நுரையீரல் நோயைக் குணப்படுத்துகிறது டிரைக்ளோஸான்?! மருத்துவ வட்டாரத்தில் புதிய பரபரப்பு



சர்ச்சை

பல்வேறு ரசாயனக் கலவைகளால் உருவாகும் டூத் பேஸ்ட்டுகள் பற்றி எத்தனையோ புகார்களும், சர்ச்சைகளும் உண்டு. ஆனால், அவற்றுக்கெல்லாம் ஆறுதல் தரும் விதமாக புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியாகி இருக்கிறது. டூத் பேஸ்ட்டில் இருக்கும் Triclosan என்கிற வேதிப்பொருள் Cystic fibrosis என்கிற நுரையீரல் நோயை உண்டாக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் என்கிற மரபணு நோயானது 2500 முதல் 3500 நோயாளிகளில் ஒருவருக்கு ஆரம்ப கால வயதுகளில் ஏற்படும் அரிய வகை நோயாகும். இந்நோய் நுரையீரலில் அடர்த்தியான சளியை உண்டாக்குவதோடு, நோயினை உண்டாக்கும் Pseudomonas aeruginosa என்கிற பாக்டீரியாக்கள் ஒரு காந்தம் போன்று மாறுவதற்கும் வழி வகுக்கிறது.

இந்த பாக்டீரியாக்கள் தன்னைச் சுற்றிலும் ஒரு உயிர் மென்படலத்தை உருவாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்கிறது. வலுவான மேற்பரப்புடன் இணைந்திருக்கும் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிர்களின் ஒரு தொகுப்பைதான் இப்படி பயோஃபிலிம் என்று அழைக்கிறோம். இந்த பயோஃபிலிம் இருப்பதனால் நோயாளி குணமாவதற்கு ஆன்டிபயாடிக் சிகிச்சைகள் கொடுக்கும்போதுகூட சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் என்ற நோயின் தாக்கம் பக்கவிளைவாக ஏற்படுகிறது.  

இந்த பயோஃபிலிம் என்கிற உயிரியல் பொருட்களால் காது தொற்றுநோய்கள், பல் ஈறு வீக்கம் ஏற்பட்டு அதிக வலி உண்டாதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது. மேலும் அவை சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், இதய நோய், இதய வீக்கம் மற்றும் செயற்கை உடல் உறுப்புகள் பொருத்தும்போது ஏற்படும் நோய்த் தொற்றுகள் போன்ற மிகவும் தீவிரமான மற்றும் அபாயகரமான நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.

எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகப் பேராசிரியர் கிறிஸ் வாட்டர்ஸ், சக ஊழியர்களோடு இணைந்து ஆய்வினை மேற்கொண்டார்.

உணவுகளில் 6 ஆயிரம் உயிரிப்பூச்சிகளை வளர்த்து அதோடு Tobramycin என்கிற பொருளைச் சேர்த்து, அதில் எது பாக்டீரியாக்களைக் கொல்வதில் சிறப்பாக செயல்படுகிறது என்று பரிசோதனை மேற்கொண்டார். இதில் 25 கலவைகள் பயனுள்ளவையாக இருந்தது. அவற்றில் டூத் பேஸ்ட்டில் இருக்கும் டிரைக்ளோஸானும் அடங்கும்.

டிரைக்ளோஸானுடன் Tobramycin ஆன்டிபயாடிக் மருந்தை சேர்த்து பயன்படுத்தும்போது நுரையீரல் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் 99.9% வரை அழிகிறது என்று இறுதியாகக் கண்டுபிடித்தனர். சோப், ஒப்பனைப் பொருட்கள் மற்றும் பிற வணிகப் பொருட்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக Triclosan என்கிற ஆன்டிபாக்டீரியல் பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆன்டிபாக்டீரியல் பொருட்கள் உள்ள சோப்புகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை (Hand Sanitizers) அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி உறுதியான தகவல்கள் இல்லை.

ஆனால், டூத் பேஸ்ட்டானது பற்களில் பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்னைகளுக்கு எதிராக வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை ஆன்டிபாக்டீரியல் பொருளாக பயன்படுத்த ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், டிரைக்ளோஸானைப் பயன்படுத்துவதில் தடைகளும் இருக்க வாய்ப்பு இல்லை என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, டூத் பேஸ்ட்டில் இருக்கும் டிரைக்ளோஸான் பல்வேறு தீங்குகளை விளைவிக்கக் கூடியது என்று சர்ச்சைகள் நிலவிவரும் நிலையில், டிரைக்ளோஸானுக்கு ஆதரவாக வெளிவந்திருக்கும் ஆய்வு மருத்துவ வட்டாரங்களில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

- க.கதிரவன்