கடைசி நிமிடம் வரை வாழப் பழகு!



இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர் 8

நாம் வெற்றியடையவே பிறந்திருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் ஆழமாக நிலைநிறுத்த வேண்டும். வாழ்க்கையின் குறிக்கோள் வெற்றியே! வெற்றி என்னும் அச்சாணியில் தான் உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது என்பதை நாம் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கையே நமக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். தோல்வியடைந்து துன்புறுவதற்காக நாம் பிறக்கவில்லை. வெற்றி மலர்கள் பூப்பதே உலகம். இதை ஒவ்வொருவரும் மனதில் நன்கு பதியவைத்துக் கொள்ளவேண்டும்.

பிரச்னைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும். ஆம்! யாருக்குத்தான் பிரச்னை இல்லை? பிரச்னைகள் தான் ஒவ்வொரு மனிதனையும், ஏன் அனைத்து உயிரினங்களையும் இந்த உலகில் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன. அதேபோல் சிக்கல்களும், கஷ்டங்களுமே வாழ்க்கையின் போக்குகளைத் தீர்மானிக்கின்றன எனச் சொல்லலாம். பிரச்னை என்று வந்துவிட்டால் தீர்வும் அதன் பின்னாலேயே வந்து நிற்கும். இது ஓர் இயற்கையான விதிமுறையாக இருக்கிறது. தீர்வில்லாத பிரச்னையோ, பிரச்னையில்லாத தீர்வோ என்றுமே இருந்ததில்லை.

நாம் சாப்பிடுவது, தூங்குவது, சுவாசிப்பது போல் பிரச்னையும் தீர்வும் நம்முடனேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், ஏன் நாம் பிரச்னை என்று வந்துவிட்டால் பயந்து போகிறோம்? ஏன் பதற்றம் அடைகிறோம்? பிரச்னையைக் கண்டு விலக நினைப்பதும், தள்ளிப்போடுவதும் தான் நமது முதல்கட்ட வேலையாகிவிடுகிறது. நமக்கு பிரச்னை என வந்துவிட்டால் ஒன்று கவலைப்படுகிறோம் அல்லது அடுத்தவரின் பிரச்னை என்றால், விலகிச் செல்கிறோம்.

இது பொதுவாகவே அனைவரின் வாழ்க்கையிலும் காண முடிகிறது. ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், பிரச்னைகள்தான் ஒவ்வொரு மனிதனையும், அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்கின்றன. பிரச்னை என்றவுடன் ஏற்படும் பயத்தை முதலில் அகற்றி பிரச்னைகளை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அதை எப்படி வெற்றியாக மாற்றிக்கொள்வது என்று சிந்தித்து அதற்கான செயலில் இறங்கும்போதுதான் உங்கள் வாழ்வில் அதுவே முன்னேற்றத்திற்கான படிகளாக அமைந்துவிடுகிறது.

ஊர்மக்களுக்கு மன்னன் ஒருவர் விசித்திரமான போட்டி ஒன்றை அறிவித்தார். அதாவது, அரண்மனைக் கோட்டையின் வாயிற்கதவை கைகளால் தள்ளி திறக்க வேண்டும். அப்படித் திறந்துவிட்டால் அவர்களுக்கு நாட்டில் ஒரு பகுதி இலவசமாக வழங்கப்படும். ஒருவேளை அவ்வாறு திறக்க முடியாமல் போனால் அவர்களின் கைகள் வெட்டப்படும் என்பதுதான் அந்தப் போட்டி. ‘கைகள் வெட்டப்படும்’ என்ற நிபந்தனையைக் கண்டு அனைவருமே பயந்துவிட்டனர்.

எதற்காக வலியச் சென்று இந்தப் போட்டியில் பங்கேற்று கைகளை இழக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால், ஒரேயொரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்துகொண்டான். அவனை எல்லோரும் பயமுறுத்தினர். கைகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தனர். அதற்கு அவன், ‘‘தோற்றால் என் கைகளைத்தானே இழப்பேன், உயிரை அல்லவே!’’ என்றான். போட்டியும் நடத்தப்பட்டது. அனைவரும் ஆவலோடு வேடிக்கை பார்க்க குழுமியிருந்தனர்.

அந்த இளைஞனும் கைகளால் வாயிற்கதவைத் தள்ளி திறக்க முயற்சித்தான். என்ன ஆச்சரியம் கதவு சட்டென்று திறந்துகொண்டது. ஏனென்றால் அது தாழ்ப்பாள் போடப்படாமலேயே இருந்தது. தன்னுடைய மக்களில் யார் துணிச்சலுடன் செயல்படுபவர் என்பதை அரசர் தெரிந்துகொள்ள இவ்வாறு செய்தார். ஆனால், தோற்றுப்போனால் அவமானம் வந்துசேரும், எதையாவது இழக்க நேரிடும் என்றெல்லாம் பயந்துபோய் நிறைய பேர் நமக்கேன் வம்பு என்று நினைத்து முயற்சி செய்யாமலேயே இருந்துவிடுகின்றனர். நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் கடினமாக முயன்றால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதற்கு இந்த கதை ஓர் உதாரணம்.

மிகுந்த வறுமையால் சாப்பிட பணம் இல்லாமல் உடல்வலிமை இழந்தபோதும், மனவலிமையில் சாதித்தவர்கள் ஏராளம். வயிறார சாப்பிடக்கூட முடியாத வறுமையிலும் சிலர் தங்கள் மனோசக்தியை உபயோகித்து உலகமே பிரமிக்கக்கூடிய சாதனைகள் புரிந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் மேடம் மேரிகியூரி என்னும் பெண்மணி. இவர் சிறுவயதில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் வீட்டு வேலைகளைச் செய்துவந்தார். இவர் வசித்த அறைக்கு ஜன்னல்கள் கிடையாது.

ஒரே கதவுதான் இருந்தது. அதிலே வெளிச்சம் இல்லை, வெப்பமும் இல்லை. இரவு நேரத்தில் குளிர் தாங்க முடியாது. நாற்காலியின் கீழே பதுங்கிக்கொண்டு படுத்துக்கொள்வாராம். பாரிஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்போது சாப்பாட்டுக்கு பணமில்லாமல் பசி தாங்க முடியாமல் மயங்கி விடுவாராம். அப்போதும் தன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை விடவில்லை. தொடர்ந்து செய்த ஆராய்ச்சியின் பலனால் புற்றுநோயைப் போக்கக்கூடிய ரேடியத்தைக் கண்டுபிடித்த பெருமை இவருக்கு உண்டு.

அதுமட்டுமல்ல பௌதிக மற்றும் ரசாயன ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு பெற்றார். உலகிலேயே இந்தப் பரிசை இரண்டு முறை வாங்கியவர் என்ற பெருமை இந்தப் பெண்மணியை மட்டுமே சாரும். இனி நமக்கு வாழ்க்கையே கிடையாது என்று மனமுடைந்து நடைபிணமாகக் காட்சியளிக்க வேண்டிய பரிதாப நிலையை அடைந்தவர்கள் தனது ஊக்கத்தையும், மன உறுதியையும்கொண்டு முன்னேற்றப்பாதையில் சென்று வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

சிலருடைய கஷ்டம் நிறைந்த வாழ்க்கையைப் பார்க்கும்போது இவர்கள் எப்படித்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள், சிறந்த வெற்றியாளராக உருவாகி உள்ளார்கள் என்று நினைக்கத் தோன்றும். அப்படி இனி நமக்கு வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் ஒருவர் நெஞ்சில் உறுதியும், தன்னம்பிக்கையும் மற்றும் துணிச்சலும் இருந்தால் கட்டாயம் வெற்றி பெறலாம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார். அவர்தான் சாதனை பெண்மணி ஸ்வர்ணலதா.

பெங்களூரில் பிரபல ஆடி கார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர்தான் ஸ்வர்ணலதா. இளமையிலே யாருடைய உதவியும் இல்லாமல் 14 வயதிலே டியூஷன் எடுத்து தனது படிப்பிற்கான செலவுகளை தானே பார்த்துக்கொண்டார். அதேபோல 18 வயதிலே வேலைக்குச் சென்று வந்தார். பிறகு திருமணம் செய்துகொண்டு கோவையில் வசித்துவந்தார். ஆறு ஆண்டுகள் கணவர், மகன் மற்றும் மகள் என மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். திடீரென்று ஒருநாள் ஸ்வர்ண லதாவிற்கு கடுமையான காய்ச்சல் வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் எப்படியும் இரண்டு, மூன்று நாட்களில் குணமாகிவிடும், வீட்டிற்கு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

ஸ்வர்ணலதாவுக்கு காய்ச்சல் குறையவே இல்லை. இந்த காய்ச்சல் அதிகமாக அதிகமாக தண்டுவடத்திலுள்ள நரம்பு மண்டலத்தை தாக்கியது. அவ்வளவுதான் தண்டுவடம் முழுக்க மரத்துப்போனது, மரத்துப்போன தண்டுவடம் அவரை இயங்கவிடாமல் செய்துவிட்டது. இது பரம்பரை நோயும் இல்லை, ஏன் வருகிறது என்ற காரணமும் தெரியாது. காய்ச்சலுக்கு பின்பு ஆளையே முடக்கிப்போட்டுவிடும். லட்சத்தில் ஒருவருக்கு வரும் இந்த நோய் ஸ்வர்ணலதாவை தாக்கியுள்ளதாகவும், இது ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள்.  இதை கேட்ட ஸ்வர்ணலதாவின் கணவர் அதிர்ச்சியடைந்தார். இருந்தபோதும், தனது மனைவியிடம் அந்த நோய் பற்றி சொல்லி, இதை குணப்படுத்திவிட முடியும் கவலைப்படாதே என்று நம்பிக்கையூட்டினார்.

தனக்கு வந்துள்ள நோயால் முதலில் மன அழுத்தம் அடைந்த ஸ்வர்ணலதா, ‘இனி இந்த வாழ்க்கை எனக்கு தேவையா என தோன்றுகிறது’ என்று தனது கணவரிடம் தெரிவித்தார். ஆனால், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்வர்ணலதாவை பார்க்க அவரது மகனும், மகளும் வந்தபோது பயந்துபோனார்கள். தனது அம்மாவின் நிலையைப் பார்த்து கண்கலங்கினார்கள். ஆனால், அவர்கள் வருந்துவதைப் பார்த்த ஸ்வர்ணலதா புன் முறுவலுடன் தனது மகளிடம் தான் நன்றாக இருப்பதாகவும், சீக்கிரம் குணமாகி வீட்டிற்கு வந்துவிடுவேன் என்றும் நம்பிக்கையூட்டினார்.

அப்போது தான் ஒரு முடிவுக்கு வந்தார். தனது குழந்தைகளுக்காக தான் வாழ்ந்தே ஆகவேண்டும். அது மட்டுமல்ல… தான் மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதை புரிந்துகொண்டு எப்போதுமே சிரித்தபடியே இருக்க பழகினார். மருத்துவமனையில் தொடர்ந்து 93 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு சிறிது குணமான நிலையில் வீட்டிற்கு வந்தார்.

தனது கணவரின் உதவியுடன் நடக்க முயற்சி செய்தார், முடியவில்லை. பிறகு வாக்கர் உதவியுடன் நடக்க முயற்சி செய்தார், அதுவும் பலிக்கவில்லை. கடைசியில் வீல்சேரில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவர்கள் இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இந்த நோய் படிப்படியாக அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்ற நிலை உருவானது. எது நடந்தாலும் பரவாயில்லை, கடவுள் இருக்கிறார். இருக்கும் கடைசி நிமிடம் வரை வாழப் பழகு, போராடு, வாழக்  கற்றுக்கொள் என்ற முடிவுக்கு வந்தார் ஸ்வர்ணலதா. தான் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தபோது அங்கு நிறைய குழந்தைகள் பலவிதமான நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தார்.

வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே மகிழ்ச்சியை தொலைத்துவிட்ட அந்தக் குழந்தைகளோடு ஒப்பிடும்போது என்னுடைய கஷ்டம் ஒன்றும் பெரிது அல்ல. நான் என் வாழ்வில் நிறைய மகிழ்ச்சியான தருணங்களைப் பார்த்துவிட்டேன் என்று நினைத்துக்கொண்டார். இருந்தபோதும் இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும், இதுபோன்ற நோயில் பாதித்தவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே மகிழ்ச்சியைத் தொலைத்த குழந்தைகள் பற்றி தனது கணவரிடம் பேசினார். பிறகு இருவரும் ‘ஸ்வர்கா’ என்ற அறக்கட்டளையை நிறுவினார்கள். பிறவியிலிருந்து மாற்றுத்திறனாளியாக இருப்பவர்கள், அப்படியே அந்த வாழ்க்கையைக் கடந்திருப்பார்கள், பழகியிருப்பார்கள். ஆனால், 29 வயது வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பம்பரமாக உலகமெல்லாம் சுற்றிவிட்டு திடீரென்று முடங்கிப் போனபோதும் தனக்கு தன்னம்பிக்கை தேவைபட்டப்போதும், தான் மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்றும், அதை ஸ்வர்கா அறக்கட்டளை மூலமாக செய்யவேண்டும் என்றும் முடிவு செய்தார். ‘எனக்கு உடலில் வலிகள் வரும்போதெல்லாம் நான் மற்ற மற்ற விஷயங்களில் செயல்படும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதில் என்னுடைய வலிகளை நான் மறந்துவிடுகிறேன்’ என்கிறார் ஸ்வர்ணலதா.

மீனை கொடுக்காதே தூண்டிலை கொடு என்பார்களே அதைபோல ஸ்வர்கா அறக்கட்டளை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு, நோயால் பாதித்தவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார். திறமைகளைக் கற்றுக் கொடுக்கிறார். ஆற்றலை கற்றுக் கொடுக்கிறார். பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார். அதுமட்டுமல்ல கல்வி சேவை, சக்கர நாற்காலி வழங்குவது, பள்ளி, ரயில்நிலையம் மற்றும் கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் கழிப்பறை கட்டிக் கொடுப்பது என தொடர்ந்து சேவைகள் செய்துவருகிறார்.

‘இந்த உலகில் பிரச்னைகள் இல்லாதவர்கள் எவரும் இல்லை. எப்போதும் சிரித்துக்கொண்டே இருங்கள், கவலையைத் தூக்கி எறியுங்கள்’ என்கிறார் ஸ்வர்ணலதா. தான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனக்கும் அழகிப் போட்டியில் கலந்துகொள்ள ஆசை’  என்று சொல்லி கோவையில் நடைபெற்ற அழகிப் போட்டியில் வீல்சேரில் அமர்ந்தபடியே கலந்துகொண்டு அந்தப் போட்டியில் சிறந்த நம்பிக்கையாளர் என்ற விருதை பெற்றார்.

இவரின் மன உறுதி மகத்தானது. வீல்சேரில் அமர்ந்தபடியே 11 மொழிகளைக் கற்றுக்கொண்டார். புகைப்பட கலைஞராக மெருகேற்றிக்கொண்டார். ஒரு எழுத்தாளராக புது அவதாரம் எடுத்துக்கொண்டார். ஓவியம் வரைவது, கீ-போர்டு வாசிப்பது, பாட்டு பாடுவது எனப் பல திறமைகளைக் கற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றார். தன்னை ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக மாற்றிக் கொண்டு பல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி பல்வேறு அமைப்புகளிலிருந்து பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்வர்ணலதாவிற்கு ஏற்பட்ட ஒரு சோதனையை யார் சந்தித்திருந்தாலும் மூலையிலேயே முடங்கிப் போயிருப்பார்கள். நான்கு சுவர்தான் தனது உலகம் என்று இருந்திருப்பார்கள். ஆனால், ஸ்வர்ணலதா அப்படி இருக்க விரும்பவில்லை. தன்னுடைய வலி வேதனைகளை மறந்து வெளி வந்து புன்னகையுடன் இருந்து தன்னைப் போல் வலி வேதனைகளுடன் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்.

நம்முடைய வலிகள் வேதனைகளை நாம் மறக்கவேண்டும் என்றால் மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள். அப்போதுதான் உங்களுடைய வலியும் வேதனையும் மறக்க முடியும் என்று சொல்லி வாழ்ந்து காட்டுகிறார். சாதாரண சிறிய கஷடங்கள், தேர்வில் தோல்வி போன்றவற்றுக்கெல்லாம் தவறான முடிவுக்கு செல்லும் மாணவர்களுக்கு மத்தியில் ஸ்வர்ணலதாவின் வாழ்க்கை ஒரு உன்னத பாடமாகும்.

ஸ்வர்ணலதாவின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் என்னவென்றால் வாழவேண்டும், ஜெயிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதை ஆழ்மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். தோல்வி ஏற்பட்டுவிட்டதே, கஷ்டம் வந்துவிட்டதே, மகிழ்ச்சி இல்லையே என்று ஒருபோதும் பரிதவிக்கக்கூடாது. மன உறுதியுடன் நம்பிக்கையையும் சேர்த்துக்கொண்டு புன்னகையுடன் போராட கற்றுக்கொள்ளுங்கள்.

மனஉறுதி மற்றும் நம்பிக்கை உடையவர்கள் எப்போதுமே தோற்றுப் போவதில்லை என்று திரும்பத் திரும்ப மனதில் பதியவையுங்கள். இப்போது மட்டுமல்ல எப்போதும் நீங்கள்தான் வெற்றியாளர்.

(புதுவாழ்வு மலரும்)

- பேராசிரியர் முனைவர் அ.முகமது அப்துல்காதர்