புதிய பாடத்திட்டமும்… தவிர்க்கப்பட வேண்டிய தவறுகளும்!



ஆலோசனை

தமிழகப் பள்ளிக்கல்வியில் பல ஆண்டுகளாக இருந்த பாடத்திட்டம் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு தேர்ச்சி விகிதத்தின் குறைவு, நீட் தேர்வு பிரச்னைகளைக் காரணம் காட்டி மாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு QR Code உள்ளிட்ட நவீன மின்னணு உலக சாத்தியப்பாடுகளைக் கொண்டு 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளின் புதிய பாடநூல்கள் வெளியாகி மாணவர்களின் கைகளில் தவழ்கின்றன. கல்வியாளர்கள் பலரது உழைப்பும் ஒருசேர இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றம் மாணவர்களின் கல்வித்தரத்தை மாற்றிவிடும் என்று பள்ளிக்கல்வித் துறை எண்ணமாக இருந்தாலும், ஒரு துளிதான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடநூல்கள் பல இடங்களில் பழைய பாடநூல்களைப் போலவே உள்ளன என்று ஒரு சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுகுறித்து அரசு அதிகாரி மற்றும் ஆசிரியர் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்...

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஜி.அறிவொளிபள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 2018-19 கல்வியாண்டில், 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதனைத் தொடர்ந்து 2019-20 ஆம் கல்வியாண்டில் 2, 7, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கும், 2020  21-ஆம் கல்வியாண்டில் 3, 4, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது அரசு வெளியிட்டுள்ள பாடநூல்கள் யாவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல புதிய சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக மாணவர்கள் பாடநூல்களைத் தாண்டி தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும், இணைய வளங்களைப் பாடங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கவும், தொடர் வாசித்தலுக்கான குறிப்புதவி நூல்களைத் தேடித் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாடநூல்களில் இடம்பெற்றுள்ள ஒரு சில புதிய அம்சங்களும் அவற்றின் வாயிலாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெறும் கூடுதல் அறிவு வளங்களாக பின்வருபவற்றைச் சொல்லலாம்…  

பாடத்தின் இலக்கு: குறிப்பிட்ட பாடப்புலத்தில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய விவரங்கள். கற்றல் நோக்கங்கள்: மாணவர்கள் பெறவேண்டிய செயலாக்கத் திறனை / குறிப்பிட்ட திறன்களை விவாதித்தல். உங்களுக்குத் தெரியுமா?: அன்றாட வாழ்க்கை / துறைசார்ந்த வளர்ச்சியோடு பாடப்பொருளைத் தொடர்புபடுத்தும் கூடுதல் விவரங்கள்.

எடுத்துக்காட்டுக் கணக்குகள்: மாணவர்களின் தெளிவான புரிதலுக்காகத் தீர்க்கப்பட்ட மாதிரிக் கணக்குகள்.
சுய மதிப்பீடு: மாணவர் தம்முடைய கற்றறிந்த திறனைத் தாமே மதிப்பீடு செய்து கொள்ள உதவுதல்.
விரைவுத் துலக்கக் குறியீடு (QR Code): கருத்துகள், காணொலிக் காட்சிகள், அசைவூட்டங்கள் மற்றும் தனிப்பயிற்சிகள் ஆகியவற்றை விரைவாக அணுகும் வசதி.

தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்: கற்றலுக்கான வளங்களுக்கு வழிகாட்டல், மாணவர்கள் அவற்றை அணுக வாய்ப்பளித்தல், கருத்துகள்/தகவல்களை பரிமாற வாய்ப்பளித்தல். பாடச் சுருக்கம்: பாடப்பகுதியின் கருத்தினைச் சுருக்கிய வடிவில் தருதல்.
கருத்து வரைபடம்: பாடப்பகுதியின் கருத்துகள் ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவதன் வாயிலாகப் பாடப்பொருளை உணரச் செய்தல்.

மதிப்பீடு: பன்முகத் தெரிவு வினா, எண்ணியல் கணக்கீடுகள் போன்றவற்றின் வாயிலாக மாணவரின் புரிதல் நிலையினை மதிப்பிடுதல்.
மேற்கோள் நூல்கள்: தொடர் வாசித்தலுக்கு ஏற்ற குறிப்புதவி நூல்களின் பட்டியல்.
சரியான விடைப்பகுதி: மாணவர் கண்டறிந்த விடைகளின் சரியான தன்மையினை உறுதிசெய்யவும் கற்றல் இடைவெளிகளைச் சரிசெய்துகொள்ளவும் உதவுதல்.

சொற்களஞ்சியம்: முக்கிய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்.
பிற்சேர்க்கை: அடிப்படை மாறிலிகள் மற்றும் முக்கிய தரவுகளின் அட்டவணைகள் போன்ற மாற்றங்கள் பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.
மு.சிவகுருநாதன், பட்டதாரி ஆசிரியர்  கல்வி மற்றும் பாடத்திட்டம், பாடநூல் பற்றிய புரிதலுள்ள அலுவலர்கள் இருக்கும்போதே இந்நிலை என்றால், வருங்காலங்களில் இதைவிடச் சிறப்பான பாடநூல்கள் உருவாகும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. ஒருசில தகவல்கள் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

பாடநூலின் இறுதி வடிவம் கிடைத்தபிறகு அவற்றைப் வரைவுப் பாடத்திட்டத்தைப்போல் வரைவுப் பாடநூலாக வெளியிட்டு, திருத்தங்கள் செய்து பின்னர் இறுதியாக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான பாடநூல்கள் உருவாவதைத் தடுக்க முடியாது.
15 நாட்களுக்கு முன்னதாகவே 6ம் வகுப்பு தமிழ் - ஆங்கிலம், 9ம் வகுப்பு தமிழ் - ஆங்கிலம், 11ம் வகுப்பு தமிழ் ஆகிய பாடநூல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகிவிட்டன. இரண்டாம், மூன்றாம் பருவப் பாடநூல்களையாவது முன்கூட்டியே வரைவுகளாக வெளியிட்டுத் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். உதாரணமாக சில தவறுகளைப் பார்ப்போம்…

6ம் வகுப்பு சமூக அறிவியல்

சர்வதேசம், தேசம் போன்ற சொல்லாடல்களின் பின்புலம் வேறு பொருளை நோக்கிப் பயணிப்பவை. உலகம், நாடு என்று பயன்படுத்தத் தடையேது? (சர்வதேச மலைகள் தினம், பக். 197) வல்லினம் மிகும், மிகா இடங்கள் பற்றிய தெளிவு இல்லை. பெயர் காரணம், விளையாடி பார், ஆந்திர பிரதேசம், புவி சார்பசைவு, நீர் சார்பசைவு, வேதி சார்பசைவு, கோழி கறி (அறிவியல் பாடங்கள்) என்று விலகி இருக்கும் இடங்கள் ஏராளம்.

அச்சுப்பிழைகள் அநேகம். இவற்றைக் களைய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். வாயு பறிமாற்றம், குவாஷியோர்கள் என்றெல்லாம் இருக்கிறது. வரைபடத்தில் குறிக்க வேண்டிய இடங்களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியன உள்ளது. மாநிலப் பகுதிகள் டெல்லி, சென்னை போன்ற இடங்களான பொருள் விளங்கவில்லை. (பக். 130)

9ம் வகுப்பு சமூக அறிவியல்

லெமூரியா கண்டக் கோட்பாட்டின் பொருத்தமின்மை பற்றிய குறிப்பு வரவேற்புக்குரிய ஒன்று (பக். 14). சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான பாடப்பகுதி நன்றாக வந்துள்ளது. பசுபதி / சிவன் என்ற வழக்கமான கதையாடலை நிகழ்த்தாமல் அணுகியிருப்பதும் நன்று. படங்கள், ஆய்வுகள் பற்றிய தரவுகள் இதற்கு முன்னர் இல்லாத ஒன்று.

பண்டைய தமிழகத்தில், சோழர்கள் காலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த ‘குடவோலை முறை’இருந்தது (பக். 175), தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் குடவோலை என்னும் வாக்களிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது (பக். 184) ஆகிய வரிகள் சங்ககால, பிற்காலச் சோழர்கள் ஆட்சியிலும் இருந்ததாகச் சொல்கிறது.

பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் பிரம்மதேயங்களில் குறிப்பிட்ட சாதிக் குடும்பங்களின் தலைமையை திருவுளச்சீட்டு எடுக்கும் முறையை வாக்களிக்கும் முறை, சிறப்பு வாய்ந்த குடவோலை முறை என்று புனைவு எழுத வேண்டிய அவசியமென்ன? குடவோலை முறையில் எப்படி வாக்களிக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டுமல்லவா? NOTA, VVPAT போன்றவற்றோடு குடவோலை வாக்களிப்பையும் செருகுவதுதான் நமது ஆசிரியப் பெருந்தகைகளின் தலைசிறந்த பணியாக உள்ளது!

கலைச்சொற்கள் பட்டியல் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. கூடவே மொழியாக்கத்திலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். 9ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் pesticidesஐ ‘பூச்சிக்கொல்லி மருந்துகள்’ (பக். 220) என்று மொழியாக்கம் செய்யப்படுகிறது. ‘பூச்சிக்கொல்லி’ என்று சொல்வதில் என்ன சிக்கல்? அது என்ன ‘பூச்சிக்கொல்லி மருந்து? ‘பூச்சி மருந்து’என்கிற தவறான சொல்லாடல் மாறி ‘பூச்சிக்கொல்லி’யாக நடைமுறையில் வந்து விட்ட பிறகு இன்னும் ஏன் பழஞ்சொல்?

9ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் video conference காணொலிக் கூட்டம் (பக். 121) என்றுள்ளது. காணொளி, காணொலி என பல இடங்களில் மாற்றிப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் எது சரியானது? கலைச் சொல்லாக்கங்கள் மிகவும் செயற்கையாக இருப்பது மாணவர்களை கல்வியிலிருந்து தூரப்படுத்தவே செய்யும்.  மனிதவளக் குறியீட்டு எண் பற்றி பேசப்படுகிறது. உலகத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது எனச் சொல்லாமல் மறைக்கப்படுகிறது (பக். 201)

பன்முகப்பட்ட, அறிவியல் - அறவியல் சிந்தனையே இன்றைய தேவை என்பதையும் மாற்றுகள் மீதான கரிசனத்தையும் நாம் மீண்டும் வலியுறுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

+1 வரலாறு

+1 வரலாறு பாடத்தில் ‘உள்ளாட்சித் தேர்தலும் உத்தரமேரூர் கல்வெட்டும்’ என்றொரு பெட்டிச்செய்தி உள்ளது (பக். 187) பிராமணக் குடியிருப்புகளில் செயல்பட்ட வாரியங்களின் தலைவர்கள் சாதிமுறைப்படி திருவுளச்சீட்டு மூலம் நடந்த தேர்ந்தெடுப்பை இவர்கள் தொடர்ந்து நமது தேர்தல் முறைகளுடன் ஒப்பிட்டும் தீங்கிழைத்து வருகின்றனர்.

நாம் அடிக்கடி சொல்வதைப்போல ஆசிரியர்களும் பேராசிரியர்களும் பாடநூல் உருவாக்கத்துக்கு ஏற்றவர்களாக இல்லை  என்பதையே இது உணர்த்துகிறது. இவர்களது பங்களிப்பு மிகையாகும்போது இதுபோன்ற அபத்தக்கூத்துகள் அரங்கேறுவதைத் தடுக்க முடியாது. ஆனால், இந்த அபத்தங்கள் தவிர்க்கப்பட்டால்தான் தரமான கல்வியை மாணவர்களுக்கு நாம் தரமுடியும்.

- தோ.திருத்துவராஜ்