இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தடகள தங்க மங்கை!



செக் குடியரசின் நேவே மஸ்டோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேசத் தடகளப் போட்டியின் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றுள்ள ஹிமாதாஸுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. தொடர்ந்து 19 நாட்களில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் மொத்தம் 5 தங்கம் வென்று உலக அரங்கில் இந்தியாவின் திறமையைப் பறைசாற்றிவருகிறார்  ஹிமா தாஸ். 'திங் எக்ஸ்பிரஸ்' (Dhing Express) என்ற புனைபெயரில் அழைக்கப்படும் 19 வயதான ஹிமா தாஸுக்கு இந்த வெற்றிகள் சாதாரணமாகக் கிடைத்தவை அல்ல. ஹிமாதாஸின் வாழ்க்கை பெரும் போராட்டங்களாலும் தியாகங்களாலும் நிறைந்தது.



கல்வி, கலை, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதனைபுரிந்து வருகின்றனர். ஆனாலும் பெண்பிள்ளைகள் இன்ன இன்ன வேலைகளைத்தான் செய்யவேண்டும் என கூறும் மரபார்ந்த குக்கிராமங்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றன. அஸ்ஸாம் மாநிலத்தின் கந்துலிமரியும் (Kandhulimari) அவ்வகையான கிராமம்தான்.

அங்கு 2000ம் ஆண்டு பிறந்தார் ஹிமாதாஸ். அஸ்ஸாம் மாநிலத்தில் அதிக மின்சார தட்டுப்பாடு இருக்கும் கிராமங்களில் கந்துலிமரியும் ஒன்று. நாளொன்றுக்கு நான்கு அல்லது ஐந்து மணிநேரத்துக்குதான் மின்சாரமே இருக்கும். தற்போது வரையிலும் அதே நிலையே நீடிக்கிறது. அடிப்படை வசதிகள் கூட சீராகக் கிடைக்காத குக்கிராமத்திலும் இருக்கும் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே ஓடுவதில் அதிக ஆர்வமும், தனித்திறன் பெற்றிருந்தார் ஹிமா. சாலையில் கார்கள் செல்லும்போது அதை முந்தி ஓடிச் செல்ல முயற்சி செய்வார். பெரும்பாலும் சிறிய இடைவெளியில் தான் வெற்றி வாய்ப்பை இழப்பார் என ஹிமாவின் அண்டை வீட்டார் கூறுவதுண்டு. சீரான வேகத்தில் ஓடுவதில் திறன் பெற்றிருந்த ஹிமாதாஸுக்கு ஃபுட்பாலின் மேல் இயல்பாக ஆர்வம் வந்தது. கிராமத்தில் இளைஞர்கள் கால்பந்து ஆடிக்கொண்டிருக்கையில், தானும் விளையாடவருவதாக கூறியுள்ளார்.


பெண்களை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கூறிய இளைஞனிடம் சண்டை போட்டிருக்கிறார். சண்டை போட்ட இளைஞர் நண்பனாகி கால்பந்தாட்டத்தின் நுணுக்கங்களை ஹிமாதாஸுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அக்கம்பக்கத்துக் கிராமங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று கோல் அடிக்காமல் திரும்பமாட்டார். 100, 200 என பரிசுத்தொகை வென்று வருவார். அவ்வாறு அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றதுதான் அவர் வாழ்க்கையில் திருப்புமுனைத் தருணமாக அமைந்தது.

போட்டிகளில் ஹிமா தாஸின் திறமையைக் கண்ட பயிற்சியாளர் நிபுண்தாஸ் அவருடைய கிராமத்திற்குச் சென்று ஹிமாதாஸின் திறமையை பெற்றோருக்குக் கூறி, சிறந்த பயிற்சி அளித்தால் நிச்சயம் பெரிய ஆளாக வருவார் என கூறியுள்ளார். ஆனால், விவசாயத்தை நம்பியிருந்த குடும்பம் என்பதாலோ என்னவோ பொருளாதார வசதியற்ற நிலையில் தன் மகளை அவ்வளவு பணம் கொடுத்து நகரத்தில் பயிற்சி அளிக்க இயலாது என கூறியுள்ளனர். அதெல்லாம் தேவையில்லை என தன் சொந்தப் பணத்தில் ஹிமா தாஸுக்கு பயிற்சி அளித்தார் நிபுண் தாஸ்.

பெற்றோர் அமைதியாக இருந்தாலும் சமூகம் தன் கடமையை செய்தது. பெண் பிள்ளைகளை விளையாட அனுமதிப்பதே தவறு, அதிலும் வெளியூரில் விளையாட செல்ல ஊக்கப்படுத்துவது எவ்வளவு கொடுமையானது என பல விமர்சனங்களைக் கடந்துதான் இன்று பல தங்கப் பதக்கங்களை வென்று குவிக்கிறார் ஹிமாதாஸ்.

கடந்த ஜூலை இரண்டாம் தேதி போலந்தில் நடைபெற்ற Poznan Athletics Grand Prix போட்டியில் 200 மீட்டர் பிரிவில் கலந்துகொண்ட ஹிமாதாஸ் 23.65 நிமிடத்தில் ஓடி இவ்வாண்டு சர்வதேச போட்டியில் முதல் தங்கத்தை பதிவு செய்தார். இரண்டாவதாக, போலந்து நாட்டில், ஜூலை 7-ம் தேதி நடைபெற்ற மற்றொரு சர்வதேச தடகளப் போட்டியான Kutno Athletics Meet-ன் 200 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு தங்கம் வென்றார்.

தொடர்ந்து அதே ஜூலை மாதத்தில் செக் குடியரசில், 13-ம் தேதி நடைபெற்ற Kladno Athletics Meet-ன் 200 மீட்டர் பிரிவிலும், 17ம் தேதி நடைபெற்ற Tabor Athletics Meet-ன் 200 மீட்டர் பிரிவிலும் அவர் தங்கம் வென்றார். ஜூலை மாதத்தில் மட்டும் 4 தங்கப் பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், செக் குடியரசில் ஜூலை 20ம் தேதி நடைபெற்ற போட்டியின் 400 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு தனது 5-வது தங்கப்பதக்கத்தை வென்று சாதித்திருக்கிறார், ஹிமாதாஸ். பொருளாதாரம், விமர்சனங்கள் என பல்வேறு பிரச்னைகள் வந்தாலும் தொடர்ந்து முயன்று சாதனைகளைக் குவித்து வரும் ஹிமாதாஸுக்கு இந்திய அரசும் வேலை கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், 2020 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முன் வேலைக்கு செல்லமாட்டேன் என உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் கூறுகிறார் ஹிமாதாஸ்.