால்’. நாடே எதிர்பார்த்த ஒரு கிரிக்கெட் மேட்ச்சில் ஸ்கோர் குறிக்கும் மேட்ச் ரெப்ரி... தனது டோட்டல் மிஸ்டேக்கால், அய்யய்யாவில் இருந்து ஒரே நாளில் அய்யய்யோவான கதை. இந்தப் படத்தைப் பற்றி பலப்பல விமர்சனங்கள் வருவதால், விரிவாக அடுத்த வாரம் பார்ப்போம். ‘ரன்னை அறிந்தால்’ - முதலில் எண்ணை அறிந்தால்!

பத்தாவது இடத்தில் இருக்கும் படம் மீடியம் சூப்பர்ஸ்டார் வம்பரசன் நடித்த ‘அனுமார் வாலு’. ஒரு தமிழ்ப் படம் வருமா வராதா என்பதையே கதையாக்கி, அதைப் படமாக்கி, க்ளைமேக்ஸ் வரை நம்மை தவிப்புக்கு ஆளாக்கி அற்புதமா எடுத்திருக்காங்க. இந்தப் படத்தைப் பத்தி போதிய அளவு அலசி துவைச்சு காயப் போட்டு அயர்ன் பண்ணி விட்டதால, எடுத்து மடிச்சு வச்சுட்டு அடுத்த இடத்தில் உள்ள படத்தைப் பார்ப்போம். 

மொத்தத்தில் அனுமார் வாலு - புரொடியூசருக்கு பாலு.இந்த வாரம் ஒன்பதாவது இடத்தில இருக்கும் படம், தொண்டர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாய் உருவான ‘பூஜைக்கு நேரமாச்சு’. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இவ்வளவு செலவு செய்து படம் எதுவும் எடுத்ததில்லை. கிட்டத்தட்ட 254555222 பால் குடங்கள், 524517514 காவடிகள், 21454255255 அங்கப்பிரதட்சணங்கள், 245254752 பொங்கல் வைப்புகள் என படம் முழுக்க படு பிரமாண்டமான காட்சிகள் நிறைந்திருக்கின்றன. க்ளைமேக்சில் மொட்டை போட ஆள் கிடைக்காதபோது, எங்க நம்மளையும் கூப்பிட்டுடுவாங்களோ என படம் பார்க்கும் அனைவரும் பயப்படும் அளவுக்கு அருமையான திரைக்கதை. கிட்டத்தட்ட இந்தப் படம் தமிழ்நாட்டில் 8 மாசமாக ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. 

எட்டாவது இடத்தில் இருக்கும் கேப்டனின் ‘சாத்துங்கடா கேட்டை’ ஆக்‌ஷன் படத்தைப் பற்றி பலமுறை அலசி விட்டதால், ஏழாவது இடத்தில் தொடர்ந்து எட்டு வாரமாக இருக்கும் சண்டைகுமாரின் ‘மக்குபாய்’ படத்தைப் பார்ப்போம். இதில் பல வசனங்களை ஏற்கனவே வெளிவந்த ‘தாய் சொல்லே தத்துவம்’ படத்திலிருந்து அப்படியே உருவி இருக்கிறார்கள். காட்சிகளும் பழைய தமிழ் சினிமாக்களை நினைவுபடுத்துகின்றன.  ஃப்ளாஷ்பேக்கில் இருப்பதற்கும் கதாநாயகன் க்ளைமேக்சில் இருப்பதற்கும் துளியும் சம்பந்தமில்லாமல் இருப்பது கதைக்கு ஒட்டவில்லை.

அடுத்தது  ஆக்டர் கோபதாசின் ‘56 வயதினிலே’. தன் மகனுக்கு 56 வயது வரை முதல்வர் ஆசை காண்பித்து வளர்ப்பதும், பிறகு அதுவே பழகிடும் என விட்டுவிடுவதுமான அரசியல் கதை. ‘2016ல் நம்ம ஆட்சி... காரைக்குடில உங்க ஆச்சி’, ‘என் பையன் பத்தாவது பாஸுங்க... எங்களைத் தவிர எல்லோரும் லூசுங்க’ என திரும்பத் திரும்ப வரும் வசனங்கள் சலிப்பையும் கேண்டீனில் கடலை விற்பவருக்கு காக்கா வலிப்பையும் தந்திருக்கின்றன. மொத்தத்தில் கோபதாசின்  ‘56 வயதினிலே’ - காக்கா முட்டை கடலினிலே!

ஐந்தாம் இடத்தில இருக்கும் ஈவிகேஎஸ் கடுங்கோபனின் ‘நாங்கள் ஜாக்கிரதை’, நான்காம் இடத்தில் இருக்கும்  பன்.ராதாவின் ‘மாஸ் முட்டை மாஸ்’ பற்றி போதிய அளவில் பார்த்து விட்டதால், இனி மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகுல் காந்தியின் ‘கடவுள் பாதி கேள்வி பாதி’. காணாமல் போய் விட்டதாக எல்லோரும் நினைக்கும் ஹீரோ, திரும்பி வந்து இந்த சமூகத்தை தன் கேள்விகளால் வறுத்தெடுக்கும் கதை. முதல் பாதி முன்னாள் அமைச்சருக்கு கிடைத்த மைக் போல மொழமொழவென இருந்தாலும், இரண்டாம் பாதி அஜித்திடம் கிடைத்த பைக் போல படு வேகமாய் செல்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் படம் சின்னதம்பி, ஆந்திரா தம்பி, டெல்லியண்ணன், திரிபுரசுந்தரி,  சொப்பனசுந்தரி என ஒரு பெரும் பட்டாளமே சேர்ந்து நடித்த ‘சொக்கலால் ஜுவல்லரி’. ஒரு நகைக் கடைய திறக்க ஒரு குடும்பம் தயார் ஆவதே இந்தப் படத்தின் கதை. கலர்ஃபுல்லான காட்சிகள் நிறைந்திருந்தாலும், மொக்கையான வசனங்கள் நம்மை கட்டையால் அடிக்கின்றன. க்ளைமேக்சில் இவர்கள் கடையைத் திறக்காமல், கடை செக்யூரிட்டியே சாவி எடுத்து திறந்து விட்டுப் போகும் ட்விஸ்ட் நாம் எதிர்பார்க்காத ஒன்று. ‘கடையை இத்தன பேரு சேர்ந்து திறந்தாங்களே, அப்புறம் யாரு பூட்டுனா’ என்ற கேள்வியை நம்மிடமே விட்டுவிடுகிறார் இயக்குனர். மொத்தத்தில் ‘சொக்கலால் ஜுவல்லரி’ - பார்த்து புல்லரி.

இரண்டு வாரங்களாக முதல் இடத்தில் இருக்கும் படம் ‘தண்டகாசுப்பட்டி’. முன்னூறு பேரு படித்த எங்கள் பள்ளியில் நானூறு பேரு நூத்துக்கு நூறு என ஆரம்பிக்கும் கதை. பல்லாயிரம் புத்தகம் கொண்ட லைப்ரரி என பழைய பேப்பர் கடை வைத்திருப்பது, அருமையான சாப்பாடு என அன்னதான சாப்பாட்டைக் கொடுப்பது, விளையாட மிகப்பெரும் மைதானம் என வறண்டு போன காவிரி ஆற்றைக் காட்டுவது என பல ‘சதுரங்க வேட்டை’ டெக்னிக்குகளை இந்தப் பள்ளிக்கூட சீசனில் பள்ளி  நிர்வாகங்கள் காட்டி மக்களை மயக்கு கின்றனர் என்பதை தெளிவாகச் சொல்லும் இயக்குனருக்கு ஒரு சபாஷ். மொத்தத்தில் ‘தண்டகாசுப்பட்டி’ - செம கெட்டி.

கோர்ட்டும் ஜட்ஜய்யாவும் இப்பதான் வருமானத்துக்கு அதிகமா 10 சதவீதத்துக்குள்ள சொத்து சேர்க்கிறது தப்பில்லன்னு மக்களுக்கு சொல்லியிருக்காங்க. ஆனா, தமிழ்நாட்டுல இதையெல்லாம் எப்பவோ பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்க. ஃப்ரிட்ஜே இல்லாட்டிகூட 120 ரூபா பீர் விலையில பத்து ரூபா சேர்த்து வாங்கி, டாஸ்மாக் சேல்ஸ்மேன்கள் சட்டம் சொல்ற கட்டத்துக்குள்ளதான் நிக்கிறாங்க.

9 ரூபா டிக்கெட்டுக்கு 10 ரூபா நோட்டு கொடுத்தா, சில்லறை இல்லன்னு சிரிப்பாங்க கண்டக்டருங்க! அட, மளிகைக் கடைக்கு எண்ணெய வாங்கவோ வெண்ணெய வாங்கவோ போற சின்னப் பசங்க கூட, கொடுத்த காசுல கொசுற மட்டும்தான் கமிஷன் அடிக்கிறாங்க. இவ்வளவு ஏன் சார், கோயில் பூசாரிங்க கூட சாமிய வேண்டிட்டு போடுற பணத்துல உண்டியல்ல விழுற ஹிட்டுங்களை விட்டுட்டு, தட்டுல விழுற பிட்டுங்களை மட்டும்தான் எக்ஸ்ட்ராவா இணைக்கிறாங்க. இப்படி ஆட்டைய போட்டாலும் அதுல சேட்டைய போடாம இருக்கிறத சின்னச் சின்ன சில்வண்டுகளே தெரிஞ்சி வச்சிருக்கிறப்ப, பெரிய பெரிய பொன் வண்டுகள் எல்லாம் புரிஞ்சுக்காம போயிட்டாங்களே!

ஆல்தோட்ட பூபதி