மாணவர்களை மதிப்பெண் போட்டியாளர்களாக ஆக்கிவிட்டோம்!



சர்ச்சை

கடந்த 2017-2018 கல்வியாண்டுக்கான பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவர்களின் மதிப்பெண் பெரும்பாலும் குறைந்திருப்பது மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 4 சதவீதம் பேர் மட்டுமே அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் பட்டியலில் வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் அதாவது, 56% பேர் சராசரி மதிப்பெண் எடுத்தே தேர்ச்சி பெற்றுள்ளனர். 201 முதல் 300 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கைதான் அதிகம் (29 சதவீதம்).

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 500-க்கு 480-க்கு மேல் பெற்ற மாணவர்கள் பலரும் பிளஸ் 1 தேர்வில் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பதற்கு தமிழ்நாடு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி கூறும் காரணம் வேறுமாதிரியாக உள்ளது.

‘‘அடுத்தடுத்து 3 ஆண்டுகளும் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, அதனால்கூட அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.

தவிர, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கும் முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. கான்செப்ட், கீ-ஆன்சர், பாயின்ட்ஸ் என வெவ்வேறு அடிப்படையில் வினாத்தாளை திருத்தியுள்ளனர். இதனால்தான், நல்ல மதிப்பெண் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது.

தேறுவது கடினம் என்ற நிலையில் இருந்த மாணவர்கள் ஓரளவு மதிப்பெண் பெற்று பாஸாகியுள்ளனர். இது மாணவர்களிடையே மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது’’ என்று பல கோணங்களில் உள்ள காரணங்களை குறிப்பிடுகிறார் மூர்த்தி. 

மேலும் தொடர்ந்த அவர், ‘‘+1 வகுப்புக்குப் பாடங்களை கற்பிக்காமல் +2 பாடங்களை மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு குருட்டு மனப்பாடம் செய்வதை வணிக நோக்கம் மட்டும் கொண்ட தனியார்  கோழிப்பண்ணைப் பள்ளிகள் தமிழகம் முழுவதும் பரவியதே +1 பொதுத்தேர்வு நடத்த வேண்டிய நிலைக்குக் காரணம்.

+1 பாடம் படிக்காமல் உயர்கல்விக்குச் சென்ற மாணவர்கள் சரிபாதியினர் பொறியியல் முதலாண்டுப் பருவத்தேர்வுகளில் தோல்வி அடைவதைத் தடுக்க
+1  வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்துவதைத் தவிர அரசுக்கும் வேறு வழி தெரியவில்லை. மதிப்பெண் போட்டிக் களத்தில் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு +1 பொதுத் தேர்வு ஒன்றும் புதிய சுமையல்ல. ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் +1 வகுப்புப் பாடங்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்பட்டுவந்தன.

தற்போது வெளிவந்த +1 பொதுத் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கு +2வில் இரண்டு பொதுத் தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களின் கூட்டுத்தொகைப்படியே மதிப்பெண் கணக்கிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதில் கூட்டுத் தொகை குறைவாக வரும்பட்சத்தில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்பு பாதிக்கப்படும்.

அதேநேரத்தில், கடந்த சில ஆண்டுகளாக பெருவாரியான தனியார் பள்ளிகளில் +2வில் அதிக தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களைக் காண்பிக்க +1 பாடத்திட்டங்கள் நடத்தப்படாமல் இருந்து தற்போது பொதுத் தேர்வாக மாற்றப்பட்டது மாணவர்களை கலக்க மடையச் செய்துள்ளது. ஆனால், சில ஆண்டுகளில் நிலைமை சரியாகிவிடும்’’ என்கிறார்.

பொதுத்தேர்வோடு நீட் தேர்வின் தாக்கமும் எத்தகைய விளைவுகளை உண்டாக்கியுள்ளது என்பதை விவரிக்கலானார் மூர்த்தி ‘‘தனியார் பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு என்ற பெயரிலான மதிப்பெண் போட்டி தற்போது மூன்றாண்டுகளாக மாறியுள்ளது.

ஏற்கனவே 10 மற்றும் +2 வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் விளம்பரம் செய்து வந்த தனியார் கல்வி நிறுவனங்கள் இவ்வாண்டு முதல் +1 வகுப்புக்கும் சேர்த்து மதிப்பெண் விளம்பரம் செய்யவேண்டியுள்ளது. நீட் தேர்வு நடைமுறையினால் தற்போது தனியார் பள்ளிகளின் நீட் தேர்வு சாதனைகளையும் விளம்பரம் செய்யவேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. தனியார் பள்ளிகள் நீட் தேர்வு பயிற்சி நிறுவனங்களாக மாறிவிட்ட சூழலை தற்போது பார்க்க முடிகிறது.

வேறு வழி இல்லாமல் அரசுப் பள்ளி களில் படிக்கும் ஏழை மாணவர்களையும் நீட் தேர்வுக்கு தயாரிக்கும் வேலையை அரசாங்கம் செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது’’ என்று மாணவர்கள் சந்திக்கும் சங்கடங்களைப் பட்டியலிடுகிறார்.

‘‘கல்வி நிறுவனங்கள் நல்ல குடிமக்களை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை இன்று எங்காவது கேட்க முடிகிறதா? பேச முடிகிறதா? எங்கள் கல்வி நிறுவனம் நல்ல குடிமக்களை
உருவாக்குகிறது என்று இன்றைக்கு எந்தத் தனியார் பள்ளி, கல்லூரிகளின் விளம்பரங்களிலாவது சொல்லப்படுகிறதா? பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல், நீட் தேர்வுச் சாதனையாளர்களின் பட்டியல் என்பவைதான் இன்றைய தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களாக இருக்கின்றன. மதிப்பெண் போட்டியால் உலகில் நாம் எல்லோரும் போட்டியாளர்களாக மாற்றப்படுகிறோம். போட்டியாளர்களாக மாற நிர்பந்திக்கப்படுகிறோம்.

 பள்ளிக் கல்வியின் இறுதி மூன்றாண்டுகள் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கான போட்டி உலகிற்கு மாணவர்களைத் தயார்படுத்துவதே ஒரே குறிக்கோளாக மாறி இருப்பது வேதனை அளிக்கிறது. மானுட வாழ்க்கைக்கான ஆயிரக்கணக்கான இலக்குகளைக் கல்வியின் மூலமே பயிற்றுவிக்க முடியும்.

ஆனால் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கான மதிப்பெண் போட்டியாளர்களாக ஆண்டுக்கு சுமார் முப்பது லட்சம் மாணவர்களைப் பயிற்றுவிக்கிறோம். ஜனநாயகப் பண்புகளையும் எத்தனையோ உயர்வான வாழ்வியல் மதிப்பீடுகளையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பதின்பருவ வயதினரை நாம் தவறான திசைக்கு கொண்டு செல்கிகிறோம்.  

பள்ளிக் கல்வி முறையில் மனனக் கல்விக்கும் பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை சரிபாதி அளவிற்காவது குறைக்கவேண்டும். எழுத்துத் தேர்விற்கு 50% மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படவேண்டும்.

பொதுத் தேர்வுகளில் எழுத்துத் தேர்வுகளுக்குக் கொடுக்கும் மதிப்பெண் அளவைவிட மாணவர்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்த கல்விச் செயல்பாடுகளுக்கும் செய்முறைத் தேர்வுகளுக்கும் அதிக மதிப்பெண்கள் வழங்கப்படவேண்டும். செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்குதல், அகமதிப்பீடுகள் ஆகிய முறைகள் முழுமையாக்கப்படுவதும் செழுமையாக்கப்படுவதும் முதன்மையானது.

தனியார் பள்ளிகள் நுழைவுத்தேர்வுப் பயிற்சி மையங்களாக மாறுவதை கடுமையான விதிமுறைகள் மூலம் தடுக்கவேண்டும். மதிப்பெண் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்யவேண்டும். மதிப்பெண் தரநிலை அறிவிப்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு கைவிட்டுள்ளது அனைவராலும் வரவேற்கப்பட்டது. மேலும் இதுபோன்ற பல மாற்றங்களை உடனடியாகச்  செய்ய அரசு தயாராக வேண்டும்.

பெரும் பணத்தை செலவு செய்து பலர் வாய்ப்புகளை இழப்பதும் மிகக் குறைவான எண்ணிக்கையினர் வாய்ப்புகளைப் பெறுவதும்தான் இன்றைய எல்லா வகையான போட்டித் தேர்வுகளிலும் நுழைவுத் தேர்வு களிலும் நடந்துவருகின்றன.  நூற்றில் 5 விழுக்காட்டினர் கூட வாய்ப்புகளைப் பெறுவதில்லை.

மிகக் குறைவான உயர்கல்வி வாய்ப்புகளுக்கு மிக அதிகமானவர்கள் போட்டி போடும் போட்டி உலகம் இது. இப்போட்டி உலகில் இருந்து மாணவர்களை விடுவிக்க வழிகாணவேண்டும். வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் இருப்பதை சொல்லிக் கொடுக்கவேண்டும். வருங்காலத் தலைமுறையை பொதுத் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றிற்கான போட்டியாளர்களாகத் தயாரிப்பதைவிட நல்ல குடிமக்களாக உருவாக்குவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்’’ என்று ஆதங்கப்படுகிறார் மூர்த்தி.

- தோ.திருத்துவராஜ்