அன்று: மசாலா கம்பெனி விற்பனைப் பிரதிநிதி..! இன்று: பல லட்சம் வருமானம் தரும் வெப் டிவி உரிமையாளர்



*வெற்றி கதை
*முயற்சியால் வென்றவர்கள்


சரியான திட்டமிடல் பாதி வெற்றிக்கு சமம் என கூறுவார்கள். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டபோதும் துவண்டுவிடாமல் நம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றால் காலம் அறிந்து செயல்பட்டு தொழிலில் முன்னேற்றப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் கிங் 24 X 7 மல்டிஃபார்ம் டிவி பி.கலையரசு தன் வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த நான் படிக்கும்போதே தொழில் ஈடுபாட்டுடன் வளர்ந்தேன். முதலில் MTR Foods கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதியாக முதற்படி எடுத்து வைத்தேன். ஆனாலும் செல்லும் இடமெல்லாம் எனக்குள் சுடர்விட்டு எரிந்த எண்ணம் ஊடகம் சார்ந்த விளம்பரத் துறை தேடலாக இருந்தது. பணியில் தொடர்ந்துகொண்டே எங்கள் ஊர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின்போது சுவாமியின் வரலாறுகளை சேகரித்து பாடல் வெளியிடும் முயற்சியில் நானும் என் நண்பர் முத்துகுமாரும் ஈடுபட்டு மிகச்சிறந்த முறையில் விளம்பரதாரர்களின் ஒத்துழைப்புடன் வெளியிட்டோம். நாங்கள் வெளியிட்ட பாடல்கள் ஊரெங்கும் ஓங்கி ஒலித்தன.

ஊரே எங்களைப் பாராட்டியது. இருந்தும் நாங்கள் உள்ளுக்குள் அழுதுகொண்டு இருந்தோம். கேசட் சரியான விற்பனை ஆகாததால் 30,000 ரூபாய் நஷ்டத்தை சுமந்திருந்தோம். அன்று எனக்குள் ஏற்பட்ட தாகத்தீதான் இந்த ரூ.30,000-த்தை இதே ஊடகம் சார்ந்த தொழில் மூலமே சம்பாதித்து கடனை அடைக்க வேண்டும் என முடிவெடுத்தேன். விற்பனைப் பிரதிநிதி பணியின் இடையே லக்ஷ்மன் ஸ்ருதி கலைநிகழ்ச்சி நடத்த முடிவெடுத்து ஊரே வியக்கும் வகையில் பெருநகரங்களில் விளம்பரதாரர்களின் ஒத்துழைப்போடு நடத்தி பாராட்டுகளையும் அளவற்ற புகழையும் ஒரேநாளில் பெற்றோம்.

இதிலும் வழக்கம்போல் பணநஷ்டமே ஏற்பட்டது. சில நாட்களுக்கு பின் நான் செய்த தவறுகளையும் பணியில் ஈடுபட்டு இனி ஊருக்கு தகுந்த வேலை, தகுந்த திட்டமிடல், இஷ்டமில்லாத வேலையை விட்டு, இஷ்டப்பட்ட தொழிலை முழுநேரமாக செய்திட முடிவெடுத்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு புதியதாக தொடங்கப்பட்டிருந்த உள்ளூர் தொலைக்காட்சியின் விளம்பர ஏஜென்சியாகி எனது பலநாள் தேடல்களுக்கு முழு வடிவம் கொடுக்கும் பணியில் இரவு பகல் பார்க்காமல் உழைத்தேன்.

உழைப்புக்கேற்ற பலன் கிடைத்தது. நிலபுலன்கள் சொந்தமானது. ஆனால், எனது தேடல்கள் பல திசைகளில் பரந்து விரிந்தன. இடையில் எனது திருமணம் இனிதே நடந்தேறியது. சில நாட்களிலேயே எனது மனைவி மாதேஸ்வரியை உரிமையாளராக்கி ஆர்ட்கிங் மீடியா எனும் நிகழ்ச்சி தயாரிப்பு கம்பெனியை வங்கி நிதி உதவியுடன் ஆரம்பித்து எனது வாடிக்கையாளர்களுக்கு விளம்பர வெளியீடு மற்றும் தயாரிப்பு பணிகளுடன் சேட்டிலைட் சேனல், அரசு பேருந்து விளம்பரங்களின் ஒப்பந்தம் என பரிணாம வளர்ச்சியடைந்தது.” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் கலையரசு.


மேலும் தொடர்ந்த அவர், ‘‘வேறு தொழில் செய்து வந்த எனது தம்பி எழிலரசுவை நிர்வாகத்தை பார்க்கும் பணிக்காக என்னுடன் இணைத்துக்கொண்டேன். நிகழ்ச்சித் தயாரிப்புகள் தொழில்நுட்ப உபகரணங்களை சொந்தமாக வாங்கியதோடு 10க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்த்துக்கொண்டேன். எங்கள் பகுதியில் இதுவரை காணாத தொழில்நுட்பங்களைப் புகுத்தி பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளுடன் திருமண நிகழ்ச்சிகளையும் தயாரிக்கும் பணியில் தனி அடையாளத்துடன் வலம் வந்தோம்.

அச்சமயத்தில் நாங்கள் பயந்தது போன்றே எங்களது மூலாதாரமான உள்ளூர் சேனல் மூடப்பட்டது. எங்கள் நிறுவனம் மாதந்தோறும் சம்பளம், கடன், வட்டி என சிக்கலான நிலையில் வரவுக்கேற்ற செலவுகளோடு ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு சூறாவளியாக என்ன நோய் என்றே கண்டுபிடிக்க முடியாத பிரச்னை உடலில் ஏற்பட்டது. என் உடலில் 1 ஆண்டில் 5 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

உயிர்பிழைத்தால் பெரிது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். மிகுந்த பணச் செலவுகளோடு மேற்கொண்ட சிகிச்சை மற்றும் என் குடும்பத்தாரின் தன்னம்பிக்கையாலும் நடமாடும் நிலைக்கு திரும்பினேன். சம்பாதித்த சொத்துகள், நகைகள் அடமானத்திலிருக்க, வட்டி கட்டமுடியாத நிலையும், வாங்கி குவித்திருந்த கேமராக்கள் DVDயிலிருந்து HD தரத்தில் தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்ட நிலையும் பெரும் மனக்குழப்பத்தை உண்டாக்கியது.’’ என்று தான் சந்தித்த கஷ்டங்களைப் மாறாத வடுக்களோடு விவரித்தார்.

‘‘இப்படியே இருத்துவிடக்கூடாது என்று தொழிலுக்கு பங்குதாரர் தேடினேன். ஆனால் அப்படி யாரும் கிடைக்கவில்லை. நம்மால் மீண்டெழ முடியும் நானும் என் குடும்பத்தினரும் ஒரே மனதோடு முடிவெடுத்து வங்கியிலிருந்த நகைகளை விற்று கடனை அடைத்தோம். மீதி தொகையில் இரண்டு HD கேமராக்களை புதியதாக வாங்கினோம். ஜெயித்தே ஆகவேண்டும் என உடல்நிலையைக் கட்டுப்படுத்திக்கொண்டு எனது வாடிக்கையாளர்களான Ranator, Jos Alukkas, Sakthi Masala, The Chennai Silks நேரில் சந்தித்து விளம்பர பணி ஒப்பந்தங்களைப் பெற்று மீண்டும் பரபரப்பாக நிறுவனம் இயங்கியது.


இருந்தபோதும் நாங்கள் அவ்வளவுதான், மீண்டு வரமாட்டோம் என்ற கருத்து உலா வந்துகொண்டே இருந்தது. மற்றவர்களுக்கு விளம்பரம் செய்துவந்த நாங்கள் எங்கள் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்யும் பணியில் ஈடுபட்டோம். கல்வியில் சாதனைபுரிந்த மாணவச் செல்வங்களுக்கு கிங் விருது வழங்கும் விழாவை பிரம்மாண்டமாக நடத்தினோம். இதன்மூலம் ஒரே நேரத்தில் போட்டியாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு சேவை நிகழ்ச்சியால் வந்துட்டேனு சொல்லு எனக் கூறும் செயலை செய்து முடித்ததின் விளைவாக நாங்கள் வரலாறு காணாத வியாபார உச்சத்தை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் அடைந்தோம்.

அப்பொழுது நாங்கள் கையில் எடுத்த திட்டம் தான் செய்யும் தொழிலோடும் ஒன்றிய எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் சமூகவலைத்தளம். உடனே King 24 X 7 Web TVயை ஆரம்பித்தோம். அது 2G காலமென்பதால் பல போராட்டங்களுடன் எந்த முன்னேற்றமும் இல்லாமல் செலவுகள் மட்டும் நடந்துவந்தது. இருந்தும் 3G, 4G காலகட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை படித்து, கேட்டு, ஆராய்ந்து அதற்கான கட்டமைப்பை மேற்கொள்வது எங்கள் எண்ணமாக இருந்தது. King 24 X 7 Multi Form TV-யை Web, App, FB, Youtube, Twitter போன்றவற்றில் ஒருங்கிணைந்த முறையில் வழங்கும் மென்பொருள் பணியை செய்து முடித்தோம்.

எதிர்காலத்தில் வரவுள்ள 5G மற்றும் OTT சேவைகளை அறிந்து முதலிலிருந்தே HD தரத்தில் நிகழ்ச்சிகளை பதிவேற்றும் பணியில ஈடுபட்டதின் பலனாக அதிரடியாய் வந்த 4G இணைய புரட்சியால் இன்று 15 கோடி பார்வையாளர்களைக் கடந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு அயல்நாட்டு விளம்பர வருமானம் ரூ.60 லட்சத்தை பெறும் வகையில் வளர்ந்துள்ளோம்’’ என்று பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் கலையரசு.

‘‘இப்பொழுது ஊடக உலகில் தலைசிறந்த 25 தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பால் அடுத்தகட்ட நகர்வுக்கான வேலையைத் தொடங்கியுள்ளோம். அத்திட்டம் மூலம் எதிர்வரும் 5G காலத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக மாறவுள்ள OTT தொழில்நுட்ப வளர்ச்சியையும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து உள்ளூர் நிறுவனங்களைக் காப்பாற்றி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஊடக ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் இல்லத்தரசிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி, நிதிமேலாண்மை, மார்க்கெட்டிங் போன்ற பயிற்சிகளை வழங்க உள்ளோம். அவர்களுக்கு லாப பங்கீடு வழங்கி ஆன்லைன் தமிழனாக வெற்றிக் கொடி நாட்டுவது தான் எங்கள் நோக்கம்.

அன்று ரூ.30,000 நஷ்டத்தால் உருவான ஊடக தொழில் முயற்சி 20 ஆண்டுகால விடாமுயற்சியால் இன்று ரூ.60 லட்சம் அயல்நாட்டு ஊடக வருமானம் வரும் அளவில் உருவாகியுள்ளது. அரிசி மாவு (ஊடகம்) ஆட்டும் கலையை மட்டும் நன்கு வளர்த்துக்கொண்டால் போதும் இட்லி (Setup Box), தோசை(FB) மசால் தோசை (Youtube) பணியாரம் (Whatsapp) என் பார்வையாளர்கள் சுவைக்கேற்ப அளிப்பதன் மூலம் ஒரு பொருளை பன்முகபடுத்துவதால் கிடைக்கும் அபரிமிதமான பயன்களை ஒரே தொழிலில் பெறலாம். ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்க காத்திருக்கின்றோம்’’ என்கிறார் கலையரசு.


 - தோ.திருத்துவராஜ்