நேர்காணல்



ஒரு சதுர சென்டி மீட்டர் கூட இல்லாத சின்னஞ்சிறிய தாள்! நேர்காணலுக்கு வந்திருந்தவர்களிடம் அதைக் கொடுத்து, அந்த துண்டு தாளில் கப்பல் செய்யச் சொன்னார் முதலாளி.

அதை இரண்டாக மடித்து, நான்காக மடிப்பதே சிரமமாக இருந்தது. பின் அதைக் கப்பல் செய்வதற்கேற்ப நான்கு மடிப்புகளில் ஒன்றை முக்கோணமாக மடித்து, மீண்டும் மூன்று மடிப்புகளை முக்கோணமாக மடித்து, அதற்கடுத்த படிநிலைகளை நினைத்தபோதே கப்பல் கவிழ்ந்துவிடும் போலிருந்தது.நேர்காணலுக்கு வந்திருந்த பலரும் இந்த வினோதச் செயலைச் செய்ய முடியாமல் பின்வாங்கினர்.

செண்பகராமன் எதையும் யோசிக்காமல் முயற்சித்துப் பார்த்தான். எவ்வித நடுக்கமோ, பதற்றமோ இன்றி அந்தச் சிறிய காகிதத்தில் காகிதக் கப்பலைச் செய்து முதலாளி முன் வைத்தான்.அவர் சந்தோஷமாக அவனை வேலைக்குத் தேர்வு செய்தார்.ஆனாலும் செண்பகராமனுக்கு சந்தேகம்... ‘இது என்ன சம்பந்தம் இல்லாத டெஸ்ட்?’ என்று. சந்தேகத்தை ஒளிக்காமல் மறைக்காமல் நாசுக்காக முதலாளியிடம் கேட்டான்.

முதலாளி சொன்னார், ‘‘நம்ம டாட்டூ குத்துற தொழிலுக்குக் கை நடுக்கம் இருக்கக் கூடாது. சிக்கலான டிசைனைப் போடச் சொன்னா அதை நினைச்சு பதற்றப்படக் கூடாது. தப்பாவும் செய்துடக் கூடாது. வர்றவங்களுக்கு காயமாகிடவும் கூடாது. அதுக்குத்தான் இந்த டெஸ்ட்!’’செண்பகராமனுக்குப் புரிந்தது முதலாளியின் நுட்பமும், தொழில் ரகசியமும்!

விகடபாரதி