தரை லோக்கல் பையன் நான்!



‘தோழா’ கார்த்தி பெருமிதம்

ஒரு பக்கம் நடிகர் சங்க மீட்டிங்ஸ்... மறுபக்கம் ஐதராபாத்தில் ‘தோழா’ ஷூட்டிங்... இரண்டிலுமே சின்ஸியர் ‘பையா’ நம்ம கார்த்தி. ‘‘சங்க பொருளாளர் கார்த்திக்கு வாழ்த்துக்கள்’’ என்றால், வாய் நிறைய சிரிக்கிறார். ‘‘ ‘பொருளாளர்... பொருளாளர்’னு பயமுறுத்தாதீங்க பாஸ். யங்ஸ்டர்ஸ் டீம் ஜெயிச்சு வந்திருக்கிறது ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், இந்த தீபாவளிக்கு என்னோட படம் எதுவும் ரிலீஸ் ஆகாதது வருத்தம்தான்!’’ - ரொம்பவெல்லாம் யோசிக்காமல் மனசில் இருந்து வருகின்றன வார்த்தைகள்.

‘‘நான்  ஜெயிச்சதும், முதல் வாழ்த்தே எங்க டீம்கிட்ட இருந்துதான் வந்தது.  அண்ணனும் ரொம்ப சந்தோஷப்பட்டார். ‘நல்ல ஆடிட்டர் வச்சுக்கோ...  பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல’னு அப்பா சொன்னாங்க. இப்ப பொறுப்பு ஜாஸ்தியாகி இருக்கு. ஆரம்பத்துல கொஞ்சம் டென்ஷன் ஆச்சு. இப்போ  கமல் சார் டிரஸ்டியா வந்திருக்கார். எங்களை வழிநடத்த, ஒரு டவுட் கேட்க,  எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியா அவர் இருப்பார்.   அவரோட சப்போர்ட்  இருக்குனு நினைக்கறப்போ தெம்பா இருக்கு!’’ - கார்த்தியின் பேச்சில் அள்ளுது உற்சாகம்!‘‘எப்படி வந்திருக்கு ‘தோழா’?’’

‘‘பிரமாதமா வந்திருக்கு. ‘கொம்பன்’ மாதிரி லுங்கியும், பனியனுமா திரிஞ்ச எனக்கு, புது லுக் கொடுக்கற ஒரு படம். ரொம்ப நாளா தெலுங்குல ஆஃபர்ஸ் வந்துட்டே இருந்தது. சரியான படத்துக்காக வெயிட்டிங்ல இருந்தேன். ‘தோழா’ கதையைக் கேட்டதும், உடனே பிடிச்சுப் போச்சு.

 ஒரு விபத்தினால கழுத்துக்கு கீழே எதுவும் செயல்படாமல் போகும் மிகப்பெரிய கோடீஸ்வரர் கேரக்டரில் நாகார்ஜுனா சார் நடிக்கிறார். ஒரு கோடீஸ்வரர் தான் எப்படியெல்லாம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழணும்னு  நினைக்கிறாரோ, அப்படி ஒரு வாழ்க்கையை தரை லோக்கல் பையன் சீனு வாழுறான். அந்த லோக்கல் பையனான என்னை அவர் தன் கேர்டேக்கரா வேலையில வச்சிருக்கார். இந்த இரண்டு கேரக்டர்களின் தேடல்தான் கதை. ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்குற படமா இது இருக்கும்.

‘த இன்டச்சபிள்ஸ்’ங்கற ஒரு ஃப்ரெஞ்ச் படத்தோட ரீமேக் இதுனு சொன்னாங்க. தமிழ், தெலுங்கு ரெண்டுலயும் ஒரே டைம்ல ரெடியாகுது. ‘தமிழுக்கு நிறைய விஷயங்கள் மாத்த வேண்டியிருக்குமே’னு நான் கேட்டேன்.

‘ஆமா சார், முப்பது சீன்கள்ல மாத்தியமைச்சிருக்கோம்’னு படத்தோட இயக்குநர் வம்சி பைடில்லி சொன்னார். கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மாறுது. ரொம்பவும் அழகான, ஒரு உணர்வுபூர்வமான கதையா வந்திருக்கு. தெலுங்குல ‘உப்பிரி’னு டைட்டில் வச்சிருக்காங்க. உப்பிரின்னா ‘மூச்சு’னு அர்த்தம்!’’

‘‘என்ன சொல்றார் நாகார்ஜுனா?’’‘‘நாகு சாருக்கு ஐம்பத்தஞ்சு வயசாச்சு. ஆனா, நம்பவே முடியல. இன்னமும் இளமையா, ஃபிட்டா, ஹெல்த்தியா, செம எனர்ஜியா இருக்கார். வொர்க், சாப்பாடு, தூக்கம்னு எல்லாத்தையும் ரசிச்சு பண்றார். நான் பக்கம் பக்கமா டயலாக் பேசினாலும், அவர் கண்கள்லயே எக்ஸ்பிரஷன்ஸ் காட்டி ஈஸியா அப்ளாஸ் அள்ளிடுறார்.

நாகு சாருக்கு இதுல மிகப்பெரிய மில்லியனர் கேரக்டர்ங்கறதால படத்துல ஒவ்வொரு சீனையும் ரொம்ப ரிச்சா ஷூட் பண்ணினாங்க. நான் அவரோட கேர்டேக்கர்ங்கறதுனால எனக்கே அழகழகான காஸ்ட்யூம்ஸ்.

இங்கே கவர்னர் மாளிகை மாதிரி பாரிஸ்ல சிட்டி கவர்னர் மாளிகையில ஷூட்டிங் நடந்தது. ஃப்ரீ பர்மிஷன் கொடுத்தாங்க. பாரிஸ்ல ஒரு காஸ்ட்லி ரெஸ்டாரன்ட்ல ஷூட்டிங் பர்மிஷன் கிடைக்காம கஷ்டப்பட்டோம். வயசான ஒரு அம்மாதான் அந்த ரெஸ்டாரன்ட் ஓனர். வீல் சேர்ல உட்கார்ந்திருந்த நாகு சாரைப் பார்த்ததும் அவங்க உடனே பர்மிஷன் கொடுத்தாங்க. விசாரிச்சிப் பார்த்தா அவங்க பையனும் பக்கவாதத்தால பாதிக்கப்பட்டவர்னு சொன்னாங்க. இப்படி மறக்க முடியாத விஷயங்கள் நிறைய இருக்கு!’’‘‘தமன்னா..?’’

‘‘கோடீஸ்வரர் நாகு சாரோட செகரட்டரி அவங்கதான். இந்தப் படத்துல லவ் சீன்ஸ் கம்மி. ‘பையா’வுக்குப் பிறகு தமன்னாவோட நடிக்கிறேன். அப்போ பார்த்ததுக்கு இப்ப தமன்னா ரொம்ப ஸ்டைலிஷா மாறியிருக்காங்க. ‘பையா’வுக்கு அப்புறம் இப்போ வரை நான் பத்து படங்கள்தான் பண்ணியிருக்கேன். அவங்க முப்பது படங்கள்கிட்ட பண்ணிட்டாங்க. அந்தப் பக்குவம் முகத்தில் தெரியுது!’’‘‘படத்துல என்ன ஸ்பெஷல்?’’

‘‘கேமராமேன் வினோத், ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணினவர். ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் ரிச்சா கொண்டு வந்திருக்கார். பிரகாஷ்ராஜ் சார் அசத்தியிருக்கார். காமெடியும் எமோஷனும் கலந்த வசனங்களை ராஜுமுருகன் எழுதியிருக்கார். நாகு சாருக்காக இந்தப் படத்துல கெஸ்ட் ரோல் பண்ணியிருக்காங்க அனுஷ்கா.

‘பெங்களூர் டேஸ்’ பண்ணின கோபி சுந்தர் இசையில பாடல்கள் பிரமாதமா வந்திருக்கு. சாபுசிரில் சாரோட அசிஸ்டென்ட் சுனில்பாபு, ஆர்ட் டைரக்‌ஷன். தெலுங்கிலும், தமிழிலும் ஒரே டைம்ல ரெடியாகுறதால தமிழ்ல டான்ஸ் ஆடின பிறகு, அதே டான்ஸை மறுபடியும் தெலுங்குக்காக ஆடணும். இப்படி எல்லாமே டபுள் உழைப்பு தேவைப்பட்டிருக்குற படம்!’’

‘‘உங்களோட ‘காஷ்மோரா’ ஏன் தாமதமாகுது?’’‘‘உண்மையைச் சொல்லணும்னா, ‘பாகுபலி’ வந்தபிறகு கொஞ்சம் பயந்து போயிட்டோம். ‘காஷ்மோரா’வில் கிராஃபிக்ஸ் வொர்க் நிறைய. அதுக்காக அமெரிக்க ஆட்கள் வொர்க் பண்ணிக் குடுத்திட்டிருந்தாங்க. ஷூட்டிங் போயிட்டிருந்தப்போ, ‘பாகுபலி’ படம் வந்துச்சு.

நம்ம ஊர் ஆட்களே கிராஃபிக்ஸ்ல இந்தளவு மிரட்டியிருக்காங்களேனு அமெரிக்காவில் இருந்து வொர்க்கை இங்கே மாத்திக்கொடுத்துட்டோம். இப்ப, ‘தோழா’வுக்காக ஒரு மாசம் தொடர்ந்து பாரிஸ்ல ஷூட்டிங். இப்படி நியாயமான காரணங்களாலதான் படம் கொஞ்சம் தாமதம்!’’

- மை.பாரதிராஜா
அட்டை மற்றும் படங்கள்: ரகு