உணர்வுகளும்... சைகைகளும்!



* உடல்மொழி
*நடை உடை பாவனை 16



பிரான்சில் நடைபெற்ற கருத்தரங்கில், ‘‘நான் பொய் சொல்லும்போது, உள்ளங்கையைத் திறந்து காட்டி பேசினா, மக்கள் நான் சொல்றது உண்மைன்னு நம்புவாங்களா சார்?’’என்று ஒரு ஆசாமி கேட்க, சபையோர்கள் சிரித்துவிட்டார்கள். அப்போது உடல்மொழி வல்லுநர்கள், ‘‘இல்லை சார், நீங்க உள்ளங்கையை திறந்து வைச்சு, உணர்ந்து பொய் சொன்னீங்கன்னா, உங்க வாய்தான் பொய் சொல்லுமே தவிர, மற்ற அங்க அசைவுகள் அந்த பொய்க்கு ஏத்தமாதிரி இல்லாமப் போயிடும். அப்போ நீங்க சொல்றது உண்மைன்னு யாரும் நம்பமாட்டாங்க’’ என்றார்கள்.



‘‘அதே நேரம் அதையும் தெளிவா நம்புறமாதிரி சொன்னீங்கன்னா, ஏமாந்து போயி சிலர் நம்புவாங்க. ஆனா அதுக்கு ரொம்ப மெனக்கெடணும். அடுத்தவனை ஏமாத்த நினைக்கிறவங்க முதல்ல தங்களை ஏமாத்திக்க தெரிஞ்சுக்கணும்’’ என்றவர்கள், ‘‘சக மனுஷங்களோட பழகும்போது, உள்ளங்கையை மேல பார்த்த மாதிரி வைச்சுக்கப் பழகினா உண்மையான, நேர்மையான தோற்றத்தை என்னிக்கும் ஏற்படுத்திக்கலாம். இதுல இன்னொரு நன்மை என்னன்னா, அப்படியே பழகிட்டா, பொய் சொல்லணுங்கிற பழக்கம் குறைஞ்சிடும்’’ என்று தெளிவுபடுத்தினார்கள் உடல்மொழி வல்லுநர்கள்.

ஒருவர் மனம் திறந்து பேசும்போது, அவர் தன்னை அறியாமல் உள்ளங்கைகளை வெளிப்படுத்தவே செய்வார். அதே நேரம் உள்ளங்கைகளை மேல்புறமாக வெளிப்படுத்துவதாலேயே அவரால் பொய் சொல்ல முடியாமலும் போகும். உள்ளங்கைகளைத் திறந்தநிலையில் வைத்திருக்கும் ஒருவருக்கு உண்மை சரளமாக வருமே தவிர, பொய் சொல்ல வராது. காரணம், உணர்வுகளுக்கும் சைகைகளுக்கும் எப்போதும் நேரடியான தொடர்பு இருக்கவே செய்கிறது.

இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சக மனிதர்களுடன் பேசும்போது, கைகளை இறுக்கமாக மூடிக்கொள்ளாமல் உள்ளங்கை வெளிப்பட பேசினால், அடுத்தவரும் பொய்யான விஷயங்களை பேசாமல் மனம் திறந்து உண்மையை மட்டுமே பேசும் சூழலுக்கு தள்ளப்படுவார். உறவுகள் பலப்பட உடல் மொழி உதவும் இடம் இதுதான். உன் கையே உனக்கு உதவி, உள்ளங்கைகளில் நிறைந்திருக்கிறது உற்காகச் சக்தி என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கலாம். உடல் மொழியைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க நிஜம். மனிதர்கள் பேசும்போது மட்டுமல்ல பேசாமல் இருக்கும்போது கூட உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்துவது கைகள்தான். உடல்மொழியின் இயல்பாக இருக்கும் சைகைகளை நாம் அதிகம் கவனிப்பதில்லை என்பதுதான் நிஜம்.

புது மனிதர்கள் யாரிடமாவது ‘‘இப்படி நேரா போயி, அந்த புளிய மரம் பக்கத்துல இடதுகை பக்கமா திரும்புங்க’’ என்று வழி சொல்லும்போதோ, ‘‘அந்த புத்தகத்தை எடுத்து மேல வை’’ எனும்போதோ, ‘‘ஹலோ’’ என்று கைகுலுக்கும்போதோ உள்ளங்கைகள் ஒவ்வொவருக்கும் ஒரு அதிகார சக்தியாக இருக்கவே செய்கிறது. பொதுவாக உள்ளங்கைகள் கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கும்போது அவை மூன்றே மூன்று சைகைகளைத்தான் காட்டுகின்றன.

அது உள்ளங்கைகளின் மேல்நிலை, கீழ்நிலை, சுட்டுவிரல் நிலை (இதில் மற்ற நான்கு விரல்களை மூடிய நிலையிலிருக்கும்). மேலே சொன்ன உதாரணத்திலேயே ‘‘இப்படி நேரா போயி, அந்த புளிய மரம் பக்கத்துல இடதுகை பக்கமா திரும்புங்க’’ எனும்போது இனிய தெளிவான தொனியுடன், இயல்பான முகபாவத்துடன் வார்த்தைகளாகச் சொன்னாலும், உள்ளங்கைகள் மேலே பார்த்த நிலையில் இருந்தால்… அது கேட்பவருக்குப் பயமுறுத்தலில்லாத, பாதுகாப்பான கனிவான விஷயமாக இருக்கும். அதுவே கைகளில் நிலை மாறும்போது அர்த்தங்களும் புரிதல்களும் மாறிப்போகும்.

சொன்னால் புரியாத ஒரு வயது குழந்தையிடம் ‘‘இங்க வா’’ என்று சைகையாக அழைக்கும்போது, உள்ளங்கையை மேல் நோக்கியவாறு சொன்னால் அருகில் வரும் குழந்தை, உள்ளங்கையை கீழ் நோக்கியவாறு காட்டி அழைத்தால் வராது. அதுவே சுட்டுவிரல் நீட்டி அழைத்தால் வராததோடு அழுகவும் செய்யும். இதுதான் உடல் மொழி கொள்ளும் தொடர்பு. இது எல்லா வயதினருக்கும் பொருந்தும். உள்ளங்கை கீழ் நோக்கிவாறு காட்டும் எந்தச் சைகையும் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாகவே உலகம் எடுத்துக்கொள்கிறது. அதிகாரம் செலுத்தக்கூடிய பதவியிலிருந்து அவ்வாறு வெளிப்படுத்தினால் பொறுத்துக் கொள்வார்கள். அதுவே சமமான பதவியில் இருப்பவருடன் தொடர்பு கொள்ளும்போது உள்ளங்கை மேல் நோக்கியிருந்தால் முகத்தில் இறுக்கம் காட்டி வெறுப்பு மேலிட உறவு கசந்துபோகவே செய்யும்.

இயல்பாக பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளங்கைகளின் நிலை திருப்பியவுடனேயே அடுத்தவர் பார்க்கும் பார்வை மொத்தமாக மாறிவிடுகிறது என்பதையே உடல்மொழி வல்லுநர்கள் அடிக்கோடிட்டு குறிப்பிடுகிறார்கள். அதிகாரம் செலுத்தக்கூடிய நிலையிலிருக்கும்போது உள்ளங்கைகள் கீழ்நோக்கிய நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். அதுதான் அந்த நிலைக்கு சரியானது.

இதற்கு சிறந்த உதாரணம் அடால்ஃப் ஹிட்லர். ஹிட்லரின் நாஜிப் படையின் ‘கீழ் நோக்கிய உள்ளங்கை வணக்கம்’ உலக பிரசித்தி பெற்றது. அது அதிகாரத்திற்கும் கொடுங்கோலுக்கும் சின்னமாக கருதப்பட்டாலும், ஹிட்லரின் கீழ் நோக்கிய உள்ளங்கை சல்யூட்தான் அவருக்கு அதிகாரத்தையும், வல்லமையையும், தலைமையின் கம்பீரத்தையும் வழங்கியது. ஒருவேளை அவரின் உள்ளங்கை சல்யூட் கீழ்நோக்கி இருந்திருந்தால் இந்த உலகம் அவரைக் கண்டு பயந்திருக்காது. இன்றும் குறிப்பாக மதித்திருக்காது. - தொடரும்

உடை வழி - ஷூ (Shoe)-க்களின் பயணம்…

ஷூக்களை வைத்து புதுமை செய்து, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த முன்னோடி சார்லி சாப்ளின். அவர் நாடக நடிகராக இருந்த காலத்தில் பலரும் தன்னைக் கவனித்து ரசிக்க வேண்டும் என்று சற்றே பெரிய ஷூவை எடுத்து, வலது கால் ஷூவை இடது கால்களிலும், இடது கால் ஷூவை வலது கால்களிலும் அணிந்து மேடையில் தோன்றினார். அவரது உருவத்திற்கு அவர் அணிந்திருந்த ஷூ வித்தியாசமாக இருக்க, உலகம் அவரைக் கொண்டாடித் தீர்த்தது. இன்றளவும் சார்லி சாப்ளினை மக்கள் ரசிப்பதற்கு அவரது உருவத்திற்கு பொருத்தமில்லாத ஷுவும் ஒரு காரணம்.


மனித கால்கள் பல்வேறு விதமான சீதோஷ்ண நிலைக்கும், மாறுபட்ட நில வகைகளையும் சந்திக்கக்கூடியவையாக இருப்பதால் அவற்றிலிருந்து பாதுகாக்க ஷூக்கள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டன. கால் பாதங்களுக்கு ஷூவின் பயன்பாடு ஒரே விதமானதாக இருந்தபோதும், அதன் வெளிப்புற வடிவங்களில், Heels-களில், நிறங்களில் பல்வேறு வடிவ மாறுதல்களை சந்தித்த வண்ணமேயிருந்தது. பாதங்களுக்கு காற்றோட்டம் கிடைக்க வேண்டும், அதேநேரம் பாதுகாப்பான ஷுவாகவும் இருக்கவேண்டும் என்ற விதியோடு உருவாக்கப்பட்டதுதான் பின்புறம் strap கொண்ட Sandals வகை ஷூக்கள். இந்த வகை ஷூக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் ஏழை எளிய மக்களும் ஷூவை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
ஷூவின் பயன்பாடும், சந்தைப்படுத்துவதும் பெருகப் பெருக பணம் படைத்தவர்களை மகிழ்விப்பதற்காக ஷூக்களை கற்கள் பதிப்பது, தங்க இழைகளை நுழைப்பது போன்ற விலை உயர்ந்த பொருட்களால் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் ஷூவை அணியாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட, மனிதர்களின் தொழில் சார்ந்த பயன்பாட்டிற்கும் ஷூக்கள் தயாரிக்கப்பட்டன. விளையாட்டு வீரர்களுக்கு, கனரக இயந்திரங்களை இயக்குபவர்களுக்கு, சாலைப் பணியாளர்களுக்கு என்று விதவிதமான தொழில் சார்ந்த தன்மைக்கு ஏற்ப ஷூக்கள் ஸ்டீல் ஷூக்கள், ரப்பர் பூட்ஸ் தயாரிக்கப்பட்டன. ஆரம்ப காலங்களில் ஷூ மிருகங்களின் தோல்களாலும், கேன்வாஸ்களாலும் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ரப்பர், பிளாஸ்டிக், பெட்ரோ கெமிக்கல் பொருட்களாலும் தயாரிக்க ஆரம்பித்தார்கள். இந்த காலகட்டத்தில் ஷூ ஃபேஷன் உலகில் நுழைய அது பல்வேறு விதமான மாறுதல் வடிவங்களை சந்தித்தது.

13ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் Espadrille (இது ஒரு பிரெஞ்ச் வார்த்தை) என்ற பெயரில் ஒரு சாண்டல் வகை ஷூ தயாரித்தார்கள். வயல்களில் வேலை செய்யும் விவசாய மக்கள் தங்களின் தொழில் சார்ந்த பயன்பாட்டிற்காக Flat Foot கொண்ட, Lace வகை சார்ந்த ஷூவை தயாரித்தார்கள். இந்த ஷூ சற்று விசேஷமானது. காரணம், இன்றளவும் மக்கள் உபயோகிக்கும் ஷூக்களுக்கு நேரடி முன்னோடி இந்த ஷூதான் - ஷுக்களின் பயணம் தொடரும்...

ஸ்ரீனிவாஸ் பாபு