கைம்மண் அளவு



வி.ஐ.பி. என்றொரு சொல்லுண்டு புழக்கத்தில். நான் உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனத்தைச் சொல்லவில்லை. Very Important Person என்பதன் சுருக்கமான VIP பற்றிப் பேச முனைகிறேன்.

 Important Person என்று மட்டுமே அல்ல, Very Important Person என்பது. அதாவது, மிக முக்கியமான மனிதர்; அல்லது அதி முக்கியமான மனிதர். அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். மாணவர் சமூகம், சற்று கேலியாக VIP என்பதற்கு ‘Very Indecent Person’ என்று பொருள் கொள்கிறார்கள். அவர்கள் அங்கதத்தில் உண்மை இல்லை என்று ஒதுக்கிவிட இயலுமா?

சாலையில் பேருந்து நிறுத்தங்களில் காத்துக் கிடக்கும்போது, கூரையில் சுழலும் சிவப்புக் குமிழ் விளக்குடன் சொகுசு வாகனங்கள் பேய் வேகத்தில் விரைந்து செல்லும். வாகனத்தினுள் இருப்பவர் அதிமுக்கிய மனிதராக இருக்கலாம், மாணவர் கேலி செய்யும் அதி ஆபாச மனிதராகவும் இருக்கலாம். வி.ஐ.பி. வீட்டு வளர்ப்பு நாயாகக் கூட இருக்கலாம். வீட்டுச் சமையலுக்குக் காய்கறி வாங்கிப் போகும் வேலையாளாக இருக்கலாம். அல்லது மதிய உணவுக்குக் கொல்லப்படப் போகும் கோழியாகவே கூட இருக்கலாம்.

பார்த்து, வாய் பிளந்து நிற்பதல்லால் சாமான்யன் வேறென்ன செய்ய இயலும்? வி.ஐ.பி. என்பவரின் இலக்கணங்கள் என்ன என்பது தனித்ததோர் கேள்வி. ஆனால், அவர் அந்த வாகனத்தினுள் இல்லாதபோதும் சுழலும் செவ்வொளியில் மக்களைக் கலவரப்படுத்தி விரையும் வாகனங்கள். நாமோ, சிப்பாயைக் கண்டு அஞ்சியவர் பரம்பரை. காவல்துறை கான்ஸ்டபிள் ஆனாலும், ஜவுளிக்கடை வாட்ச்மேன் ஆனாலும், அவர்கள் நமக்கு அஞ்சத் தகுந்தவர். ஏனெனில் நாம் ஒரு பிழையும் செய்திராத, செய்ய மனம் வராத, சாமான்யர்கள். எனினும் நாம் கலவரப்படுகிற இனம். அதிகாரம் எந்த வடிவில் வந்தாலும் அடிபணிகிற, ஆவலாதி சொல்கிற, கால்வழி மூத்திரம் பெய்கிற இனம்.

சத்தியமங்கலத்திலிருந்து நடுப்பகல் தாண்டி, பேருந்தில் கோவை திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்தில் வழக்கத்துக்கு மாறாக, காமம் செப்பாத கனிவான பழம் பாடல்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. பின்னாலிருந்து ‘ப்பீய்ங்... ப்பீய்ங்...’ என்று ஆம்புலன்ஸ் சைரன். வழி விட்டு இடம் கொடுக்க வசதியில்லை ஓட்டுனருக்கு. செறிவான போக்குவரத்து நெரிசல். காதை அறுக்கும் ‘ப்பீய்ங்... ப்பீய்ங்...’ துன்புறுத்திக் கொண்டு வந்தது, ஆம்புலன்ஸ் ஊர்தி. தாங்க முடியாமல் ஓட்டுனர் வண்டியை ஒதுக்கி நிறுத்தி, ‘‘போ... சைத்தானே’’ என்றார். முன்னால் பாய்ந்து போயிற்று ஆம்புலன்ஸ். சைரன் தூரத்தில் கேட்டு மறைந்தது.

பாவம், எவர் கிடந்தாரோ உள்ளே... இதய வலியால் மூச்சுத் திணறிக்கொண்டு, பக்க வாதத்தில் வலித்துக்கொண்டு, விபத்தால் கால், கை சதை இழந்து! எனது வெளிநாட்டுப் பயணங்களில் கவனித்திருக்கிறேன். பின்னால் ஆம்புலன்ஸ் சைரன் கேட்டால், முன்னால் விரையும் வாகனங்கள் ஓரம் கட்டி நிறுத்தி வழி விடுவார்கள். இங்கு அத்தனைக்கு சாலை வசதிகள் இல்லை. மேலும் இங்கு அனைவருக்கும் எல்லாவற்றுக்கும் அவசரம்.

நாங்கள் முன்பிருந்த குடியிருப்பின் தெற்கு நுழைவாயிலில் இருந்து வடக்கு நுழைவாயில் வரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். திருச்சி சாலையிலிருந்து அவிநாசி சாலைக்கு அதில் குறுக்கே பாய்வார்கள். குடியிருப்பு என்பதால் முதியவர் நடப்பார். குழந்தைகள் ஓடும். மாணவர் கடப்பார். ஆடு, மாடுகள் திரியும். கூவியர் தலையில் விற்பனைக்குப் பொருள் சுமந்து கடப்பார்.

அறுபதுக்கும் குறையாத கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் பறக்கும். இரண்டு கிலோ மீட்டர் கடக்க அந்த வேகத்தில் இரண்டு நிமிடங்கள் எடுக்கும். முப்பது கி.மீ வேகத்தில் போனால் நான்கு நிமிடங்கள் ஆகலாம். வாகனம் ஓட்டுபவருக்கு மிச்சமாகும் இரண்டு நிமிடங்கள் மிக முக்கியமானதாக இருக்கலாம். ‘அரண்மனைக்கு ஆயிரம் கிடா செல்லும். குடியான் தண்டம் இறுப்பானா?’ அப்படி மிச்சமாகும் இரண்டு நிமிடங்களை அவர்கள் என்ன செய்வார்கள்? மூன்றாம் உலகப் போரைத் தடுத்து நிறுத்தப் பயன்படுத்துவார்களா?

நான் பயணம் செய்த சத்தியமங்கலம் - கோயம்புத்தூர் பேருந்து, தனது நியாயமான வேகத்தில் தூரம் கடந்து, அன்னூர் நெருங்கிக் கொண்டிருந்தது. வழியில் வலக்கை பக்கத்திலிருந்த பரோட்டாக் கடை வாசலில் எல்லா வாகனங்களையும் ‘ப்பீய்ங்’ ஒலியால் துரத்தித் துரத்தித் தோற்கடித்த அந்த ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. ‘‘அதே வாகனம்தான் என எப்படித் தெரியும்?’’ என்று கேட்பீர்கள்! சின்ன வயதிலிருந்தே துப்பறியும் கதைகள் வாசித்து, சிலசமயம் இதுபோன்ற வாகனங்களின் பதிவு எண்கள் மனதில் பதிந்துவிடும்.

ஆம்புலன்சைக் கடக்கும்போது உற்றுப் பார்த்தேன். வெற்று வண்டி! இப்படித்தான் வி.ஐ.பி. வாகனங்களும் பெரும்பாலும். வாகனத்தில் வி.ஐ.பி. என்று சொல்லப்படுகிறவர் உட்கார்ந்திருந்தால் என்ன, பசு மாட்டுக்குப் புல்லுக்கட்டு திணிக்கப்பட்டிருந்தால் என்ன? அவை வி.ஐ.பி. வாகனங்கள்!

சரி, இந்த வி.ஐ.பி. என்பவர் யார்? தலையில் இரண்டு கொம்புகள் முளைத்தவரா? தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல்கிறவரா? தேசத்துக்கு, மக்களுக்கு மிக மிக இன்றியமையாதவரா? வாராது போல் வந்த மாமணியா? ஊனும் உயிரும் உருக நாட்டுப்பணியில் வாழ்நாள் ெதாலைத்தவரா?

அஃதோர் அதிகார த்தின் அடையாளம். வேண்டுமானால் அவரது குடும்பத்துக்கும் தொண்டர் அடிப்பொடிகளுக்கும் அவர் வி.ஐ.பி.யாக இருக்கலாம். உமக்கும் எமக்கும் என்ன ஐயா? எந்த சட்டமன்ற உறுப்பு, நாடாளுமன்ற உறுப்பு, மேயர், அமைச்சரவை அங்கம் அல்லது உயரதிகாரிகள் எமக்கு இன்று வி.ஐ.பி.?

 தீயணைப்புப் படை வண்டி போகும் வேகத்தில் இவர் பறந்து போய் நாட்டு மக்களுக்குச் செய்யும் சேவை என்ன? இந்த நாட்டில் ஒரு வழக்குக்கு இறுதித் தீர்ப்பு வர எடுத்துக்கொள்ளும் காலம் இருபத்தைந்து ஆண்டுகள், சாமான்யனுக்கு. இரண்டு நிமிடங்கள் மிச்சம் பிடித்து இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஒருவேளை வி.ஐ.பி. என்பதால் சாலையோரக் கடைகளைத் தவிர்த்துவிட்டு நட்சத்திர விடுதிகளில் காசு கொடுக்காமல் பரோட்டா தின்பார்களாக இருக்கும்!

தேசத்துக்கும் மக்களுக்கும் தன்னலமற்ற தொண்டு செய்கிறவர்தானே மக்களின் வி.ஐ.பி.யாக இருக்க இயலும்? சொந்தக் குடும்பத்துக்குப் புன்செல்வம் சேர்ப்போர், அரசியல் எனும் தொழில் முனைவோர், அடித்துப் பறிப்போர், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி மக்களின் வி.ஐ.பி. ஆவார்கள்?

அயோத்தியா காண்டத்தில் மந்திரப் படலத்தில் அமைச்சர்களின் தன்மை பற்றிப் பாடுகிறார் கம்பர். அவருக்கு வி.ஐ.பி. எனும் சொல் தெரியாது.
‘தம் உயிர்க்கு இறுதி எண்ணார்,
தலைமகன் வெகுண்ட போதும்,
வெம்மையைத் தாங்கி, நீதி
விடாது நின்று உரைக்கும் வீரர்’

என்று. ‘அரசன் சீற்றம் கொண்ட காலத்தும், ஒன்றைச் சொன்னால் தமது உயிருக்கே வினை வந்து சேரும் என்று கூட அஞ்சாமல், அரசனது சீற்றத்தின் கொடுமையை ஏற்றுக்கொண்டு, விடாமல் நின்று நீதியை உரைக்கும் வீரர்கள் அமைச்சர்கள்’ என்று பொருள். இன்றைய அமைச்சருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு வேட்டி இடுப்பில் நிற்க மாட்டேன் என்கிறது.

கொடுங்கோல் அதிகாரத்துக் குறள் பேசுகிறது, ‘வேலொடு நின்றான் இடு என்றது போலும் கோலொடு நின்றான் இரவு’ என்று. ‘கூர்வேல் கைக்கொண்டு கொள்ளைக்கு வருபவனைப் போன்றவன் ஆட்சியைப் பயன்படுத்தி மக்களிடம் பொருள் பறிக்கும் அரசன்’ என்று உரை எழுதுகிறார் பேராசிரியர், முனைவர், கவிஞர் சிற்பி. இவர்கள் எல்லாம் இன்று நமக்கு வி.ஐ.பி.

மதுரையைத் தீக்கு உணவாக்குகிறாள் கண்ணகி. மதுரைக்காண்டம், வஞ்சின மாலையில் ‘எவரைத் தீ அணுக வேண்டாம்’ என்று கண்ணகி வாக்காக இளங்கோ அடிகள் பேசுகிறார். ‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தார், குழவி எனும் இவரைக் கைவிட்டு தீத்திறத்தார் பக்கமே சேர்க’ என்பது சிலப்பதிகாரம்.

அந்தப் பட்டியல், இளங்கோவுக்கு வி.ஐ.பி. பட்டியல். அந்தணர்கள், அறம் செய்பவர்கள், பசு, பத்தினிப் பெண்கள், மூத்தவர்கள், குழந்தைகள் எனும் ஆறு பிரிவினரை ஒதுக்கி விட்டு, தீயைத் தீயவர் பக்கமே சேர்ந்து எரிக்கச் சொல்கிறார். உடனே திராவிட இயக்கத்தினர் கேட்பார்கள், ‘இளங்கோவடிகள் எங்ஙனம் பார்ப்பனர்களைக் காப்பாற்றப் போச்சு?’ எந்தக் காலத்தில் நாம் கவியுள்ளம் தெரிந்து வாசித்தோம்?

இளங்கோவடிகள் பேசும் பார்ப்பார் என்பவர், பூணூல் அணிந்தவர் என்ற ஒற்றைத் தகுதி அல்லது பிறப்புத் தகுதி கொண்டவர்களை அல்ல. முப்புரி நூல் அணிந்துகொண்டு வஞ்சனைக்குக் கூட்டு நிற்பவர்கள், அழுக்கு அரசியலுக்கு ஆலோசனை சொல்வோர், குற்றம் என அறிந்தும் நீதியை வளைக்க வாதிடுவோர்,

கொள்ளை லாபம் ஈட்ட வணிகம் செய்ேவார் என்பவரை அல்ல அவர் பேசுவது. அந்தணர் எனும் பொருளில் ஆள்கிறார். அந்தணர் என்பவர் யார் என வள்ளுவர் சொல்கிறார். ‘அந்தணர் என்போர் அறவோர், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்’ என்று. ‘அனைத்து உயிர்களுக்கும் நலம் கோரி ஒழுகுகிறவர்கள், அறவோர், எனவே அந்தணர்கள்’.

நான் பள்ளியிறுதி வகுப்பு வாசித்த காலை, எமக்கு காமராசர் தலைமையில் அமைச்சராக இருந்த அனைவர் பெயரும், அவர்கள் இலாகாவும் தெரியும். பண்டிட் ஜவகர்லால் நேரு தலைமையில் கேபினட் அமைச்சர்களாக இருந்தவர்கள் பெயர் அறிவோம், அவர்தம் துறை அறிவோம். இன்றோ, எவர் அமைச்சர், அவர் துறை என்ன என்பது அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும்.

தமது துறையில் பணிபுரியும் ஊழியர்களின் இடமாறுதலுக்கு அவர்களிடமே கையூட்டு வாங்குபவர்கள் வி.ஐ.பி.களா? தம் சதை அறுத்துத்தாமே தின்பார்
களா? இன்று வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற மிகப் பலரின் தியாகம், தொண்டு, ஆளுமை, திறன் என்பன எவராலும் பொருட்படுத்தும் தரமற்றது. ‘முப்பத்தேழு நாட்கள் அமைச்சராக இருக்கும்போது அவர் வி.ஐ.பி., பதவியில் இல்லாதபோது வெற்று மனிதர்’ என்பது சீரழிந்த நிலைமை அல்லவா? ‘மிக முக்கியமான மனிதர்’ என்பது சமூகம் வழங்கும் சிறப்பு. பதவியும் அதிகாரமும் வழங்கும் முன்னுரிமை அல்ல.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நமக்கு வி.ஐ.பி. மக்கள் தொண்டுக்கு என்றே நடக்கும் தோழர் ஆர்.நல்லகண்ணு நமக்கு வி.ஐ.பி. உலகத்துத் தமிழர் நலம் பேண வாழ்நாளை அர்ப்பணித்திருக்கும் பழ.நெடுமாறன் நமக்கு வி.ஐ.பி. இலக்கியத்துக்கும் இசைக்கும் நாட்டியத்துக்கும் சிற்பத்துக்கும் ஓவியத்துக்கும் மருத்துவத்துக்கும் கல்விக்கும் வரலாற்றுக்கும் விஞ்ஞானத்துக்கும் திறன் பாய்ச்சுபவர் எவராக இருந்தாலும் நமக்கு அவர் வி.ஐ.பி. அவர்கள் வாகனத்துக் கூரையில் சுழலும் செவ்விளக்குக் குமிழ் இருக்காது! ஏன், வாகனமே கூட இருக்காது.

நாலடியார் கூறுகிறது... ‘நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் சொல் அளவு அல்லால் பொருள் இல்லை - தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ? தவம் கல்வி ஆள்வினை என்று இவற்றால் ஆகும் குலம்’. அட்டையும் சின்னமும் சுழல் விளக்கும் கொண்டு ஒருவன் வி.ஐ.பி. என்று குலம் பேசுவதில் ஒரு பொருளும் இல்லை. மக்கள் தொண்டு என்னும் தவம், தலையாய கல்வியுடைமை, ஆள்வினை என்பவற்றாலேயே வி.ஐ.பி. எனும் குலம் அமையும்.

இந்திய வரலாற்றின் சிறந்த பொதுவுடைமை அறிஞருள் ஒருவரான கேரளத்து ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, தமது கட்சி மாநாடு எனில், உணவு இடைவேளையின்போது தொண்டருடன் தொண்டராக நின்று, கையில் தட்டு ஏந்தி உணவு வாங்கித் தின்பாராம். இன்று எந்த வி.ஐ.பி.க்கு அந்த திடம் இருக்கிறது?‘பழமொழி’ சொல்வது போல, ‘கூற்றம் உயிர் கொள்ளும்போழ்து, குறிப்பு அறிந்து மாற்றம் உடையாரை ஆராயா’. உயிர் வாங்க வரும் கூற்றுவன், காலன், மறலி, யமன் அல்லது எமன், வி.ஐ.பி. என்று ஒதுங்கிப் போவானா? நடைமேடையில் உறங்கும் எளிய மனிதன் என்பதால் அவசரமாய்க் கவர்ந்து போவானா?

என்றாலும் சாவிலும் கூட வி.ஐ.பி. சாவு, சாமான்யன் சாவு என ஊடகங்கள் பிரித்து, பேதப்படுத்திக் கொண்டாடுகின்றன அல்லது புறக்கணிக்கின்றன. மகாகவி பாரதியார் இறந்தபோது பதின்மூன்று பேர் கலந்துகொண்டார்களாம். அண்மையில் ஆளுமையுடைய தமிழ்த் திறனாய்வாளர் வெங்கட் சாமிநாதன் இறந்தபோது ஏழெட்டுப் பேர் கலந்து கொண்டார்களாம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள், ஒரு வி.ஐ.பி. வீட்டு நாய் இறந்து போனால் அதை ஊடகங்கள் எவ்விதம் கொண்டாடுகின்றன என்று. விபத்திலோ, நோயிலோ இறந்துபோகும் எளிய தொழிலாளியின் மகனை விட, வி.ஐ.பி.யின் மகன் எந்த வகையில் முக்கியமானவன்? புத்திர சோகம் என்பது பிரபலங்களுக்கும் செல்வந்தருக்கும் அரசியல் முதலாளிகளுக்கும்  எனத் தனித்த சோகமா? எளிய குடிமகனின் புத்திர சோகம் பத்துப் பைசா பெறாத சோகமா? ஈதென்ன ஊடக அறம் அல்லது நெறி?

வாகனமும் காவல்துறை பாதுகாப்பும் இன்றி, சாலையில் வி.ஐ.பி. எவரும் நடந்துபோனால் சமூகம் அவரைப் பொருட்படுத்தித் திரும்பிப் பார்க்குமா என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், சமூகம் திரும்பிப் பார்க்கும் தன்மையில் அவரிடம் எந்தச் சிறப்பும் இல்லை. அறுநூறு வாக்கு வேறுபாட்டில் வென்று சட்டமன்ற உறுப்பினராகி, கொடுங் காற்று அடித்தால் குப்பை பறந்து கோபுர இடுக்கில் செருகிக் கொள்வதைப் போல, அமைச்சராகக் கூட ஆகிவிடலாம். எனில் சமூகத்துக்கு அவர் அதி முக்கியமான ஆள் ஆகிவிடுவாரா? எவர் வி.ஐ.பி. ஆனால் எமக்கென்ன லாபம் அல்லது நட்டம்? எமது தேநீருக்கான உழைப்பை யாம்தானே செய்தாக வேண்டும்?

சமூகம் இதுபோன்ற போலி அந்தஸ்துகளைப் பொருட்படுத்தாது. வேண்டுமானால் வேடிக்கை பார்க்கும். ஆதாயம் இருந்தால் ஒருவேளை பிறகே ஓடும், அவ்வளவுதான்! ‘கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்’ என்பது போல, மனிதனுக்கு அணிகலன் மனிதம். மனிதமே இல்லாத ஒருவன் எங்ஙனம் அதிமனிதன் ஆவான்? எங்ஙனம் மிக முக்கியமான மனிதன் ஆவான்? சூதும் வஞ்சனையும் பொய்மையும் களவும் துரோகமும் அதிமனிதப் பண்புகளா ஐயா?

‘பெரியவர்க்குச் செய்யும் சிறப்புகளை எல்லாம் பேணிச் சிறியார்க்குச் செய்துவிடுவது என்பது வெறி நாயைப் பல்லக்கில் வைத்துச் சுமப்பது போன்றது’ எனும் பொருளில் பழம் பாடல் ஒன்றுண்டு. இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரச் சூழலில் ஒருவன் வி.ஐ.பி. ஆவது மிக எளிது. ஆனால் மனிதனாக இருப்பது மிகக் கடினம். மகாத்மா காந்தியின் எளிமை பற்றிச் சொல்வார்கள், அவர் எளிமையாக இருப்பதற்கான செலவு மிக அதிகம் என்று. அது போல மனிதனாக இருப்பது மிக அரிய காரியம்.ஆகவேதான் கம்பன் பேசினான், ‘மற்றுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா!’ என்று.

அப்படி மிச்சமாகும் இரண்டு நிமிடங்களை அவர்கள் என்ன செய்வார்கள்? மூன்றாம் உலகப் போரைத் தடுத்து நிறுத்தப் பயன்படுத்துவார்களா?

வி.ஐ.பி.  என்பவர் யார்? தலையில் இரண்டு கொம்புகள் முளைத்தவரா? தலைக்குப் பின்னால்  ஒளிவட்டம் சுழல்கிறவரா? ஊனும் உயிரும் உருக நாட்டுப்பணியில் வாழ்நாள்  ெதாலைத்தவரா?

- கற்போம்...

எவர் வி.ஐ.பி. ஆனால் எமக்கென்ன லாபம் அல்லது நட்டம்? எமது தேநீருக்கான உழைப்பை யாம்தானே செய்தாக வேண்டும்?

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது