ஆகாயம் கனவு அப்துல் கலாம்



5 இந்திய ராக்கெட்டின் சரித்திரம்

சாந்த சொரூபம்விஞ்ஞானத்தின் செல்லக் குழந்தையாய் 20ம் நூற்றாண்டு ஒரு துள்ளலுடன் பிறந்தது. ராக்கெட் என்ற ஆயுதம் பழங்கதையாகிப் போயிருந்தது. அதனை ஆக்க பூர்வமாய் சுபகாரியங்களுக்குப் பயன்படுத்த யத்தனித்த முதல் குரல் 1903ம் ஆண்டில் எழுந்தது.அவ்வாண்டுதான் கான்ஸ்டாடின் சியோல்கோவ்ஸ்கி என்ற ரஷ்யர், The Exploration of Cosmic Space by Means of Reaction Devices என்ற தன் ஆய்வினை வெளியிட்டார்.

சுமார் இருபது ஆண்டுகள் கழித்து ஹெர்மன் ஓபெர்த் என்ற ஜெர்மானியர் By Rocket into Planetary Space என்ற தன் ஆராய்ச்சியை வெளியிட்டார். மார்ச் 1926ல் திரவ எரிபொருள் கொண்டு இயங்கும் முதல் ராக்கெட், ராபர்ட் கோடார்ட் என்பவரால் பரிசோதிக்கப்பட்டது. இப்படி உலகெங்கிலும் ராக்கெட்டை விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆக்கபூர்வமாய்ப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் அதிகரித்தன.

ஆனாலும் விடாப்பிடியாய் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி ராக்கெட் தொழில்நுட்பத்தை அழிவுக்குப் பயன்படுத்தியது. ஹிட்லரின் ஜெர்மனி தயாரித்த மூன்று ‘V’ ஆயுதங்களுள் (V என்பது பழிதீர்த்தலைக் குறிக்கும் ஜெர்மானியச் சொல்லின் முதலெழுத்து!) ஒன்று V-2 ராக்கெட். அந்த ராக்கெட் தாக்கி இறந்தவர்களை விட அதனை உருவாக்குகின்ற முயற்சியில் இறந்தவர்கள் அதிகம் என்பார்கள். 1944-1945ல் லண்டனில் கோர தாண்டவம் நிகழ்த்தியது V-2. இந்தியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, பிரிட்டிஷாரால் மேம்படுத்தப்பட்ட யுத்த ராக்கெட் இயல், ஜெர்மனியர்களால் முழுமையாக்கப்பட்டது எனலாம்.

1946ல் அமெரிக்கா Sounding Rocket தயாரித்தது. போர்க் காரணம் தவிர்த்த உலகின் முதல் ராக்கெட். விண்வெளி ஆராய்ச்சி என்ற ராக்கெட்டின் சாந்த சொரூப அவதாரம்! ‘சவுண்டிங் ராக்கெட்’ என்பது நோட்டமிடும் ஏவுகணை. செயற்கைக்கோள்கள் உருவாவதற்கு முந்தைய காலகட்டம் அது.

இன்று இதே விஷயத்தைச் செய்ய, குறிப்பிட்ட வான்பொருளை (உதாரணம்: பூமி, நிலா) சுற்றி வந்து ஆராயும் வகையிலான செயற்கைக்கோள் ஏவப்படும். அதை விண்வெளியில் ஏவி நிலைநிறுத்தப் பயன்படும் ராக்கெட்தான் ‘Launch Vehicle’ என்ற ஏவுவாகனம். சவுண்டிங் ராக்கெட்டில் தனியாய் செயற்கைக்கோள் என்று ஏதுமில்லை. ராக்கெட்டிலேயே அளக்க / பதிவு செய்யத் தேவையான கருவிகள் இருக்கும். எரிபொருள் தீரும் வரை பயணித்து முடித்து மீண்டும் பூமியில் விழும்.

உலகம் இவ்வாறு உய்த்திருக்க, இந்தியாவில் இக்காலகட்டத்தே என்ன நடந்தது எனக் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம். நூற்றாண்டின் தொடக்கம் முதலே இங்கும் ராக்கெட் மற்றும் உதிரிப் பாகங்களின் நடமாட்டம் இருந்து வந்தது.

1904ல் நீலகிரியின் அருவங்காட்டில் துவக்கப்பட்ட கார்டைட் தொழிற்சாலையில் பீரங்கி மற்றும் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் புகையற்ற வெடிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டன. 1908ல் நைனிடாலில் (உத்தர்கண்ட்) ரசாயனப் பரிசோதகர் அலுவலகமாக ஆரம்பிக்கப்பட்டது, 1936ல் புனேவுக்கு இடம் மாற்றப்பட்டு ரசாயன ஆய்வாளரகமானது.

இதற்கிடையே 1947ல் இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியது. சோம்பல் முறித்தபடி பிரமாண்டமாய் எழுந்து நின்று உலகத்தை அண்ணாந்து பார்த்தது. அதே ஆண்டு நவம்பரில் பௌதிக ஆராய்ச்சி பரிசோதனைக்கூடம் (Physical Research Laboratory-PSL) அகமதாபாத்தில் விக்ரம் சாராபாய் என்ற இளைஞரால் துவங்கப்பட்டது.

1952ம் ஆண்டு உலகம் ஒரு புதிய வெளிச்சத்துக்குத் தீக்குச்சி உரசியது. சர்வதேச புவிஇயற்பியல் ஆண்டினை (International Geophysical Year - IGY) உலக அளவில் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. ஜூலை 1957 முதல் டிசம்பர் 1958 வரை எனத் தேதி குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட அக்காலம் தேர்ந்தெடுக்கப்படக் காரணம் 11 ஆண்டு சூரிய வினைப்பாட்டுச் சுழற்சி (Solar Activity Cycle) அப்பருவத்தே உச்சம் கொள்ளும் எனக் கணித்திருந்தார்கள்.

நில அதிர்ச்சி, புவிகாந்தவியல், காஸ்மிக் கதிர்கள், அயன மண்டலம், துருவ ஒளி, இரவொளி, பனியாற்றியல், புவி ஈர்ப்பு, காலநிலை இயல், கடலியல் என புவிஇயற்பியல் நிகழ்வுகள் உலகப் பொது. அதனால் எல்லா நாடுகளும் ஒத்துழைத்துப் பங்கேற்கும் ஆராய்ச்சிகள் இவற்றைப் புரிந்து கொள்ள அவசியமானது. அதுதான் புவிஇயற்பியல் ஆண்டுக்கான காரணம்.

67 நாடுகள் இதில் பங்கேற்றன. அதில் இந்தியாவும் ஒன்று. அன்றைய தேதியில் காலனிஆதிக்கம் மென்று துப்பி எறிந்த சவலைப் பிள்ளைகளுள் ஒன்று இந்தியா. அது மெல்ல மெல்ல தன்னை போஷாக்கான குழந்தையாக உருமாற்றி வந்தது.

அப்போது விக்ரம் சாராபாய் முன்மொழிந்த காஸ்மிக் கதிர் மாறுபாடுகள் பற்றிய உலகளாவிய ஆய்வு என்பது IGYயின் திட்டத்தில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்காக CSAGI என்ற கமிட்டி அமைக்கப்பட்டு பூமிப்பரப்பை ஆராயும் வகையில் செயற்கைக்கோள் ஏவ வேண்டும் என அக்டோபர் 1954ல் தீர்மானம் போடப்பட்டது. மூன்றாண்டுகள் முடிவதற்குள்ளாக சோவியத் யூனியன் அதை நிறைவேற்றியது.

4 அக்டோபர் 1957. ரஷ்யா முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1ஐ விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. மனிதனால் உண்டாக்கப்பட்ட பொருள் ஒன்று, பிரபஞ்ச இயற்கைக்கு நிகராய் வானில் நிலைகொள்வது அதுவே முதல் முறை. உலகம் வாய் பிளந்தும், அமெரிக்கா வயிறெரிந்தும் அதைப் பார்த்தது. பனிப்போரின் ஆரம்ப கட்டம் அது. 1-0 என்ற கணக்கில் சோவியத் யூனியன் முன்னிலை பெற்றது.

ஸ்புட்னிக் சாதனையை ஒட்டி ICSU விண்வெளி ஆராய்ச்சிக் கமிட்டி (Committee On Space Research - COSPAR) என்ற அமைப்பை நிறுவியது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும், தகவல் பகிர்வை உறுதி செய்வதும், விஞ்ஞானிகள் ஆய்வுகளை விவாதிக்க ஒரு பொதுத்தளத்தை உண்டாக்குவதும் இதன் நோக்கங்கள்.அப்போது நவீன இந்தியாவை உருவாக்கும் கனவுடன் பல்வேறு திட்டங்களைப் பதியன் போட்டுக் கொண்டிருந்தார் பிரதமரான நேரு.

அவரைப் போன்ற அறிவு விஸ்தீரணமும் ஆற்றலின் உத்வேகமும் கொண்ட ஒரு தேசத் தலைவர் அந்த ஆரம்பக் கட்டத்தில் நமக்கு வாய்த்தது இந்தியா என்ற தேசத்தின் பேரதிர்ஷ்டம். ஸ்புட்னிக் விண்ணில் பாய்ந்த ஓராண்டுக்குள், 1958ல் நம் நாடாளுமன்றத்தில் விஞ்ஞானக் கொள்கை தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

 இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1961ல் அமைதி நோக்குடைய பயன்பாடுகளுக்கான விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுமதி வழங்கியது மத்திய அரசு. அதைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அணு ஆராய்ச்சித் துறைக்கு (Department of Atomic Energy - DAE) வழங்கப்பட்டது. ஹோமி பாபா அப்போது அதன் தலைவராக இருந்தார். அணு ஆய்வுக்கு மட்டுமில்லாமல் விண்வெளி ஆய்வுக்கும் வழிகாட்டியானார் பாபா.

பிப்ரவரி 1962ல், விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் கமிட்டியை (Indian National Committee on Space Research - INCOSPAR) ஹோமி பாபா உருவாக்கினார். அப்போது துடிப்பான இளைஞராக விண்வெளி ஆய்வில் செயலாற்றிக் கொண்டிருந்த விக்ரம் சாராபாயை அதன் தலைவராக நியமித்தார். இரு பெரும் மேதைகள் இணைந்தனர்.

பிற்பாடு ஏற்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தாய்க் கழகம் இந்த INCOSPAR. அதன் முதல் பணிகள், சவுண்டிங் ராக்கெட் ஏவும் ஆய்வு மற்றும் அதை ஏவுவதற்குரிய சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது என்று முடிவாயிற்று.

இளவயதில் மரித்தார்கள் (முறையே 56 மற்றும் 52 வயது) என்பது போக ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் இருவருக்கும் வினோத ஒற்றுமைகள் உண்டு. இருவருமே பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். முறையாய் அறிவியல் பயின்றவர்கள். இருவருமே தேச முன்னேற்றத்துக்காகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

ஹோமி பாபா இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என்றால், விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை. மறைந்தபோது அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப வெகுகாலம் பிடித்தது. முக்கியமாய் அவர்கள் இருவரின் தனித்துவத் தொலைநோக்கு. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை, சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை இந்தியாவில் கொண்டு வரும் கருவியாகவே இருவரும் பார்த்தார்கள்.

நவம்பர் 1962. திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியில் ஒதுங்கி இருந்த ஓர் எளிய மீனவ கிராமத்தில், கடலலைகளையும் தென்னை மரங்களையும் சாட்சியாய் வைத்தபடி ஹோமி பாபாவும் விக்ரம் சாராபாயும் இடத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தார்கள். சில மாதங்களாகவே திருவனந்தபுரம் தொடங்கி ஆலப்புழை வரையுள்ள கடற்கரையோரத்தில் பல்வேறு பகுதிகளை இதுபோல் ஆய்வு செய்து, ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் இடத்தை இறுதி செய்யும் மனநிலையிலிருந்தனர்.

21 ஜனவரி 1963 அன்று நாடாளுமன்றத்தில் டிசி ஷர்மா என்பவர், ‘இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளம் கேரளத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறதா?’ எனப் பிரதமரிடம் கேள்வி எழுப்புகிறார். அப்போது வெளியுறவு இணையமைச்சராக இருந்த லக்ஷ்மி மேனன் பிரதமரின் சார்பில் அக்கேள்விக்குப் பதிலளிக்கிறார். (அவரே கேரளாக்காரர் தான். நேரு மற்றும் சரோஜினி நாயுடுவுக்கு நெருக்கமானவர். பத்ம பூஷண் பெற்றவர்.)

‘‘ஆம். திருவனந்தபுரத்துக்கு வடக்கே சில மைல்கள் தள்ளி இருக்கும் தும்பாவிற்குத் தெற்கே இடம் குறிக்கப்பட்டுள்ளது. சவுண்டிங் ராக்கெட்கள் ஏவுவதாய்த் திட்டம்!’’
அப்போதுதான் இந்தியாவின் சவுண்டிங் ராக்கெட் ஏவும் திட்டம் மற்றும் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டம் குறித்து அதிகாரபூர்வமாக இவ்வுலகிற்கு அறிவிக்கப்
படுகிறது. இந்திய ராக்கெட் இயல் வரைபடத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடித்தது தும்பா!ஹோமி பாபா இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என்றால், விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை.

(சீறிப் பாயும்)

சி.சரவணகார்த்திகேயன்