கிலியேற்றும் கிளி மனிதன்!



விநோத ரஸ மஞ்சரி

செல்லப் பிராணிகளை நேசிக்கலாம்... ஆனால் இந்த அளவுக்கா? என உலகத்தையே அரண்டு போக வைத்திருக்கிறார் டெட் ரிச்சர்டு. இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கிறுக்குத்தனமான கிளி பிரியர். வீட்டில் எக்கச்சக்க கிளிகளை வளர்க்கிறார். தன் செல்லக் கிளிகளைப் போலவே தன்னையும் உருமாற்றிக் கொள்ளும் முயற்சியில் தன் காதுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிட்டார் ரிச்சர்டு.

‘‘நான் ஒரு டாட்டூ மனிதன். 1977ல் முதல் டாட்டூ போட்டுக் கொண்டேன். இன்றுவரை என் உடலில் 110 முறை டாட்டூ போட்டுவிட்டேன். எல்லாமே என் செல்லங்கள் போல என்னையும் ஒரு கிளியாக மாற்றும் டாட்டூக்கள்தான்!’’ என்கிற ரிச்சர்டுக்கு இப்போது 56 வயது.
பஞ்சவர்ணக் கிளியைப் போலவே முகம் முழுதும் சிவப்பு, பச்சை நிறங்களால் நிரந்தரமாக டாட்டூ குத்தியிருப்பது இவரின் அடையாளம். அதையெல்லாம்கூட ‘சரி, கிளிக்கிறுக்கு’ என சகித்துக் கொண்டிருந்த சுற்றமும் நட்பும் இந்த காது அகற்றத்தில்தான் கிலியாகிவிட்டன.

‘‘இந்தத் தோற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது. நார்மலாகவே என் காதுகள் கொஞ்சம் பெரியவை. அவற்றின் மீது எனக்கு அதிருப்தி இருந்தது. இப்போது நான் என்னை அழகாக உணர்கிறேன். கண்ணாடியில் என்னை அடிக்கடி பார்த்து ரசிக்கிறேன்.

மிக ஆபத்தான காது அகற்றும் ஆபரேஷனை எனக்காக செய்து கொடுத்த மருத்துவருக்கு நன்றி. அடுத்து என் மூக்கையும் கிளி போல மாற்றித் தரும் ஒரு மருத்துவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் ரிச்சர்டு கூலாக.அப்படி ஒருவர் கிடைக்கக் கூடாது என வேண்டுவோம்!

- ரெமோ