ஐந்தும் மூன்றும் ஒன்பது



‘‘ஜோசப் நாயைக் கும்பிட்டதைக் கண்டு எனக்கு எப்படி வியப்பு ஏற்படாமல் இருக்க முடியும்? அதன் எதிரொலியாக சிரித்தேன். ஆனால் ஜோசப் என் சிரிப்பை பொருட்படுத்தவில்லை. நாயை ஒரு மனிதன் போலக் கருதி, அதனுடன் பேசத் தொடங்கி விட்டார்.‘கறுப்பா! நீ வந்ததுல சந்தோஷம்... எனக்கு சித்த தரிசனம் கிடைக்கணும். ரொம்ப நம்பிக்கையோட வந்துருக்ேகன். வழி காட்டுப்பா...’ என்றார். அதுவும் இளைப்பெடுக்க அவரைப் பார்த்து விட்டு, முன்னால் ஓடத் தொடங்கியது.

‘நாய்க்கு புத்தி உண்டு, அது மனிதன் சொல்வதைக் கேட்கும்’ என்பது நமக்குத் தெரியும். இங்கேயும் அப்படித்தான் நடப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனாலும் என்னுள் பலப் பல சந்தேகங்கள்.‘என்ன சார்... இந்த நாயை உங்களுக்கு முன்பே தெரியுமா?’ என்று கேட்டேன். ‘நான் இந்த மலைக்கே இப்போதுதான் முதல்முறையாக வந்திருக்கிறேன். அப்படி இருக்க, எப்படி கணபதி எனக்கு இந்த நாயைத் தெரிந்திருக்க முடியும்?’ என்று திருப்பிக் கேட்டார்.

அப்படியே, ‘நீங்கள் இப்படிக் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும்’ என்றவர், அதன் பின் நான் கேட்காமலே எனக்கு விளக்கமளிக்கத் தொடங்கினார். அது ஒரு நீண்ட விளக்கம்!‘கணபதி! இந்த சதுரகிரி மலை பூகோள ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி வருகிறது. நான் முன்பே மலைகள் பற்றியும், அவற்றின் சக்தி பற்றியும் கூறியிருக்கிறேன். தட்டையான நிலப்பரப்பின் தன்மைக்கும் சரிவான நிலப்பரப்பின் தன்மைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மலைகளிடம் பஞ்ச பூத சக்தி மிக அதிகம். அதனால்தான் ஞானிகள் மலைகளைத் தங்கள் புகலிடமாக ஆக்கிக் கொண்டனர்.

தட்டையான நிலப்பரப்பில் வாழும் வாழ்க்கை வேறு... சரிவான நிலப்பரப்பில் வாழும் வாழ்க்கை வேறு..! சரிவான நிலப்பரப்பில் ஒரு பெரிய சமூக வாழ்வு வாழ முடியாது. வாழ முயன்றால் அந்த சரிந்த நிலம் தட்டையாகி விடும். ஊட்டியும் கொடைக்கானலும் அதற்குப் பெரிய சாட்சி.

இங்கே சதுரகிரி மலை, பஞ்சபூத சக்திகளை அபரிமிதமாகத் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகத்திலேயே - நன்றாகக் ேகட்டுக் கொள்ளுங்கள் - உலகத்திலேயே நெல்லை சீமை போல ஒரு பகுதியோ, தமிழன் கண்டறிந்த ஐவகை நிலங்களும் ஒருங்கே கொண்ட ஒரு பகுதியோ எங்கும் இல்லை. அந்த ஐவகையில் ஒரு வகைதான் இந்த மலைப்பகுதி.

நதி, அருவி, குளம், கடல், ஓடை என்று நீருக்கும் இங்கே ஐந்து தன்மை உண்டு. ‘ஓடுதல், பாய்தல், தேங்குதல், பெருகிக்கிடத்தல், சிறுத்துக்கிடத்தல்’ என்பவையே அந்த ஐவகைத் தன்மை. இந்த தன்மைகளுக்குப் பின்னே தனித்த ஒரு சக்தியும் உண்டு. இந்த ஐந்து வகை தன்மை கொண்ட நீரும் இந்த சதுரகிரியில் உள்ளது. ஒரு வட்டத்துக்கு ஆரம்பமும் கிடையாது; முடிவும் கிடையாது. அது திசையற்றது.

ஆனால் அதுவே சதுரம் என்றாகும்போது நான்கு நேர் திசைகளும் நான்கு குறுக்கு திசைகளும் வந்து, ஒரு அடையாளம் உருவாகி விடுகிறது. திசைகளுக்கென்று பிரத்யேக சக்தி உண்டு. உதிக்கும் திசை கிழக்கு, அஸ்தமிக்கும் திசை மேற்கு, அளிக்கும் திசை வடக்கு, அழிக்கும் திசை தெற்கு என்று அந்த சக்திகள் திசைக்கேற்ப உள்ளன.

இந்த நான்கு வகை சக்திகளும் சதுரகிரியில் மலைகளாகவே காணப்படுகின்றன. நான்கு மலைப்பகுதிகளுக்கு நடுவில் ஒரு சந்திப்புப் புள்ளி உண்டு. அது சமதளமாக இருந்தாலும், நான்கு மலைகளின் சக்தியையும் ஒன்றாகப் பெற்று, ஒரு கலவையாகி, ஒரு பிரத்யேக சக்தியை அது எதிரொலிக்கிறது.

சமூக வாழ்வை புறம் தள்ளி, மானுட வாழ்வை அழியாத வெற்றிக்குரியதாக ஆக்கிக்கொள்ளும் மீண்டும் பிறவாமைக்கு எது தேவையோ, அது அந்த சக்தி! ஒரு சக்தி இருப்பது கூட பெரிதல்ல. அதைப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். மின்சாரம் போன்றதே சக்தி. அதைக் கொண்டு விளக்கெரித்தல், மோட்டார்களை இயக்குதல் என்று பயன்படுத்திக் கொள்வதைப் போல் பயன்படுத்திக் கொள்வதில்தான் வெற்றி உள்ளது.

அதை இங்கே சாதித்துக் காட்டும் மனிதனே ‘சித்தன்’ எனப்படுகிறான். அந்த சித்தன் இந்த இயற்கை சக்தியைப் பாதுகாக்கவும் விரும்புகிறான். தோட்டத்தைப் பாதுகாத்திட ஒரு வேலியைப் போடுவது போல இங்கே பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்படி அந்த சித்தன் செய்த பாதுகாப்பில் முக்கியமானது, இந்த கறுப்பன் எனப்படும் நாய்..!’

- நடந்தபடியே ேஜாசப் சந்திரன் சொன்ன விஷயங்கள் என்னைத் திரும்பவும் பிரமிப்பில் ஆழ்த்தின. நடந்து கொண்டே பேசிக் கொண்டதில் இவ்வளவு விஷயங்களா? இங்கே வருமுன் இந்த சதுரகிரி பற்றி ஒரு பெரிய தேடலை நிகழ்த்தி இதைப்பற்றித் தெரிந்துகொண்டே அவர் வந்துள்ளதை நான் புரிந்து கொண்டேன்.’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

சாவி குறித்த கேள்வியோடு மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, வள்ளுவர் திரும்பவும் பாடலைப் பார்த்தார். அப்போது ஒருவர் கோயிலுக்கு வந்தார்! அவர் கையில் ஒரு கூடை... துணி போட்டு மூடப்பட்டிருந்த அந்தக் கூடையோடு நெருங்கவும்தான், அவர் கோயில் குருக்கள் என்பது தெரிந்தது. அவரும் இந்த மூவரையும் வியப்போடு பார்த்தார்.

‘‘நீங்கள்லாம் ஊருக்கு புதுசா தெரியறதே..?’’ என்று கேட்கவும் செய்தார்.‘‘ஆமாம்... நீங்கதான் இந்த கோயில் குருக்களா?’’‘‘ஆமாம்... இன்னிக்கு காலைல இருந்து பூஜையே பண்ணலை. ஊர் முழுக்க எழவா இருக்கும்போது சுவாமிக்கு எப்படி பூஜை பண்றது? இருந்தாலும் ஒரு காலமாவது பண்ணுவோமேன்னுதான் வந்தேன்!’’
‘‘நாங்க சென்னைல இருந்து வர்றோம். பிள்ளையாரை கும்பிடத்தான் வந்தோம். வந்த இடத்துல ஊரே வியாதியில இருக்கறத பார்க்க முடிஞ்சது. இதை நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை!’’

‘‘நாங்களும்தான்... இந்தக் கோயிலுக்கு தினசரி வந்து இந்த மந்திரத்தைச் சொல்லி எல்லாரும் வணங்கி வந்த வரைக்கும் ஒரு பிரச்னையும் இல்லை. எப்ப அதெல்லாம் கெட்டுப் போனதோ அப்பவே ஊருக்கும் சோதனைக் காலம் வந்துடுத்து...’’‘‘நீங்க என்ன சொல்றீங்க... அப்படி என்ன இந்த மந்திரத்துல இருக்கு?’’‘‘பாலா சித்தர்ங்கறவர் கட்டின கோயில் இது! காலாலங்கிரின்னு ஒரு மலை சதுரகிரி மலைக் கூட்டத்துகிட்ட இருக்கு. அந்த மலைல இருக்கற கல்லை எடுத்து செய்த பிள்ளையார்தான் இந்தப் பிள்ளையார்! இந்தப் பிள்ளையாரைச் செய்ய கல் எடுத்ததுல இருந்து, செதுக்கத் தொடங்கி இங்க கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த வரை ஒரு கணக்கு இருக்கு!

முகூர்த்த நேரத்துல ‘அபிஜித் முகூர்த்தம்’னு ஒண்ணு இருக்கு. அந்த முகூர்த்த காலமா பார்த்துப் பார்த்து செதுக்கின பிள்ளையார் இவர். அபிஜித் முகூர்த்த காலம்கறது வெற்றிகரமான ஒரு காலம். அதேபோல இந்தப் பிள்ளையாரை வணங்கிட்டு எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் வெற்றியும் நிச்சயம். அதனால நாடி ஜோசியத்துல இந்தப் பிள்ளையார் பற்றி நிறையவே குறிப்பு வரும். இங்க வந்து இவருக்கு வேண்டிண்டு, இந்தக் கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டுண்டு பிரார்த்தனை செய்துக்கறவாளுக்கு அவா பிரார்த்தனை நிறைவேறியிருக்கு.

சொன்னா நம்ப மாட்டேள்... மத்தியப் பிரதேசத்துல ஒரு மந்திரி. அவர் நன்னா தமிழ் பேசுவார். அப்படிப்பட்டவர் இங்க வந்து இந்த மந்திரம் சொல்லி பிரார்த்தனை பண்ணிட்டு போனார். தோத்துப் போய் காணாம போக வேண்டியவர், எப்படியோ ஜெயிச்சு திரும்ப மந்திரியாகிட்டார்னா பார்த்துக்குங்களேன்.’’

குருக்கள் பேசப் பேச... வர்ஷனும் ப்ரியாவும் கோயில் தொடர்பு வடநாடு வரை நீண்டிருப்பதை கணக்காக மனதில் குறித்துக் கொண்டனர்.‘‘ஆமா... இந்தப் பிள்ளையார் சிலைக்காக எதுக்கு காலாலங்கிரி மலைக்குப் போகணும்? பக்கத்துல இருக்கற நம்ம மகாபலிபுரம் போனா, அங்க எந்த சைஸ்ல வேணும்னாலும் கிடைக்குமே?’’

‘‘அப்படியில்லை! காலாலங்கிரிக்கு ஒரு சிறப்பு இருக்கு. கிரகங்கள்ல புதன்ங்கற கிரகத்தோட ஆகர்ஷணத்தைக் கொண்டிருக்கற மலை அது. இது ரொம்ப பேருக்குத் தெரியாது. புதன்னா மதுரையையும் திருவெண்காட்டையும் தவிர வேற எதுவுமே யாருக்கும் ஞாபகம் வராது.

அடுத்து, அந்த மலையிலதான் அகத்தியர்ல இருந்து தொல்காப்பியர் வரை சித்த புருஷர்கள் தங்கியிருந்து தியானமும் தவமும் செய்திருக்காங்க. அந்த மலையே கல்விக்கும் கணக்குக்கும் உரியது. அதனால புதாதிபத்யமுள்ள நேரத்துல அபிஜித் முகூர்த்தத்துல கல் எடுத்து, தொடர்ந்து முகூர்த்த நேரத்துல செதுக்கி, அதையும் ஒரு கணக்குக்கு உட்படுத்தி செதுக்கித்தான் இந்தப் பிள்ளையார் உருவாக்கப்பட்டார்.

நம் கையால அளந்து பார்த்தா, நாம் அவ்வளவு பேரும் எட்டு சாண் இருக்கறதும் ஒரு திட்டமிட்ட கணக்குதான். அதே போல இந்தப் பிள்ளையாரும், அவர் கையளவுல சரியா எட்டு சாண்தான் இருப்பார். இந்தப் பிள்ளையாரை இங்க பாலா சித்தர் பிரதிஷ்டை பண்ணக் காரணம் உண்டு. இந்தப் பகுதி மக்கள் கல்வியறிவில்லாம ரொம்பவே பின்தங்கியிருந்தாங்க.

அவர்கள் முன்னுக்கு வரவும் மிக அதிக காலம் தேவைப்பட்டது. தான் வாழும் காலத்தில் எல்லாருக்கும் கல்வி ஞானம் சித்திக்க அவர்தான் இந்தப் பிள்ளையாரை இங்க பிரதிஷ்டை செய்து, இந்த மந்திரத் துதியையும் எழுதி வெச்சார். இதைச் சொல்லி வழிபட்டா நல்ல சிந்தனை, ஞாபக சக்தி எல்லாம் ஏற்படும். இதை குரு வணக்கப் பாட்டாகவும், இறை வணக்கப் பாட்டாகவும், ‘ஒன்றுடைத்த ஈறு’ எனப்படுகிற வகையில் - அதாவது ஒன்றுக்குள் இரண்டாக உள்ள பாட்டாகவும் - அவர் பாடி வெச்சார்.’’

குருக்கள் பிள்ளையார் மீது காய்ந்து கிடந்த பூமாலைகளை அகற்றி, தான் கூடையோடு கொண்டு வந்திருந்த பூக்களை எடுத்துப் போட்டு, விளக்கேற்றி, ஊதுவத்தி கொளுத்தி வைத்து என்று செயல்பட்டபடியே இவர்களிடம் நீளமாகப் பேசினார்.வர்ஷனுக்குள் அவ்வேளை ஒரு சந்தேகம் எழுந்தது. ‘‘குருக்களே! புதன் கிரகத்தோட ஆதிக்கம் காலாலங்கிரி மேல இருக்குன்னு எப்படித் தெரிய வந்தது?’’

குருக்கள் திரும்பிப் பார்த்தார். பின், ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது அம்பி. பழனி மலை கூட செவ்வாயோட ஆதிக்கம் கொண்டதுன்னு சொல்றா! இதெல்லாம் ரிஷிகள், சித்த புருஷாள் சம்மந்தப்பட்ட விஷயம்...’’‘‘புதன் ஆதிக்கம் இருந்தா கல்வி, கணக்கு சித்திக்கும்னு எதை வெச்சு சொன்னாங்க...’’ - அடுத்தும் கேட்டான் வர்ஷன்.

‘‘புதன் சிறப்பா இருந்தாதான் ஒருத்தன் நல்லபடியா படிக்க முடியும். பெரும்பாலும் கணக்கு போடற ஆடிட்டர்கள் எல்லாரும் புதானுக்ரகம் உள்ளவாதான்! அந்த கிரகத்தோட சக்தி நம்ப உடம்புல, மூளைல, அப்படித்தான் செயல்படறது. இதை சாதாரணமா ஜோசியக்காராளே சொல்லிடுவாளே...’’ என்றார் குருக்கள்.வர்ஷன் வள்ளுவரைப் பார்க்க, வள்ளுவரோ அந்த மந்திரப் பாடலைத் திரும்பப் பார்த்தார்.

‘‘இந்தப் பாடல்... இதிலுள்ள சொற்கள் எல்லாமே ரொம்ப சுலபமா புரியுது. ஒரு கவிதை எழுத முயற்சி செய்யற நபர் எழுதினது மாதிரி இருக்கு. கூடவே இதுல ஒரு புதிர் இருக்கு. ‘கணிப்பூட்டு இப்பாட்டு - சாவிலிருந்தே காப்பாற்றுமே’ன்னா என்ன பொருள்..? யாரை இது சாவுல இருந்து காப்பாற்றும்?’’ - ப்ரியாவும் கேட்கத் தொடங்கினாள்.

‘‘நாங்களும் இதைப் பத்தி யோசிச்சதுண்டு. கணிப்பூட்டு எதுன்னு தெரிஞ்சாதானே மற்ற விஷயங்களை நாம புரிஞ்சுக்க முடியும்?’’ - என்ற குருக்கள், ‘‘நீங்க எதுக்காக இந்தப் பாட்டு பத்தி யோசிச்சு இவ்வளவு மெனக்கெடணும்? சுவாமி தரிசனம் பண்ணிட்டு வேகமா புறப்படப் பாருங்கோ. அப்புறம் எங்க ஊரையே பாடாபடுத்தற அந்தக் கிருமி உங்களையும் ஏதாவது பண்ணிடப் போறது’’ என்றார்.வள்ளுவர் மட்டும் எதுவும் பேசாமல், வர்ஷனிடம் அந்தப் பாடலை போட்டோ எடுத்துக்கொள்ளச் சொன்னார். பின்னர், ‘‘எனக்கு எது தெரியணுமோ, அது தெரிஞ்சுடுச்சி தம்பி! நாம புறப்படுவோம்...’’ என்றார்.
‘‘உங்களுக்குத் தெரிஞ்சுடுச்சா..?’’

‘‘உம்...’’
‘‘என்ன... என்ன தெரிஞ்சது?’’
‘‘கார்ல போகும்போது பேசலாமே...’’

‘‘தாராளமா... அதே சமயம் இங்க இருந்து எங்க போகப் போறோம்ங்கறதும் ரொம்ப முக்கியமாச்சேய்யா!’’‘‘நாம இப்ப சதுரகிரி நோக்கிப் போவோம். இங்கு இருந்து மதுரை. அப்புறம் அங்க இருந்து தெற்கு நோக்கி குற்றாலம் போற ரூட்ல போகணும். பூட்டு, சாவின்னு இரண்டு வார்த்தைகளுக்குள்ளதான் பொருள் இருக்கு. கைல இருக்கற ஏட்டை எடுத்துப் பார்த்தா நிச்சயம் இதுக்கு அர்த்தம் தெரிஞ்சிடும்...’’

- சொல்லிக்கொண்டே  நடந்த வள்ளுவரை குருக்கள் அதிர்ச்சியோடு பார்க்க ஆரம்பித்தார். அதே வேகத்தில் ‘‘அய்யா... இருங்க! நீங்கதான் வள்ளுவரா?’’ என்றும் கேட்டார். வள்ளுவரிடம் ஆச்சரியம். ஆமோதித்தபடி தலையசைத்தார்.‘‘என் தாத்தா சொன்னது ரொம்ப சரி... நீங்க கொஞ்சம் என் வீட்டுக்கு வர முடியுமா?’’

‘‘எதுக்கு?’’‘‘உங்களப் போல ஒருத்தர் வருவார். வந்தா அவரைக் கூட்டிண்டு வா. அவர்கிட்ட நான் ஒரு பொருளை ஒப்படைக்கணும்னு என் தாத்தா சொன்னார்!’’
‘‘சரி, நான் வள்ளுவர்னு எதை வெச்சு தெரிஞ்சது?’’

‘‘மணிக்கட்டுக்கு மேலே பச்சை குத்தியிருக்கே! உங்க இனத்துல இந்த பச்சைய குழந்தையா இருக்கும்போது கோயில்ல வெச்சு குத்துவீங்கதானே?’’
- குருக்கள் கேட்க அப்போதுதான் வர்ஷனும் அவர் மணிக்கட்டுப் பகுதியைப் பார்த்தான். கோணல் மாணலாக அந்த பச்சை குத்தப்பட்ட எழுத்துக்கள் கண்ணில் பட்டன.‘‘அது மட்டுமில்ல... வந்ததுல இருந்து மந்திரப்பாட்டு மேலயே குறியா இருந்தீங்களா, அதுவும் என்னை யோசிக்க வெச்சது!’’
‘‘சரி, உங்க வீடு எங்க இருக்கு?’’

‘‘பக்கத்துலதான். கொஞ்சம் இருங்க... அஞ்சு நிமிஷத்துலே பூஜையை முடிச்சிடறேன்!’’‘‘நிதானமாவே பண்ணுங்க...’’ என்ற வள்ளுவர் நம்பிக்கையோடு வர்ஷன், ப்ரியாவைப் பார்க்க... அவர்களிடம் அடுத்த கட்ட ஆர்வம்!
அதே சமயம் வெளியே சூரியனும் மேற்கில் மறைந்துவிட்ட நிலையில் இருள் சூழத் தொடங்கியது.காலாலங்கிரி மலை உச்சி!

ஈங்கோய் பாறை மேல் அமர்ந்திருந்த நிலையில் சூரியன் அஸ்தமிக்கவும், அவன் இறங்கி தீப்பந்தம் கொளுத்தத் தொடங்கினான். நாயும் அருகில் படுத்திருக்க எழுந்தது. குளிர் காற்றும் முகத்தில் அறைந்தது. நந்தி அடிகள் சொன்ன காலகட்டத்தில் பாதிக்குமேல் கழிந்து விட்டது. ‘இந்த இரவு வேளையில்  இனி யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை. பொழுது புலர்ந்த பிறகுதான் இனி கண்காணிப்பைத் ெதாடர வேண்டும்’ என்று ஈங்கோய் நினைக்க, அருகில் ஒரு புதரில் பெரும் சலசலப்பு!

தலைவரே! மேடைல அடிக்கடி குட்டிக்கதை சொல்லாதீங்கன்னு சொன்னேனே... கேட்டீங்களா?’’‘‘என்னாச்சுய்யா..?’’‘‘கோயில்ல கதாகாலாட்சேபம் பண்ண வரமுடியுமான்னு கேட்டு வந்திருக்காங்க!

எனதருமை தொகுதி மக்களாகிய உங்களுக்காக சட்டசபையில் தினமும் ஒலிக்கும் முதல் குரல் என்னுடைய குரல்தான் என்பதை இம்மேடையில் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்...’’‘‘தலைவர் குறட்டையைச் சொல்றாருன்னு நெனைக்கிறேன்! ‘‘அந்த போலீஸ்காரர் நைட் டியூட்டில தூங்கிட்டு இருந்தாலும், லாரி வரும்போது மட்டும் தூக்கத்திலேயே நடந்து போயி மடக்கி மாமூல் வாங்கிடுவாரு...’’‘‘அப்ப அவருக்கு ‘தூக்கத்திலே மடக்குற வியாதி’ இருக்குன்னு சொல்லு!’’

- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

- தொடரும்...

மர்மத் தொடர் 46

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்