ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி படிக்கலாம்!



* அறிவிப்பு

பொருளாதார அளவில் நலிவடைந்தோர் தங்கள் குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்துவந்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டப்படி அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.

அதன்படி தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து http://www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடு இணைய வசதி இல்லாதோர் முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம்,  மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான  விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பள்ளிகளில்  விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.

இந்த விண்ணப்பங்களைப்  பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள இடங்களில் இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர் தேர்வு செய்யப்படுவர்.

அந்தந்த பள்ளிகளில் குறிப்பிட்ட நாளன்று நடத்திடும் குலுக்கல் நிகழ்வுகளை கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதர அரசுத் துறை  அதிகாரிகள் கண்காணிப்பர். கடந்த ஆண்டு எந்தெந்தப் பள்ளியில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்களை http://www.dge.tn.gov.in  அல்லது http://tnmatricschools.com/rte/rtepdf.aspx என்ற இணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

- க.கதிரவன்