காரணம்



‘‘ஏங்க, பைத்தியக்காரி மாதிரி சந்திக்கிறவங்க எல்லார்கிட்டயும் பல மாசமா ‘வேலைக்காரி தேவை’னு விளம்பரப்படுத்திக்கிட்டு இருக்கேன். ‘வேற என்ன வேணும்னாலும் கேளு...

அது மட்டும் கொஞ்சம் கஷ்டம்’ங்கறா மாதிரி பேசிட்டுப் போறாங்க. அலுத்துப் போச்சுங்க!’’ - மாதவி, கோவலனிடம் அலுத்துக்கொண்டாள்.ஒரு வாரம் போனது...‘‘என் விளம்பரம் வீண் போகல. நான் நினைச்ச மாதிரியே வேலைக்காரி கிடைச்சுட்டா. கேட்ட சம்பளத்தைவிட அதிகமாவே கொடுக்கறேன்னு சொல்லிட்டேன்.

இவ மட்டும் வேலையை விட்டு நிக்காம பார்த்துக்கணும்!’’ - மாதவி ஏதோ புதையல் கிடைத்தது போல் சந்தோஷப்பட்டாள்.மேலும் ஒரு வாரம் கடந்தது. மாதவியின் பேச்சு மாறியிருந்தது.

‘‘ஒரு மாச சம்பளத்தைக் கொடுத்து அந்தப் பெண்ணை வேலையை விட்டு அனுப்பிடலாம்னு இருக்கேன்!’’‘‘ரொம்பக் கஷ்டப்பட்டு தேடிப் பிடிச்சவளை வேணாம்னு சொல்றே... என்ன காரணம்?’’ - கோவலன் கேட்டான்.

‘‘வேலையில் சேரும்போது, அவ பேரு கீதானு சொன்னா. ஆனா, வீட்ல அவளை செல்லமா ‘மாதவி’னு கூப்பிடுவாங்கனு இன்னைக்கு வெக்கப்பட்டுக்கிட்டே சொல்றா. நீங்க என்னை பெயர் சொல்லி கூப்பிடும்போதெல்லாம், அவளுக்கு எப்படியிருக்குமோ... எனக்கு ஒரு மாதிரியா இருக்கும். அதான் வேண்டாம்னு சொல்றேன்!’’மனைவியின் தொலைநோக்குப் பார்வை கோவலனை ஆச்சரியப்படுத்தியது.    

எஸ்.ராமன்