தீபாவளி செலவைக் குறைப்பது எப்படி?



கண்டிப்பாக இந்த யோசனையைக் கடைப்பிடிக்க வேண்டாம்!

‘இந்த நரகாசுரனுக்கு சாகும்போது கூட ஏன் இந்த கெட்ட எண்ணம்? தீபாவளிக்கு எல்லோரும் துணி வாங்கணும். பட்டாசு வெடிக்கணும். அந்தக் காலத்தில் ஏது பட்டாசு? இது கதையில் யாரோ சிவகாசி கடைக்காரர்கள்  சேர்த்துவிட்ட இடைச்செருகலாக இருக்கும். இதனால் எவ்வளவு செலவு! இங்கே இருக்கிற செலவுக்கே பணம் இல்லே!’ -  புலம்பிக்கொண்டே தெருவில் நடந்தேன்.

கண்ணில் பட்டது ஒரு முதியோர் இல்லம்.‘இவர்கள் தீபாவளிக்கு என்ன செய்வார்கள்? அமெரிக்காவிலிருந்தோ, பக்கத்தில் ஆவடியிலிருந்தோ, ‘ஹேப்பி தீபாவளி, மாம்!’ என்று பிள்ளைகளிடமிருந்து போன் வரும். பிள்ளைகள் சம்பிரதாய விசாரிப்புகள் செய்தபிறகு போனை வைத்துவிட்டு, பின்னால் தன்னை இதே போல் ஒரு முதியோர் இல்லத்துக்கு அனுப்பப் போகும் தங்கள் பிள்ளைகளுடன் பட்டாசு வெடிப்பார்கள், அந்த நன்றி கெட்ட...’ - எதிரே இருந்த கடையில் ஒரு டீயும், கோல்டு ஃப்ளேக்கும் அடித்துக்கொண்டே யோசித்தேன்.

ஒரு முடிவுடன் நுழைந்தேன் அந்த முதியோர் இல்லத்துக்குள். சுவரிலேயே சோகமா? அல்லது, என் கற்பனையா? ஆபீஸ் ரூமில், வார்த்தையில்லாமலேயே,  ‘ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க’ என்பது போலிருந்தது அந்தப் பெண் முகம். ஒருவேளை, நான் என் அம்மாவைச் சேர்க்க வந்த ஒரு ‘நன்றி கெட்ட…’ என்று நினைத்தாரோ? திருவாய் திறந்தது, ‘‘என்ன வேணும்?’’நான், ‘‘இந்த வருஷம் தீபாவளிக்கு இந்த இல்லத்திலிருந்து ஒருத்தரை என் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் சந்தோஷப்படுத்தலாம்னு நினைச்சேன். முடியுமா?’’

அந்த அம்மாவின் முக மாற்றத்தை சிவாஜியாலும் நடிக்க முடியாது. நவ ரசத்தில் ஒரு ஐந்து வந்திருக்கும். ‘‘உங்களால்தான் தமிழ்நாட்டில் மழை பெய்கிறது!’’ என்று சொல்ல, ‘‘என் கடமைதானே’’ என்று வழக்கமான சினிமா வசனம் பேசினேன்.

‘‘ஒரு சின்ன விஷயம். இந்த இல்லத்துலயே ரொம்ப வயசானவங்க யார்? தப்பா நினைக்காதீங்க. அடுத்த தீபாவளி வரை இருக்குறதே சந்தேகம்ங்கற மாதிரி தெரியற யாரையாவது கூட்டிட்டுப் போறேன். ஏன்னா, அவரோட கடைசி தீபாவளி சந்தோஷமா இருக்கட்டும்!’’அந்த அம்மா முகத்தில் கண்ணீர்.

‘‘ஒருத்தர் இருக்கார். டாக்டர்கள் நம்பிக்கை இழந்து கை விரிச்சுட்டாங்க. எப்போ வேணும்னாலும் போகலாம்!’’ ‘‘சரி. அவரையே அழைச்சுட்டுப் போறேன். என் மனைவிக்கு இதெல்லாம் புரியாது. சொந்தக்காரர்னுதான் சொல்லணும்.

தீபாவளிக்கு இன்னும் 1 மாசம் இருக்கு. அதனால என் சொந்தக்காரர்னு பொய் சொல்லி, இன்னிக்கே ஒரு தடவை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன். திடீர்னு தீபாவளிக்கு ஒரு புது சொந்தக்காரரை அழைச்சிட்டுப் போனா, சந்தேகப்படுவா. சாயங்காலம் திருப்பிக் கூட்டி வந்து விட்டுடறேன். சரியா?’’

‘‘தாராளமா! நான் போய் அவரை இப்பவே அழைச்சுட்டு வர்றேன்!’’ என்றார் அந்த அம்மா. திரும்பி வந்தார், அவருடன். அவர் வீல் சேரில்... பேசக் கஷ்டப்பட்டார். கடைசி தீபாவளி போலத்தான் தோன்றியது. ‘‘இவர் பேர் சீனிவாசன். இவருக்கு யாரும் கிடையாது. போன நிமிஷம் என்ன நடந்தது என்பது இந்த நிமிஷம் தெரியாது. மறதி ஜாஸ்தி!’’

‘‘அதான் நான் வந்துட்டேனே!’’ என்று அவரை வீட்டுக்கு அழைத்துப் போனேன். என் மனைவிக்கு, குழந்தைகளுக்கு, நானே பார்த்து பல வருஷங்களான ‘என் ஒண்ணு விட்ட சித்தப்பா’வை அறிமுகம் செய்தேன்.

அவள் கேட்கவே இல்லை, ‘இவ்வளவு நாள் இவரைப் பத்தி சொல்லவே இல்லையே... எப்படி, எந்த ஒண்ணு விட்டது’ என்றெல்லாம். பரிதாபத்தினாலோ, அவள் அப்பா நினைவாலோ, விழுந்து விழுந்து கவனித்தாள். குழந்தைகள் அவரை விடவேயில்லை. அவருக்கும் ஒரே சந்தோஷம். முடிந்தவரை சாப்பிட்டார். பேசினார். விளையாடினார்.

‘அவர் நம் சொந்தம் இல்லை’ என்கிற மேட்டர் வெளியே வராதபடி, நான் பேச்சை மாற்றி மேனேஜ் செய்தேன். எனக்கு அப்பா, அம்மா இப்போது இல்லை. அவர்களும் தங்கள் வீட்டுக்கு ஒரே குழந்தைகளானதால், மாமா, கஸின் என இந்தப் பொய்யில் என்னை மாட்டி விடவும் ஆளில்லை.

‘‘சரி, அவரை விட்டுட்டு வர்றேன்!’’ என்றபோது மனைவியும் குழந்தைகளும் அழாத குறை. என் மனைவி அவரிடம், ‘‘’தீபாவளிக்கு கண்டிப்பா வரணும். நீங்க வராம எங்க வீட்டுல தீபாவளி இல்ல!’’ என்றாள் கலங்கிய கண்களோடு!

நான் மனதுக்குள் சிரித்தேன். ‘என் திட்டம் இவ்வளவு ஈஸியாக நடக்கிறதே!’‘‘அவர் இப்போ ஊருக்குப் போறார். தீபாவளிக்குள்ள வந்துட்டா, இங்கதான்!’’ என்றபடி, அவரைத் திருப்பிக் கொண்டு போய் இல்லத்தில் விட்டேன். அவர் கண்களில் ஒரு நன்றி + திரும்பி இங்கே வந்தோமே என்ற சோகம். திரும்பி வந்தேன். மனைவி சொன்னாள், ‘‘தீபாவளிக்கு துணி எடுக்கணும். நம்ம சித்தப்பாவுக்கும் சேர்த்தே எடுங்க!’’

இரண்டு வாரங்கள் போனது. வீட்டில் துணி, பட்டாசு பிடுங்கல் தொடங்கியது.ஆபீஸிலிருந்து சோர்வாக வந்த என்னிடம், ‘‘கிளம்புங்க. இன்னும் 2 வாரம்தான் இருக்கு. போய் துணி வாங்கலாம்!’’ என்றாள் மனைவி.நான் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டேன். ‘‘எப்படிச் சொல்றதுனு தெரியல. நம்ம வீட்ல தீபாவளி இந்த வருஷம் இல்லை. சீனு சித்தப்பா போயிட்டாரு. அங்கயே அடக்கம் பண்ணிட்டாங்களாம். இப்பதான் போன் வந்தது!’’

மனைவியின் கண்களில் நீரோட்டம். எனக்கு ஒரு அல்ப சந்தோஷம்... ‘ஒரு நாள் பார்த்தவர் போனதிற்கே அழுகிறாளே, நான் போனால் எப்படி அழுவாள்! நமக்கு அன்பான மனைவிதான். அவளை நல்லா பாத்துக்கணும்!’போய் விளக்கேற்றினாள். குழந்தைகளுக்கும் புரிய வைத்தாள், இந்த வருடம் ஏன் தீபாவளி இல்லையென்று. அவர்களும் தீபாவளியை விட தாத்தா போனதிற்கே சோகப்பட்டனர். அவர்களை நன்றாகவே வளர்த்திருக்கிறேன்.

நான், என்னுடைய தீபாவளி செலவை மிச்சப்படுத்த போட்ட மாஸ்டர் ப்ளான் கச்சிதமாக நிறைவேறியதற்காக என்னைப் பாராட்டிக் கொண்டேன். இல்லாத ஒரு சித்தப்பாவை சிருஷ்டித்து, சாகடித்து, தீபாவளி கேன்சல். செலவு மிச்சம்!!! என்ன ஐடியா! ஒரு தவறு கூட இல்லாத செயல்பாடு. இந்தத் திறமை வேலையில் இருந்திருந்தால், மேனேஜர் ஆகி, அந்த சம்பளத்தில், தீபாவளியை நன்றாகக் கொண்டாடியிருக்கலாமே! - இது நான் யோசிக்க வேண்டிய விஷயம்.

தீபாவளி அதிக செலவில்லாமல், திரைக்கு வந்து சில மணி நேரமே ஆன படம் பார்ப்பதிலேயே முடிந்தது. சில வாரங்கள் கழித்து அந்த முதியோர் இல்லத்திலிருந்து பல போன் கால்கள் வந்தன. நான் எடுக்கவேயில்லை. எஸ்.எம்.எஸ் வந்தது, ‘அந்தப் பெரிசு சீனிவாசன் நிஜமாகவே மண்டையைப் போட்டார்’ என்று. நான் பதில் அனுப்பவில்லை.

‘அடப்பாவி! நீ இவ்ளோ பெரிய ஃப்ராடா?’ என்றுதானே நினைக்கிறீர்கள்? நானே கடைசியில் உண்மையான காரணத்தை உங்களுக்குச் சொல்லலேன்னா, நீங்களும் என்னை ‘ஆஹா, எவ்ளோ ஒரு நல்லவன்’னுதானே சொல்லியிருப்பீங்க?

நான் ஒரு ப்ராக்டிகலான ஆள். நாளை என் பையனும் என்னை அதே முதியோர் இல்லத்துக்கு அனுப்பலாம் என்று எனக்குத் தெரியும். நான் நல்லவனா, கெட்டவனான்னு நீங்க மெதுவா யோசிச்சு முடிவு பண்ணுங்க. இப்போ நான் பொங்கலுக்கு செலவு குறைக்க ஐடியா பண்ணணும்!                       l

ஸ்ரீ நிவாசன்

ஓவியம்: ஹரன்