உயிர் காக்கும் உபகரணங்கள்



மெடிக்கல் ஷாப்பிங்

முதல் உதவிப் பெட்டிகள் முன்பு எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பிறகான காலமாற்றத்தில் சர்க்கரையை அளவிடும் க்ளுக்கோ மீட்டர், ரத்த அழுத்த மானி போன்றவை வீட்டுக்குள் வந்தன. இப்போது நாள்பட்ட நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் காரணத்தால் இன்னும் நவீன உபகரணங்களையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது. தொடர்சிகிச்சை மேற்கொள்கிறவர்களுக்கு இது அத்தியாவசியமான தேவையாகவும் இருக்கிறது.

கொஞ்ச நாட்களுக்கு மட்டும் போதும் என்று விரும்புகிறவர்களுக்கு மருத்துவப் பொருட்களை வாடகைக்கும் வாங்கிக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு காலம் மாறிவருகிறது. இதுபோன்ற மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்துவரும் பயோ மெடிக்கல் என்ஜீனியர் ஜாகீர் உசேனிடம் நவீன உபகரணங்கள் பற்றிய தகவல்களைக் கேட்டோம்...  

‘‘மருத்துவ உபகரணங்கள் வாங்குகிறவர்கள் முதலில் மருத்துவரின் பரிந்துரையைப் பெற்றுக் கொள்வது கட்டாயம். உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனமான FDA தரச்சான்றிதழ் பெற்றதா என்பதையும் கவனிக்க வேண்டும். சாதாரணமாக 5000 ரூபாய் முதல் 20,000 வரையிலான உபகரணங்களை நோயாளிகள் நேரடியாகவே விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அதையும் தாண்டி விலை மதிப்புமிக்க உபகரணங்கள் தேவைப்படும்போது வாங்க முடியாத சூழல் இருக்கும். அந்த மாதிரியான சூழலில், குறைந்த விலைக்கு மாத வாடகைக்கு தரும் நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நோயாளி மருத்துவனையில் இருக்கும்போது தீவிர சிகிச்சையில் இருப்பார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்போது அவர் சிகிச்சையை வீட்டிலிருந்து தொடர்வதற்கு மருத்துவர் ஆலோசனையின்படி சில மருத்துவ உபகரணம் தேவைப்படும். அந்த உபகரணத்தை வாங்கி வீட்டிலிருந்தே சிகிச்சையைத் தொடரலாம். இதன் மூலம் மருத்துவமனை செலவுகளைக் குறைக்க முடியும். இதுபோன்ற கருவிகளை தற்போது பயன்படுத்துபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் நிறைய உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவர் பரிந்துரையைப் போலவே, சில கருவிகளை நோயாளிக்கு பயன்படுத்தும்போது செவிலியர் தேவைப்படுவார். எனவே செவிலியரின் உதவி இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பொருட்களின் விற்பனையாளர்களும் இவற்றை சரி பார்த்த பிறகே வழங்க வேண்டும். மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தும்போது அதுபற்றி முழுமையாகப் புரிந்துகொண்டு, பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இந்தக் கருவிகள் மின்சாரம் மூலமும் பேட்டரி மூலமும் இயங்கக்கூடிய கருவிகள் ஆகும்’’ என்பவர் சில மருத்துவ உபகரணங்களையும், அதுபற்றிய விளக்கத்தையும் வழங்குகிறார்.

Wheel Chair

வீல் சேர் இரண்டு வகைகளில் இருக்கிறது. ஒன்று சாதாரணமான வீல் சேர், இன்னொன்று பேட்டரி மூலம் இயங்கும் வீல் சேர். பேட்டரியின் மூலம் இயங்கும் வீல் சேரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 15 கிலோ மீட்டர் வரை பயன்படுத்தலாம். தீவிர சிகிச்சை பெற்றவர்கள், நடக்க முடியாத முதியவர்கள், மருத்துவர் ஆலோசனையின் படி வாங்கி பயன்படுத்தலாம். சாதாரண வீல் சேர் ரூபாய் 5000-லிருந்து கிடைக்கிறது. பேட்டரி மூலம் இயங்கும் வீல் சேர் 50,000 முதல் 1,00,000 வரை கிடைக்கிறது.

CPAP /BIPAP

ஆஸ்துமா நோயாளி, நுரையீரல் பாதிக்கப்பட்டவர், தூங்கும்போது சுவாசிப்பதில் கோளாறு உள்ளவர்கள், குறட்டை விடும் பிரச்னை இருப்பவர்கள் ஆகியோர் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஆலோசனையின் படி இந்த சாதனத்தை வாங்கி பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு வெளியில் இருந்து ஆக்ஸிஜனை இழுத்து கொடுத்து நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.

நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல் கடினத்தன்மையுடன் இருப்பதால் நுரையீரலில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுவதில் சிரமம் இருக்கும். அதை வெளியேற்றுவதற்கான கருவிதான் BIPAP. CPAP -  கருவி ரூபாய் 35,000 முதல் 55,000 வரை கிடைக்கிறது. மாத வாடகை ரூபாய் 3000 வரை. BIPAP  கருவி ரூபாய் 45,000 முதல் ரூபாய் 90,000 வரையிலும் கிடைக்கும். வாடகைக்கு ரூபாய் 3000 முதல் ரூபாய் 7000 வரை கிடைக்கிறது.

Oxygenator

தீவிர சிகிச்சையில் இருக்கும் ஒரு நோயாளி சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்போது இந்த Oxygenator கருவியை பொறுத்தி அவருக்கு போதுமான ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. அவருடைய நுரையீரலை நன்றாக செயல்பட  வைப்பதற்கும் ஆக்சிஜனேட்டர் உதவுகிறது. இந்தக் கருவி அவருக்கு தேவையான ஆக்ஸிஜனை ஆட்டோமேட்டிக்காகவே உற்பத்தி செய்து நோயாளிக்கு வழங்குகிறது.

இந்தக்கருவி சராசரியாக 21 சதவீதத்திற்கும் மேல் 50 முதல் 60 வரை ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிக்கு இது பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல், சுவாசிப்பதில் கோளாறு இருப்பவர்கள் மற்றும் முதியவர்களுக்கு இது பயன்படுகிறது. விலை 35,000 முதல் 45,000 வரை. மாத வாடகை 3000 முதல்...  

Syringe pump Infusion Pump

நோயாளிக்கு இந்த மெஷினை பயன்படுத்தி ட்ரிப்ஸ் கொடுக்கலாம். நோயாளிக்கு தேவையான ட்ரிப்ஸ் கொடுத்த பிறகு மருந்து தீர்ந்துவிட்டால் அலாரம் கொடுக்கும். இது ட்ரிப் தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படும். இதில் இரண்டு வகை கருவி பயன்படுகிறது. Syringe pump நோயாளியின் தேவைக்கேற்ப நுட்பமாகவும் குறைந்த அளவிலும் ட்ரிப்ஸ் கொடுக்கிறது. Infusion Pump நோயாளியின் தேவைக்கேற்ப மருத்துவரின் பரிந்துரையின்படி ட்ராப் ட்ராப்பாக ட்ரிப்ஸ் கொடுக்கிறது. 30,000 முதல் 40,000 வரை கிடைக்கிறது. வாடகை என்றால் 3000 முதல் கிடைக்கும்.

மானிட்டர்

தீவிர சிகிச்சையில் நோயாளி இருக்கும்போது அவர் உடலில் ஆக்ஸிஜன், அளவு இசிஜி அளவு பிபி, பல்ஸ், உடல் வெப்பநிலை போன்ற ஐந்து அளவுகளை கணக்கிடுவதற்கு இந்த மானிட்டர் பயன்படுகிறது. இது படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளிக்கும், கோமா நிலையில் உள்ள நோயாளிக்கும் மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் இருக்கும்போது இந்தக் கருவி பயன்படுத்தலாம். இதன் விலை 35,000 முதல்  1,00,000 வரை ஆகும். வாடகைக்கு 3,000 முதல் 4,500 வரை.

Ventilator

நுரையீரல் பாதிப்பு, கேன்சர், இதய நோயாளி, கோமா நிலையில் உள்ள நோயாளிக்கு சுவாசிப்பதற்கான செயலை எளிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை தருகிறது. இது நோயாளியின் தன்மைக்கேற்ப மருத்துவரின் பரிந்துரைப்படி வீட்டில் வைத்து பராமரிக்கும் நோயாளிக்கு ஒரு செவிலியர் உதவியோடு இந்தக் கருவி நோயாளிக்கு பொருத்தப்படுகிறது. இது தற்காலிகமாகவோ அல்லது நீண்ட நாட்களுக்கோ நோயாளிக்கு பயன்படும். இதன் விலை 5 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலும் இருக்கிறது. இது ஒரு நாள் வாடகை ரூபாய் 1500 முதல் 2500 வரை ஆகும்.

மருத்துவ படுக்கை

எலும்பு முறிவு நோயாளி, இதயம், புற்றுநோயாளி, மூளை சம்பந்தப்பட்ட நோயாளி, கோமா நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்படி இந்தப் படுக்கை மேனுவலாகவும், ஆட்டோமெட்டிக்காவும் இருக்கிறது. இதனால் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிக்கு எழுந்திருக்கவும் சிகிச்சை, மருந்து மற்றும் உணவு எடுத்துக் கொள்வற்கு வசதியாக இருக்கும். சாதாரணமாக உள்ள இந்தப் படுக்கை ரூபாய் 7,000 முதல் ஆட்டோமெட்டிக் பெட் ரூபாய் 1,50,000 வரை கிடைக்கிறது.

- க.இளஞ்சேரன்
புகைப்படங்கள் : ஏ.அருண்